'காந்தியின் உண்மையான முகம் மகாத்மா அல்ல' – பிபிசி பேட்டியில் அம்பேத்கர் கூறியது என்ன?
1955-ல் அம்பேத்கர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் காந்தியை பற்றி விரிவாக பேசினார்.
"நான் காந்தியை எதிர்ப்பவராக இருந்ததால், மற்றவர்களைவிட அவரை நன்கு அறிவேன் என்ற உணர்வு எனக்குள் இருக்கிறது. ஏனெனில், அவர் தனது உண்மையான ரூபத்தை என்னிடம் வெளிப்படுத்தி இருக்கிறார்" என்றார் அம்பேத்கர்.
"காந்தி தன்னை மகாத்மாவாக காட்டிக் கொண்டார். அவரின் தொண்டர்களாக இருப்பவர்கள் அந்த வெளிப்புற தோற்றத்தை தவிர எதையும் பார்க்கவில்லை. ஆனால் நான் அவரை வெறும் மனிதனாக பார்த்தேன்" என்று குறிப்பிட்ட அம்பேத்கர், பிபிசி பேட்டியில் பேசிய விவரம் என்ன என்பதை பார்க்கலாம்.
கேள்வி - காந்தி அடிப்படை அம்சத்தை மாற்றியதாக நீங்கள் உணரவில்லையா?
பதில்: இல்லவே இல்லை, உண்மையில் அவர் எப்போதும் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருந்தார். அவர் இரண்டு பத்திரிகைகளை நடத்தினார். ஒன்று ஆங்கிலத்தில், ஹரிஜன். அதற்கு முன் யங் இந்தியா. குஜராத்தில், தீன் பந்து அல்லது அது போன்ற ஒரு பத்திரிகையை நடத்தினார். நீங்கள் இரண்டு பத்திரிகைகளையும் படித்தால், திரு. காந்தி மக்களை எப்படி ஏமாற்றுகிறார் என்பதை நீங்கள் பார்க்கலாம். ஆங்கில பத்திரிகையில் சாதி அமைப்பு மற்றும் தீண்டாமைக்கு எதிரானவர் என்றும், ஒரு ஜனநாயகவாதி என்றும் அவர் தன்னைக் காட்டிக் கொண்டார். ஆனால் நீங்கள் குஜராத்தி பத்திரிகையை படித்தால், நீங்கள் அவரை மிகவும் பழமைவாய்ந்த மனிதராக பார்க்கலாம். அவர் சாதி அமைப்பு, வர்ணாஸ்ரம தர்மம் மற்றும் இந்தியாவை காலங்காலமாகத் தாழ்த்தி வைத்திருக்கும் அனைத்து மரபுவழி கோட்பாடுகளையும் ஆதரித்து வருகிறார்.
உண்மையில், காந்தி தனது ஹரிஜனில் கூறிய கருத்துகளையும், குஜராத்தி பத்திரிகையில் கூறிய கருத்துகளையும் ஒப்பிட்டு பார்த்து காந்தியின் வாழ்க்கை வரலாற்றை யாராவது எழுத வேண்டும். காந்தி ஜனநாயகக் கொள்கைகளை ஆதரித்து வந்த ஆங்கில பத்திரிகையை மட்டுமே மேற்கத்திய உலகம் படிக்கிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட மேற்கத்திய மக்களின் மனதில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள அப்படி காட்டிக் கொண்டார். ஆனால் அவர் தனது உள்ளூர் மொழி பத்திரிகையில் மக்களுக்கு உண்மையில் என்ன கற்பித்தார் என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும். அவரைப் பற்றி எழுதப்பட்ட அனைத்து வாழ்க்கை வரலாறுகளும் அவரது ஹரிஜன் மற்றும் யங் இந்தியாவை அடிப்படையாகக் கொண்டவை. அவை குஜராத்தி பத்திரிகை எழுத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
இரண்டாயிரம் ஆண்டுகளாக தீண்டாமையை கடைபிடித்து வருகிறோம். யாரும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ஆம், சில தீண்டாமை மிக கொடுமையானது. உதாரணமாக, மக்களால் தண்ணீர் எடுக்க முடியாது, மக்களுக்கு விவசாயம் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்ட நிலம் இல்லை. ஆனால் இவற்றைவிட முக்கியமானவையும் உள்ளன. நாட்டில் சம அந்தஸ்து இருக்க வேண்டும், உயர் பதவிகளை வகிக்க வாய்ப்பு இருக்க வேண்டும். இதனால் அவர்களின் கண்ணியம் உயரும் என்பதோடு, தங்கள் சொந்த மக்களைப் பாதுகாக்கக்கூடிய பதவிகளையும் பெற முடியும். காந்தி இதை முற்றிலும் எதிர்த்தார். முற்றிலும் எதிர்த்தார்.
கேள்வி - அவர் கோயில் நுழைவு போன்ற விஷயங்களில் திருப்தி அடைந்தாரோ?
பதில்: கோயில் நுழைவு, அவர் செய்ய விரும்பியதெல்லாம் அதுதான். தற்போது இந்து கோயில்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. தீண்டத்தகாதவர் என ஒடுக்கப்பட்டவர்கள் கோயிலுக்குச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்ற உண்மையை உணர்ந்திருக்கிறார்கள். நீங்கள் கோவிலுக்குள் சென்றாலும் சரி, கோவிலுக்குள் செல்லாவிட்டாலும் சரி, நீங்கள் அதே ஒடுக்கப்பட்ட குடியிருப்புகளில் வாழ்கிறீர்கள். அசுத்தம் என கூறி, ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டோரை ரயில்களில் பயணிக்க அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், தற்போது அவர்கள் கவலைப்படுவதில்லை, ரயில்வேயால் தனித்தானியாக ஏற்பாடுகள் செய்ய முடியாது.
ஆனால் அவர்கள் இன்று ரயிலில் ஒன்றாக பயணிப்பதால் மட்டும் கிராமத்தில் இந்துக்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் வாழ்க்கை எந்த வகையிலும் மாறாது. ரயிலில் இந்து மற்றும் தீண்டாமைக்கு உள்ளாக்கப்படுவோர் ஒன்றாக பயணிக்கும் போது இருவரும் தங்கள் பழைய மனநிலைக்கே செல்கிறார்கள்.
விரிவான தகவல் காணொளியில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



