You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவை புரட்டிப் போடும் 'வெடிகுண்டு சூறாவளி' என்றால் என்ன?
கடுமையான பனிப்புயல் ஒன்று அமெரிக்காவையும் கனடாவையும் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.
இதனால் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள பஃபல்லோ நகரம் முழுமையாக பனியால் மூடப்பட்டுள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த பகுதியே பனியால் நிரம்பியுள்ளது.
கனடா முதல் மெக்சிகோ எல்லை வரையிலும் நீடிக்கும் பனிப்புயலுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 28 பேர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மெரிட் நகரில் பனிபடர்ந்த சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
பஃபல்லோ நகரை பனி மூடியதால் கடுங்குளிரில் உறைந்து இறந்து போனவர்கள் அதிகம். சிலர் கார்களில் இருந்தபடியே உயிரிழந்துள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த பனிப்புயலை பாம்ப் சைக்லோன் அதாவது வெடிகுண்டு சூறாவளி என நிபுணர்கள் அழைக்கின்றனர். இந்த வெடிகுண்டு சூறாவளி என்றால் என்ன அதன் பெயர் காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பாம்ப் சைக்லோன் அல்லது ‘வெடிகுண்டு சூறாவளி’ என்றால் என்ன?
காற்றழுத்தத்தின் மையப் பகுதி, 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 24 மில்லிபார்களாகக் குறைந்து வேகமாகத் தீவிரம் அடைவதாகத் தோன்றினால் அதை வானிலை ஆய்வாளர்கள் 'வெடிகுண்டு சூறாவளி' என அழைக்கிறார்கள்.
இந்த சூறாவளியின் வெடிக்கும் சக்தி காற்றழுத்தத்தின் வேகமான வீழ்ச்சியால் ஏற்படுவதால் இதை வெடிகுண்டு என அவர்கள் அழைக்கிறார்கள்.
புயல், பனிப்புயல் முதல் கடுமையான இடியுடன் கூடிய கன மழையையும் இந்த சூறவாளி ஏற்படுத்தக் கூடியது.
இந்த புயல் காற்று ஒரு மரத்தை சாய்க்கும் அளவிற்கு வலுவானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் ஆற்றலையும் கொண்டதாக இருக்கும்.
இந்த வகை சூறாவளிகள், அமெரிக்கா மற்றும் கனடாவின் கிழக்கு கடலோர பகுதிகளில் மிகவும் பொதுவானவை. அங்குள்ள குளுமையான நீரோட்டமும் வளைகுடா வெப்ப நீரோட்டமும் வெடிகுண்டு சூறாவளி உருவாவதற்கான உகந்த சூழலை வழங்குகின்றன.
குளிர் நமது உடலிற்கு என்ன செய்யும்?
நமது உடல் குளிர்ச்சியாக உணர்ந்தால் என்ன செய்யும் தெரியுமா? இயல்பாக நமது உடலில் பல எதிர்ப்பு அம்சங்கள் உள்ளன. எனவே உடல் குளிரை உணர்ந்தவுடன், நமது உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நமது தசைகள் நடுங்க தொடங்கும். பற்கள் கிடுகிடுக்கும். நமது உடலில் உள்ள முடி எழும்பி நிற்கும். அதாவது நமது முன்னோர்கள் காலத்தில் நமது உடலில் அதிக முடி இருந்த சமயத்தில் இது ஒரு எதிர்ப்பு நிலையாக இருந்தது. அதுவே இப்போது வரை தொடர்கிறது.
நமது மூளையில் 'ஹைப்போதாலமஸ்' என்ற சுரப்பி ஒரு தெர்மோஸ்டாட்டை போல செயல்படுகிறது. அதாவது தேவையான சமயத்தில் வெப்பத்தை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்கிறது. குளிருக்கு ஏற்றாற்போல ஒரு இடம் கிடைக்கும் வரை உங்கள் முக்கிய உடல் உறுப்புகள் வெப்பமாக உணர இந்த மாதிரியான எதிர்வினைகளை தூண்டும் ஒரு சுரப்பியாக அது செயல்படுகிறது.
இது பொதுவாக நமது உடல் குளிர்ச்சியாக உணரும்போது ஏற்படும் நிலையாகும்.
ஆனால் தற்போது வீசிவரும் சக்தி வாய்ந்த புயல் காற்று வீடுகள், சாலைகளை சேதமடைய செய்வதுடன் ஃப்ரோஸ்ட்பைட் (frostbite) என்று சொல்லக்கூடிய அதீத குளிரால் உடல் உறைந்து போகும் நிலையையும் ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை பாதித்த உறைபனி
இந்த பனிப்புயலால் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இது கிறித்துமஸ் நேரம் என்பதால் பலர் தங்கள் குடும்பங்களுடன் கொண்டாட்டத்தை மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த பனிப்புயலால் அது பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் வருடத்தின் இந்த காலப்பகுதியில் விடுமுறை காலப் பயணங்களை மக்கள் அதிகமாக மேற்கொள்வர்.
அதுமட்டுமல்லாமல் சாலைகளிலும் ஆங்காங்கே பனி படர்ந்துள்ளதால் சிறு பயணங்களையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை விபத்துக்களும் ஏற்பட்டும் வருகின்றன. அமெரிக்காவில் மாகாணங்களை இணைக்கும் சாலைகள் பல மூடப்பட்டுள்ளன.
அடுத்த சில தினங்களில் குளிர் சற்று குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் சில பகுதிகளில் -45 டிகிரி செல்சியஸ் அல்லது -50 டிகிரி செல்சியஸ் வரை குளிரின் அளவு பதிவாகும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்