ஒரு பெண்ணுக்கு 'நானே கணவன்' என்று 8 பேர் ஆஜர் - மகாராஷ்டிர நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

திருமணம், மோசடி, மகாராஷ்டிரா, நாக்பூர், திருமண மோசடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாக்பூரில் நடைபெற்ற திருமண மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
    • எழுதியவர், பாக்யஸ்ரீ ராவத்
    • பதவி, பிபிசிக்காக
    • இருந்து,

வட இந்தியாவில் 'கொள்ளைக்கார மணமகள்' சம்பவங்கள் நடப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதைப்பற்றி பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டுவிட்டன. அத்தகைய ஒரு நபர் தற்போது நாக்பூர் போலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது வரை எட்டு பேரை திருமணம் செய்துள்ள அவர், அனைவரிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

நாக்பூரில் மூன்று காவல் நிலையங்களிலும், சத்திரபதி சம்பாஜி நகர், மும்பை மற்றும் பவனி காவல்நிலையங்கலிலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர் திருமணம் செய்து கொண்ட எட்டு பேரும் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்கிற தகவலையும் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண்ணின் பெயர் சமீரா பாத்திமா என்றும் அவர் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார் என்றும் கிட்டிகதான் காவல் நிலைய ஆய்வாளர் ஷார்தா போபாலே தெரிவித்துள்ளார். அவர் மோமின்புரா பகுதியில் உள்ள ஒரு உருதுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரின் முதல் திருமணம் பிவாண்டியில் நடைபெற்றது.

2024-இல் நாக்பூரைச் சேர்ந்த குலாம் கவுஸ் பதான் என்பவர் சமீரா பாத்திமா என்கிற பெண்ணால் ஏமாற்றப்பட்டதாக கிட்டிகதான் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஃபேஸ்புக் மூலம் குலாமிடம் அறிமுகமான பாத்திமா, தானும் விவாகரத்து ஆனவர் என்றும் மறுமணம் பற்றி யோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். இரவும் பகலும் செல்போனில் பேசத் தொடங்கினர். அதன் பின்னர் ஆபாச வீடியோ ஒன்றை எடுத்து அதனை வைரல் ஆக்கப் போவதாக மிரட்டி திருமணம் செய்துகொள்ள குலாமுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் பாத்திமா.

இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அதற்குப் பிறகு வீடியோவை வைத்து மிரட்டி பாத்திமா பணம் பறித்ததாக குலாம் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

வேறு காரணங்களுக்காகவும் பல லட்சம் ரூபாய் வரை கேட்டுள்ளார். இதனால் அவரிடமிருந்து விலகத் தொடங்கினார் குலாம்.

திருமணம், மோசடி, மகாராஷ்டிரா, நாக்பூர், திருமண மோசடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃபேஸ்புக் மூலம் குலாமிடம் அறிமுகமான பாத்திமா, தானும் விவாகரத்து ஆனவர் என்றும் மறுமணம் பற்றி யோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது தான் பாத்திமாவுக்கு ஏற்கெனவே பலமுறை திருமணம் ஆனது தெரியவந்தது. தனது முந்தைய கணவரிடம் விவாகரத்து பெறுவதற்கு முன்பாகவே குலாமை அவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

அவரிடம் போலியான விவாகரத்து சான்றிதழ் ஒன்றைக் காண்பித்துள்ளார். அவரிடம் வெவ்வேறு காரணங்களுக்காக பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.

குலாமின் புகாரைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு சமீராவை கைது செய்ய காவல்துறை சென்றபோது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.

எனவே அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். விசாரணைக்கு ஆஜராக காவல்துறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் வரவில்லை. இந்த நிலையில் அவருக்குப் பொறி வைத்து காவல்துறை கைது செய்துள்ளது.

