ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால் ரூ.5.8 கோடியை இழந்த பெண் - என்ன நடந்தது?

    • எழுதியவர், நிகில் இனாம்தார், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ்

அஞ்சலியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்ததால் ரூ.5.8 கோடி விலை கொடுத்துள்ளார்.

தொலைபேசியில் அழைத்தவர் தான் ஒரு கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார். அஞ்சலி பெய்ஜிங்கிற்கு அனுப்பிய போதைப்பொருள் பார்சலை மும்பை சுங்கத்துறை பறிமுதல் செய்ததாக அவர் அஞ்சலியிடம் கூறினார்.

இந்திய தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியான குருகிராமில் வசிக்கும் அஞ்சலி, "டிஜிட்டல் கைது" மோசடிக்கு இரையானவர்களில் ஒருவர்.

மோசடி செய்பவர்கள் வீடியோ அழைப்புகளில் சட்ட அமலாக்க அதிகாரிகளாக வேடமிட்டு, அவர் கீழ்ப்படியாவிட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அவரது மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சுறுத்தினர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்து நாட்கள் அவர்கள் அஞ்சலியை ஸ்கைப்பில் 24 மணி நேர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தனர். அவரை மிரட்டி பயமுறுத்தினர், அவரது சேமிப்பு கணக்குகளிலிருந்து பணத்தை வேறு வங்கிக் கணக்குகளில் மாற்றவும் வற்புறுத்தினர்.

"அதன் பிறகு, என் மூளை வேலை செய்யவில்லை. என் மனம் நொறுங்கிப் போனது" என்கிறார் அவர்.

அழைப்புகள் வருவது நின்றது, ஆனால் அதற்குள் அஞ்சலி உடைந்து போனார் - அவரது நம்பிக்கை சிதைந்தது .

இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சலியைப் போன்று நிறைய பேர் உள்ளனர்.

"டிஜிட்டல் கைதுகளால்" இந்தியர்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்ததாக அரசாங்க தகவல்கள் காட்டுகின்றன, 2022 மற்றும் 2024 க்கு இடையில் பதிவான வழக்குகள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து, 1,23,00 வழக்குகள் பதிவாகியிருந்தன.

இந்த மோசடி மிகவும் பரவலாக நடந்து வருகிறது. அரசு முழு பக்க விளம்பரங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி பிரசாரங்களை செய்து வருகிறது. பிரதமரும் கூட எச்சரிக்கை விடுத்துள்ளார். மோசடியுடன் தொடர்புடைய கிட்டத்தட்ட 4,000 ஸ்கைப் ஐடிகள் மற்றும் 83,000 க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அஞ்சலி கடந்த ஒரு வருடமாக காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் மாறி மாறி அலைந்து வருகிறார். இழந்த தனது பணத்தை தேடி, பிரதமர் உட்பட அதிகாரிகளிடம் உதவி கோரி மனு அளித்தார்.

அதிகரித்து வரும் மோசடிகள், பலவீனமான வங்கி பாதுகாப்புகள் மற்றும் மோசமான பண மீட்பு ஆகியவை டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகளில் உள்ள ஒழுங்குமுறை இடைவெளிகளை அம்பலப்படுத்துகின்றன. இதில் அனைத்து வர்க்க மக்களும் சிக்கிக் கொள்வதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

அஞ்சலி தனது பணத்தை மீட்க முயன்ற போது, இந்தியாவின் முன்னணி வங்கிகளின் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள பாதுகாப்பு குறைகள் அம்பலமாகின என்று அவர் கூறுகிறார்.

செப்டம்பர் 4, 2024 அன்று இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்குநரான தனது எச்.டி.எஃப்.சி வங்கிக் கிளைக்கு விரைந்ததாகவும், மோசடி செய்பவர்களின் வீடியோ கண்காணிப்பின் கீழ் பீதியடைந்ததாகவும், ஒரு நாள் 2.8 கோடி ரூபாயையும் அடுத்த நாள் மேலும் 3 கோடி ரூபாயையும் தனது வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பியதாக அஞ்சலி பிபிசியிடம் தெரிவித்தார்.

