இஸ்ரேல் ராணுவத்தில் சேர மறுக்கும் இளைஞர்கள் - காரணம் என்ன?
காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகக் கூறி அந்நாட்டு இளைஞர்கள் சிலரே ராணுவத்தில் சேர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போரட்டத்தில் பங்கேற்ற யோனா ராஸ்மேன் என்ற இளைஞர் கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின் முடிவில் அவரும் மற்றவர்களும் ராணுவத்தில் சேருவதற்கான அழைப்புக் கடிதங்களை எரித்ததாக கூறினார். தனது நாடு இனப்படுகொலையில் ஈடுபடுவதாகவும், தான் அதற்கு எதிராக இருப்பதால் ராணுவத்தில் சேர மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி தாம் ராணுவத்தில் சேரவேண்டிய தினம் என குறிப்பிட்ட யோனா ராஸ்மேன் அன்றைய தினம் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய மறுப்பை தெரிவிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் விளைவாக தாம் கைது செய்யப்பட்டு ராணுவச் சிறைக்கு அனுப்பப்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் சொல்கிறார்.
ராணுவத்தில் சேர மறுப்பு தெரிவித்த நாளிலிருந்ரே ஒவ்வொரு நாளும் மக்கள் தன்னிடம் கட்டாய ராணுவ சேர்க்கையை எப்படி மறுப்பது என்பது குறித்து கேட்பதாகவும், இஸ்ரேலிலும் சர்வதேச அளவிலும் தங்களது போராட்டம் அதிகம் கவனத்தை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இஸ்ரேலின் மிகப்பெரிய செய்தித் தொலைக்காட்சி சேனல் தங்களைப் பற்றி ஒரு பகுதியை ஒளிபரப்பி தாங்கள் எதிரிக்கு உதவுவதாக செய்தி வெளியிட்டதாகவும், இதுவும் தங்கள் மீது மக்களின் கவனத்தை கொண்டு வந்தது எனவும் யோனா ராஸ்மேன் பிபிசியிடம் கூறினார்.
இருப்பினும் காஸாவில்இனப்படுகொலை செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