திருமண மோசடி - காவல்துறை தகவல்

சமீரா திருமணம் என்கிற பெயரில் குலாமை மட்டும் ஏமாற்றவில்லை. அவர் மேலும் 4 அல்லது 5 பேரை திருமணம் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தபோது அவர் திருமணம் செய்து கொண்ட 8 பேரும் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். எட்டு பேரும் அவர்களின் வழக்கறிஞர்களுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி இந்த மோசடி பற்றி விவரித்தனர்.

பாத்திமாவுக்கு 2017-ல் முதல் திருமணம் ஆனது. அப்போதிலிருந்து அவர் ஏமாற்றத் தொடங்கியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கணவரை விவாகரத்து செய்யாமலே மேட்ரிமோனி இணையதளங்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த விவாகரத்தான செல்வந்த ஆண்களைக் கண்டறிந்து அவர்களுடன் தொடர்பை அவர் ஏற்படுத்திக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஏமாற்று செயல்முறை பற்றி போலீஸ் தரப்பிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளது.

திருமணம், மோசடி, மகாராஷ்டிரா, நாக்பூர், திருமண மோசடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்போது எட்டு பேர் புகாரளிக்க முன்வந்துள்ள நிலையில் முன்வராத பலரும் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

"எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது, நான் ஒரு கணவரைத் தேடுகிறேன் எனக் கூறுவார். அதன் பின்னர் போலியான விவாகரத்து சான்றிதழைக் காண்பித்து அவர்களை திருமணம் செய்து கொள்வார். அதன் பின்னர் இரண்டு-மூன்று மாதங்களாக அவர்களிடம் ஆபாச வீடியோ வெளியிடுவதாகக் கூறி மிரட்டி பணம் பறித்துள்ளார்.

அவர்கள் பணம் தரவில்லையென்றால் ஆட்களை அழைத்து அவர்களை தாக்கவும் செய்துள்ளார். அவர்களை அச்சமூட்டி பணம் பறித்த பிறகு வேறு ஒருவரைப் பிடித்து அவரிடமும் இதே வேலைகளைச் செய்து வந்துள்ளார்.

இந்த விதத்தில் பல லட்சம் ரூபாய் வரை திருடியுள்ளார். இது தான் இவரின் செயல்திட்டம்" என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரால் ஏமாந்தவர்களில் ஒரு வங்கி மேலாளரும் அடங்குவார். சத்திரபதி சம்பாஜி நகரைச் சேர்ந்தவர் பணிக்காக நாக்பூரில் வசித்துள்ளார். சமீரா ஃபேஸ்புக் மூலம் அவருடன் அறிமுகமாகியுள்ளார்.

தற்போது 8 பேர் புகாரளிக்க முன்வந்துள்ள நிலையில் முன்வராத பலரும் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சமீராவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் ஆறுமுறை தான் திருமணம் செய்துள்ளதாகவும் ஒவ்வொரு கணவருடன் சண்டை வந்த போதே அடுத்தவரை திருமணம் செய்ததாகவும் காவல்துறையிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நீதிமன்றம் அவரிடம் விவாகரத்து சான்றிதழை கேட்டபோது அவரால் வழங்க முடியவில்லை. அதே போல் திருமணச் சான்றும் அவர் சொன்னதை வைத்தே தயார் செய்யப்பட்டுள்ளது.

ஏனென்றால் இந்த திருமணங்கள் அனைத்தும் அவரது வீட்டில் இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்டுள்ளன. குழந்தைக்காக தனக்கு பிணை வேண்டும் என பாத்திமா கோரியிருந்தார்.

"எனினும் நீதிமன்றம் பாத்திமாவின் மகனை, அவரின் கடைசி கணவரிடம் ஒப்படைத்தது. அவரைச் சிறையில் அடைத்தது" என புகார்தாரரின் வழக்கறிஞர் பாத்திமா பதான் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்களை நாங்கள் தொடர்பு கொள்ள முயன்றோம். அது முடியவில்லை. தொடர்பு கொள்ள முடியும் பட்சத்தில் அவர்கள் தரப்பு பதிலும் இதில் சேர்க்கப்படும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.