அவர் அப்படி அனுப்பிய தொகைகள் அவரது வழக்கமாக பரிமாற்றம் செய்யும் தொகைகளை விட 200 மடங்கு அதிகமாக இருந்தபோதிலும், வங்கிக்கு அது ஒரு எச்சரிக்கை மணியாக தெரியவில்லை, அசாதாரண பரிவர்த்தனைகள் ஏன் நடந்தன என்று வங்கி கவனிக்க தவறிவிட்டது என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

பிரீமியம் கணக்கு வைத்திருக்கும் தனக்கு தனது வங்கி உறவு மேலாளரிடமிருந்து ஏன் அழைப்பு வரவில்லை என்றும், இவ்வளவு பெரிய பரிவர்த்தனையை வங்கி ஏன் கவனிக்க தவறியது என்றும் அவர் ஆச்சரியப்படுகிறார்.

"மூன்று நாட்களுக்குள் நான் செய்த பரிமாற்றங்களின் தொகை சந்தேகத்தை எழுப்பவும், குற்றத்தைத் தடுக்கவும் கூட போதுமானதாக இருந்திருக்க வேண்டாமா? கிரெடிட் கார்டு மூலம் 50,000 ரூபாய் செலவழித்தால் சரிபார்ப்பு அழைப்புகள் வரலாம் என்றால், சேமிப்புக் கணக்குகளில் இருந்து ஏன் பல கோடி பண பரிமாற்றம் செய்யும் போது அதை சரிபார்க்கக் கூடாது" என்று அஞ்சலி கேட்கிறார்.

அஞ்சலிக்கு அனுப்பிய மின்னஞ்சலில், எச்.டி.எஃப்.சி வங்கி தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை "ஆதாரமற்றது" என்றும், மோசடி சம்பவம் இரண்டு-மூன்று நாட்கள் தாமதத்திற்குப் பிறகு வங்கிக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அவரது அறிவுறுத்தலின் பேரில் பரிவர்த்தனைகள் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டன, எனவே வங்கி அதிகாரிகளை இதில் குற்றம் சொல்ல முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எச்.டி.எஃப்.சிக்கு எதிரான அஞ்சலியின் புகாரை இந்தியாவின் வங்கி குறைதீர்ப்பாளர் 2017 விதியை மேற்கோள் காட்டி முடித்து வைத்து விட்டார். அஞ்சலி போன்ற வாடிக்கையாளர்கள் மோசடி செய்ததாக கருதினால் முழு இழப்பையும் தாங்களே ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டது.

பிபிசியின் கேள்விகளுக்கு எச்டிஎஃப்சி வங்கி பதிலளிக்கவில்லை.

நாங்கள் அஞ்சலியைச் சந்தித்தபோது, அவரது பணம் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு எவ்வாறு சென்றது என்பது குறித்து அவர் தொகுத்த ஒரு பெரிய விளக்கப்படத்தை எங்களிடம் காட்டினார்.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்குநர்களில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கியில் "திரு பியூஷ்" என்ற நபர் வைத்திருக்கும் கணக்கிற்கு எச்.டி.எஃப்.சி.யிலிருந்து பணம் முதலில் சென்றது என்று அது காட்டியது.

பணப் பரிமாற்றம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த பரிவர்த்தனைக்கு முன்பாக, பியுஷின் கணக்கில் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே இருப்பு இருந்தது தெரியவந்தது.

"இதுபோன்று திடீரென பெரிய அளவில் தொகைகள் வங்கிக் கணக்கில் வரும் போது எந்தவொரு வங்கியின் பணமோசடி எதிர்ப்பு கடமைகளின் கீழ் தானியங்கி பரிவர்த்தனை கண்காணிப்பு அமைப்புகளைத் தூண்டியிருக்க வேண்டும்" என்று அஞ்சலி கேள்வி எழுப்புகிறார்.

