You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மின்சார பைக், கார்களுக்காக தமிழ்நாடு முழுவதும் பொது சார்ஜிங் மையம் அமைக்க திட்டம் - இன்றைய டாப்5 செய்திகள்
இன்றைய (09/04/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
மின்சார வாகனங்களை எளிதில் சார்ஜ் செய்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையங்களை அமைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது என்று தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், " சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் விதமாக, பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக பேட்டரியில் ஓடும் வாகனங்கள், சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு அறிவுறித்தி வருகிறது. இதற்கு ஏற்ப பலரும் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். மின்சார வாகனங்களுக்கு எளிதில் சார்ஜிங் வசதி கிடைக்க தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 25 கி.மீ. தூரத்துக்கும் ஒரு சார்ஜிங் மையம், நகரங்களில் ஒவ்வொரு 3 கி.மீ. தூரத்துக்கு ஒரு மையங்களையும் அமைக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
மின்வாரியத்தின் பசுமை எரிசக்தி கழகம் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையம் அமைக்கவுள்ளது. சென்னை மாவட்டத்தில், மாநகராட்சியுடன் இணைந்து 100 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதேபோல், மற்ற மாநகராட்சிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலா 5 முதல் 10 வரை சார்ஜிங் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், "முக்கிய நகரங்களில் பொது சார்ஜிங் மையங்கள் அமைக்க போதிய இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- மசோதாக்கள் மீது முடிவெடுக்க கெடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஆளுநரின் செயல்பாடுகள் இனி எப்படி இருக்கும்?
- விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி பிள்ளையான் கைது - இலங்கையில் நடப்பது என்ன?
- இந்திய பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.19 லட்சம் கோடி நஷ்டம் – எதிர்காலம் எப்படி இருக்கும்?
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரலாற்றில் உயர்சாதி அல்லாத பொதுச்செயலாளர் - எம்.ஏ.பேபிக்கு காத்திருக்கும் சவால்கள்
அமைச்சர் நேருவின் சகோதரரிடம் அமலாக்கத்துறை விசாரணை
தமிழ்நாடு உள்ளாட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேருவின் குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை சோதனையின் போது நேருவின் சகோதரர் கே என் ரவிச்சந்திரனை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "அமலாக்கத்துறை சோதனைகள் சென்னை, கோவை , திருச்சி என பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த சோதனை ரியல் எஸ்டேட் நிறுவனமான டிவிஎச் தொடர்புடைய ரூ.22 கோடி வங்கி கடன் மோசடி சம்பந்தமாக நடத்தப்பட்டன என்றும் அந்த நிறுவனத்தை ரவிச்சந்திரன் விளம்பரப்படுத்தி வந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் 2021-ம் ஆண்டு சிபி ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அமைச்சர் நேருவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சரின் குடும்பம் கட்டுப்படுத்தி ஒரு அறக்கட்டளைக்கு கடன் நிதி திருப்பிவிடப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனைகளை நடத்திய அமலாக்கத்துறை பாஜகவின் கூட்டணி கட்சி அல்லாமல் வேறு எதுவும் இல்லை என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டினார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திரா: கார் தயாரிப்பு ஆலையிலிருந்து 900 என்ஜின்கள் திருட்டு
ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஶ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கியா மோட்டார்ஸ் கார் உற்பத்தி ஆலையிலிருந்து ஐந்து ஆண்டுகளில் 900 கார் என்ஜின்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "கார் என்ஜின் திருடு குறித்து கியா மோட்டார்ஸ் நிர்வாகம் மூன்று வாரங்கள் முன்பு போலீஸில் புகார் அளித்திருந்தது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, இந்த விவகாரத்தை விசாரித்த போலீஸார் இந்த திருட்டு ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டிருக்கலாம் என்று நம்புகின்றனர்.
ஆண்டு இறுதியில் நடைபெறும் வழக்கமான சோதனைகள் போது இந்த திருட்டு குறித்து நிர்வாகத்துக்கு தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த திருட்டு திட்டமிட்ட வகையில், ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் கண்டிப்பாக உற்பத்தி ஆலையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் முன்னாள் ஊழியர்களும் தற்போதுள்ள ஊழியர்களும் கூட்டுச் சேர்ந்து இது நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து உற்பத்தி ஆலைக்கு கார் என்ஜின்கள் கொண்டுவரப்படும் போது அவை திருடப்பட்டிருக்கலாம் என்று முதலில் சந்தேகப்பட்ட போலீஸார் பிறகு, கார் என்ஜின்கள் உற்பத்தி ஆலையிலிருந்தே திருடப்பட்டுள்ளன என்று உறுதி செய்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து மருந்து சாப்பிட்டு உடற்பயிற்சி செய்த இளைஞர் உயிரிழப்பு
சென்னையில் ஊட்டச்சத்து மருந்து சாப்பிட்டு உடற்பயிற்சி மேற்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், " சென்னை காசிமேட்டைச் சேர்ந்தவர் 35 வயது மீனவர் ராம்கி. அவர் கடந்த ஐந்து மாதங்களாக திருவொற்றியூரில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்துக்குச் சென்று உடற்பயிற்சி செய்தது மட்டுமல்லாமல், பயிற்சி மைய நிர்வாகி அறிவுரையின் பேரில் ஊட்டச்சத்து மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு ராம்கிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவரது உடலிலிருந்து சிறுநீர் வெளியேறவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது இரு சிறுநீரகங்களும் செயலிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே தீவிர சிகிச்சைப் பெற்று வந்த ராம்கி திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
இதையறிந்த அவரது குடும்பத்தினர், பயிற்சி மைய நிர்வாகியே ராம்கியின் மரணத்துக்குக் காரணம் என்று கூறி போலீஸில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நிர்வாகி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை யாழ்ப்பாணத்தில் 305 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
இலங்கை யாழ்ப்பாணாத்தில் சுமார் 305 கிலோ கேரள கஞ்சாவுடன் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன.
அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியை சேர்ந்த படகோட்டியை கைது செய்த கடற்படையினர் கஞ்சா போதைப்பொருளுடன் படகினையும் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா கடல் நீரில் நனைந்த நிலையில் காணப்பட்டதாகவும் , ஈரத்துடன் அதன் எடை 304 கிலோ 600 கிராம் என தெரிவித்த கடற்படையினர் அதன் பெறுமதி சுமார் 12 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகு என்பவற்றுடன், கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு