You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண் காவலர் கல்லூரி மாணவியாக நடித்து ராகிங் விஷமிகளை பிடித்தது எப்படி?
- எழுதியவர், சமீர் கான்
- பதவி, இந்தூரில் இருந்து பிபிசி இந்திக்காக
கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ஜூனியர் ஒருவரை மொட்டை அடித்து, அடித்து துன்புறுத்தி ராகிங் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவர் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக பீளமேடு போலீசார் ஏழு மாணவர்களைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ராகிங் தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன. இதே போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்ததையொட்டி, மத்திய பிரதேசத்தில் பெண் காவலர் ஒருவர் கல்லூரி மாணவியைப் போல் நடித்து ராகிங் செய்த விஷமிகளை கையும் களவுமாகப் பிடித்தார். சினிமா பாணியில் அவர் இதை எப்படி சாதித்தார்?
கடந்த 2008ஆம் ஆண்டில் நடிகர் அஜித் குமார் ஏகன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் சிபி-சிஐடி காவல் அதிகாரியான சிவா(அஜித்குமார்) ஒரு கும்பலை பிடிக்க கல்லூரி மாணவர் போர்வையில் கல்லூரியிலேயே சேர்வார். அவருக்கு கல்லூரி முதல்வர் ஜெயராம் உதவுவார். அத்தகைய ஓர் சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. ஆனால், இங்கே கல்லூரி மாணவியாக நடித்திருப்பவர் ஒரு பெண் காவலர்.
இந்த விஷயம் வெளியே வந்தபோது, மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரின் எல்லா இடங்களிலும் பெண் காவலர் ஷாலினி செளஹான் பற்றியே பரபரப்பாகப் பேசப்பட்டது. ராகிங் விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பொருட்டு அவர் கடந்த ஆண்டில் மூன்று மாதங்களுக்கு மருத்துவக் கல்லூரிக்கு மாணவி போலச் சென்று ஆதாரங்களைச் சேகரித்து வந்தார்.
இந்த முழு விஷயமும் கேட்பதற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் இந்தூரில் உள்ள சன்யோகிதாகஞ்ச் காவல் நிலையத்தைச் சேர்ந்த 24 வயது காவலர் ஷாலினி செளஹான் இதை நடத்திக் காட்டியுள்ளார்.
இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் மூத்த மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்வது பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஆனால் பாதிக்கப்பட்ட எந்த மாணவர்களும் இந்த விவகாரம் குறித்து புகார் அளிக்க முன்வரவில்லை.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் புதுடெல்லியில் உள்ள ராகிங் தடுப்பு உதவி எண்ணுக்கு, கல்லூரி வளாகத்தில் ராகிங் நடப்பதாக ஜூலை மாதம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், சன்யோகிதாகஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு காவல்நிலையப் பொறுப்பாளர் தெஹ்சீப் காஜி வழக்கு விசாரணையைத் தொடங்கினார்.
"எவ்வளவு முயற்சி செய்த போதிலும் எங்களிடம் புகார் கொடுக்க யாரும் முன்வரவில்லை, எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. நாங்கள் விஷயத்தை முடிக்க நினைத்தோம். ஆனால் சமூகத்தில் நிலவும் ராகிங் போன்ற மோசமான நடைமுறையைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டோம். ஆகவே மிகவும் பழைய முறை ஒன்றை நாங்கள் பின்பற்றினோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சக மாணவர்களுடன் நட்பு
காஜி தனது குழுவின் இளைய உறுப்பினரான ஷாலினி சௌஹானிடஸ கல்லூரி வளாகத்திற்குச் சென்று மாணவர்களுடன் கலந்து பழகி ஆதாரங்களைச் சேகரிக்கச் சொன்னார். இதற்குப் பிறகு, செப்டம்பர் முதல் டிசம்பர் வரை ஷாலினி மற்ற இளம்பெண்களைப் போலவே கல்லூரிக்குச் சென்று வந்தார். கல்லூரியில் அவர் வகுப்புகளுக்குச் செல்லாமல் கேன்டீனில் தன் நேரத்தைச் செலவிட்டு வந்தார்.
"என் உண்மை அடையாளம் வெளிப்பட்டு, வேலையின் முதல் ஆபரேஷன் தோல்வியடைந்துவிடுமோ என்ற பயம் மனதில் இருந்தது. ஆனால் சிவில் உடையில், நான் ஒரு மாணவி போல கல்லூரிக்குத் தொடர்ந்து சென்று வந்தேன்,” என்று ஷாலினி செளஹான் பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்தார்.
”நான் கல்லூரி கேன்டீனில் அமர்ந்து அங்கு வரும் மாணவர்களுடன் பேசுவேன். கலந்து பழகி ராகிங் செய்பவர்கள் யார், பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்தேன்”.
உரையாடலின் போது ஒரு மாணவர் ஏதேனும் சந்தேகத்தை வெளிப்படுத்தினால் ஷாலினி வேறு விஷயம் பற்றி பேச்சைத் திருப்பிவிடுவார். இருப்பினும் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் எந்த வகுப்பிற்கும் செல்லவில்லை. யாராவது கேட்டால் தான் வகுப்புகளை பங்க் செய்வதாகச் சொல்லிவிடுவார்.
“சிறிது நாட்களிலேயே நான் பல மாணவ, மாணவிகளுடன் பேச ஆரம்பித்தேன். அவர்களிடம் நட்பு ஏற்பட்டது. ராகிங் தொடர்பான தகவல்களை அவர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். அதை நான் காவல்நிலையத்தில் உள்ள தெஹ்சீப் சாரிடம் சொல்லுவேன்,” என்று ஷாலினி குறிப்பிட்டார்.
மூன்று மாதங்கள் வரை ஷாலினி செளஹான் ராகிங் செய்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து வந்தார். இதன்போது பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
“ராகிங் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரிந்ததும், ராகிங் செய்யும் மாணவர்களுக்கு தண்டனை கிடைக்கும் விதமாக அவர்களை போலீஸிடம் எப்படி வாக்குமூலம் கொடுக்க வைப்பது என்பது எங்களுக்கு முன் இருந்த பெரிய சவாலாக இருந்தது.
அந்த மாணவர்களுக்கு நாங்கள் அறிவுரை வழங்கினோம். அதன் பின்னர் அவர்கள் 161வது பிரிவின் கீழ் தங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்," என்று சன்யோகிதாகஞ்ச் காவல் நிலையப் பொறுப்பாளர் தெஹ்சீப் கூறினார்.
ஷாலினி செளஹானை பார்த்தால், அவர் இந்த ஆபரேஷனை அண்டர்கவர் ஸ்டைலில் செய்து முடித்திருக்கிறார் என்று நினைத்துப் பார்ப்பது கடினமாக இருக்கும். காவல் துறையில் இவருக்கு சில வருடங்கள் அனுபவமே உள்ளது. தந்தையின் மரணத்திற்குப் பிறகு கருணை அடிப்படையில் காவல்துறையில் சேர்ந்த ஷாலினி பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
காவலர் அடைந்த மகிழ்ச்சி
தான் போலீஸில் வேலை செய்வதன் காரணமாக இந்த விவகாரம் தவிர வேறு எது பற்றியும் பேச அவர் அவ்வளவாக விருப்பம் காட்டவில்லை. ஆனால் இந்தப் பணியின் போது நிறைய வண்ணமயமான ஆடைகளை அணிந்ததாகவும், பழைய கல்லூரி நாட்கள் நினைவிற்கு வந்ததாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் ஷாலினி தெரிவித்தார்.
ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில், ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்தது தொடர்பாக 11 மூத்த மாணவர்களை சன்யோகிதகஞ்ச் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.
"இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விடுதிகளில் தங்கும் மாணவர்களை நாங்கள் கண்காணிக்கிறோம். ஆனால் வளாகத்திற்கு வெளியில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் வாடகை வீட்டில் வசிக்கும் மாணவர்கள் கண்காணிக்கப்படுவதில்லை. அதனால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது,” என்று மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியின் டீன் சஞ்சய் தீட்சித் கூறினார்.
ராகிங்கில் இருந்து விலகி இருக்குமாறு கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சஞ்சய் தீட்சித் குறிப்பிட்டார்.
"இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடப்பது பற்றி எனக்குத் தெரியும், ஆனால் பெண் காவலர் மாணவியாக வளாகத்திற்கு வருவது எனக்குத் தெரியாது," என்று அவர் மேலும் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்