பியூஷின் கணக்கிலிருந்து பணத்தை தற்காலிகமாக முடக்காமல் அல்லது உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) சரிபார்ப்பு செய்யாமல் வங்கி எவ்வாறு பணத்தை விரைவாக வேறு கணக்குக்கு அனுப்ப அனுமதித்தது என்றும் அவர் ஆச்சரியப்படுகிறார்.

பியுஷ் கைது செய்யப்பட்டு சிறிது காலத்திலேயே பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மீது ஐ.சி.ஐ.சி.ஐ புகார் அளித்துள்ள நிலையில், கணக்கை முடக்குவதில் ஏற்பட்ட தாமதம் தனக்கு மிகுந்த இழப்பை ஏற்படுத்தியதாக அஞ்சலி கூறுகிறார்.

பிபிசிக்கு அளித்த அறிக்கையில், ஐசிஐசிஐ கணக்கைத் திறக்கும்போது "உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்" என்று பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியதாகவும், சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள் நடைபெறும் வரை சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் எதுவும் பியூஷின் கணக்கில் நடத்தப்படவில்லை என்றும் கூறியது. "வங்கி அதன் கடமைகளில் தவறியது என்ற எந்தவொரு குற்றச்சாட்டும் முற்றிலும் ஆதாரமற்றது" என்று அது கூறியது.

அஞ்சலியின் புகாரைத் தொடர்ந்து உடனடியாக கணக்கை முடக்கியதாகவும், அஞ்சலி போலீஸ் வழக்கைப் பதிவு செய்யவும், போலி கணக்கு வைத்திருப்பவரைக் கண்டுபிடிக்கவும் உதவியதாகவும் வங்கி கூறியது.

பியூஷின் கணக்கைத் திறக்கும்போது வங்கி கேஒய்சி விதிகளைப் பின்பற்றியதாகவும், மோசடி நடவடிக்கைகளுக்கு அந்த கணக்கு பயன்படுத்தப்படும் என்று முன்பே கணித்திருக்க முடியாது என்றும் ஐ.சி.ஐ.சி.ஐ.க்கு எதிரான அஞ்சலியின் புகாரை குறைதீர்ப்பாளர் முடித்து வைத்தார்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கணக்கில் பணம் வந்தவுடன் நான்கு நிமிடங்களுக்குள், ஹைதராபாத் நகரத்தில் உள்ள பெடரல் வங்கியின் துணை நிறுவனமான ஸ்ரீ பத்மாவதி கூட்டுறவு வங்கியில் உள்ள 11 கணக்குகளில் அந்த பணம் செலுத்தப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

11 கணக்குகளில் எட்டு கணக்குகளின் உரிமையாளர்களின் முகவரிகள் போலியானவை என்றும், கணக்கு வைத்திருப்பவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர்கள் கண்டறிந்தனர்.

அவர்களின் கே.ஒய்.சி ஆவணங்களும் வங்கியில் இல்லை. மீதமுள்ள மூன்று கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு ரிக்ஷா ஓட்டுநர், ஒரு சிறிய குடிசை பகுதியில் தையல் வேலை செய்யும் கணவரை இழந்த பெண் மற்றும் ஒரு தச்சர்.

இவர்களில் ஒருவரைத் தவிர, மற்றவர்களுக்கு தங்கள் கணக்குகளில் பரிவர்த்தனை செய்யப்பட்ட பெரிய தொகைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

மே மாதத்தில், கூட்டுறவு வங்கியின் முன்னாள் இயக்குநர் சமுத்ராலா வெங்கடேஸ்வரலுவை போலீசார் கைது செய்தனர் - அவர் சிறையில் உள்ளார். "இணைய மோசடிகளின் தீவிரம் மற்றும் நீண்டகால தாக்கத்தை கருத்தில் கொண்டு" அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் மூன்று முறை நிராகரித்தது.

இந்த கணக்குகளில் பல வெங்கடேஸ்வரலுவின் உத்தரவுக்கு உட்பட்டு தொடங்கப்பட்டவை என்றும், அவை போலி கணக்குகள் என்றும் போலீஸ் அறிக்கை குற்றம் சாட்டுகிறது - அவை மற்றவர்களின் பெயர்களில் திறக்கப்பட்டுள்ளன. பணத்தை வெள்ளையாக்குவதற்காக அவற்றை இயக்கும் குற்றவாளிகளுக்கு விற்கப்பட்டுள்ளன.

பிபிசியின் விரிவான கேள்விகளுக்கு ஃபெடரல் வங்கியோ அல்லது ஸ்ரீ பத்மாவதி வங்கியோ பதிலளிக்கவில்லை.

பணத்தை இழந்த அஞ்சலியும் மற்றவர்களும் ஜனவரி மாதம் இந்தியாவின் உச்ச நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது வங்கிகளின் "சேவைகளில் குறைபாடு" என்ற அடிப்படையில் அவர்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதற்கு வங்கிகள் பதிலளிக்க வேண்டும், நவம்பரில் விசாரணை நடைபெற உள்ளது.

இத்தகைய மோசடிகள் மிகவும் சிக்கலானதாக இருப்பதால், நிதி மோசடிக்கு இறுதியில் யார் பணம் செலுத்துகிறார்கள் - வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் என்ன பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்பது குறித்து உலகளவில் விவாதங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த அக்டோபரில் இங்கிலாந்து கட்டண சேவை வழங்குபவர்களின் பொறுப்பு குறித்த விதிகளை கடுமையாக்கியது. சில வகையான நிதி மோசடிகளுக்கு பலியாகக்கூடியவர்கள் தவிர, பிற வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். என்று கூறியது.

"வாடிக்கையாளர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டிய கடமை வங்கிகளுக்கு உள்ளது. ஒரு வங்கி அதன் ஒட்டுமொத்த பரிவர்த்தனை முறைகளுக்கு முரணான எந்தவொரு செயல்பாட்டையும் கவனித்தால், அது அந்த பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும்" என்று அஞ்சலி உட்பட டிஜிட்டல் கைதுகளால் பாதிக்கப்பட்ட பத்துக்கு மேற்பட்டவர்களின் வழக்குகளை எடுத்து வாதாடும் வழக்கறிஞர் மகேந்திர லிமாயே பிபிசியிடம் தெரிவித்தார்.

போலி கணக்குகளைத் திறப்பதன் மூலம் புகார்தாரர்களின் நிதி தற்கொலைக்கு வங்கிகள் மறைமுகமாக "உடந்தையாக" இருப்பதாகவும், வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்கவும் தங்கள் கடமையில் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால் இதுவரை, அஞ்சலிக்கு நிவாரணம் பெரிய அளவில் கிடைக்கவில்லை - மோசடியால் இழந்த 5.8 கோடி ரூபாயில் ஒரு கோடியை மட்டுமே அவரால் மீட்டெடுக்க முடிந்தது. இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கும் என்று வழக்கறிஞர் லிமாயே கூறுகிறார்.

தன்னிடமிருந்து திருடப்பட்ட பணத்திற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அஞ்சலி கூறுகிறார்.

மோசடி செய்பவர்களிடம் இழக்கப்பட்டாலும் கூட, முதலீட்டு ஆதாயங்களுக்கு வரி விதிக்கப்படுகின்றன. அவர் இப்போது அத்தகைய வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்குமாறு மன்றாடுகிறார்.

"இதுவரை, இதுபோன்ற குற்றங்களை வருமான வரித் துறை அங்கீகரிக்கவில்லை, இது பாதிக்கப்பட்டவர்களின் நிதி துயரத்தை அதிகரிக்கிறது", என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு