ஆபாச படங்களை உருவாக்குவதாக க்ரோக் ஏஐ நிறுவனத்தின் மீது புகார்

    • எழுதியவர், லாரா க்ரெஸ்
    • பதவி, தொழில்நுட்ப செய்தியாளர்

ஈலோன் மஸ்க்கின் க்ரோக் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னுடைய ஆடைகளை டிஜிட்டல் முறையில் அகற்றியதாக கூறி, ஒரு பெண் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார்.

இது குறித்து அந்தப் பெண் பிபிசி-யிடம் கூறுகையில், தான் "ஒரு பாலியல் பிம்பமாக சுருக்கப்பட்டதைப்" போல உணர்வதாகத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில், பயனர்கள் அந்த சாட்பாட்டிடம் பெண்களின் அனுமதியின்றி அவர்களின் ஆடைகளை நீக்கி, பிகினி உடையில் தோன்றுமாறு செய்வது மற்றும் அவர்களைப் பாலியல் சூழல்களில் சித்தரிப்பது போன்ற பல உதாரணங்களை பிபிசி கண்டுள்ளது.

க்ரோக் -ஐ உருவாக்கிய நிறுவனமான xAI, இது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அதற்குப் பதிலாக, "பாரம்பரிய ஊடகங்கள் பொய் சொல்கின்றன" என்ற தானியங்கிப் பதிலையே வழங்கியது.

சமந்தா ஸ்மித் என்பவர் தனது புகைப்படம் மாற்றப்பட்டது குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதற்குப் பதிலளித்த பலரும் தங்களுக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில், வேறு சிலரோ சமந்தாவின் மேலும் பல படங்களை உருவாக்குமாறு க்ரோக்கிடம் கேட்டுள்ளனர்.

"பெண்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை," என்று கூறிய சமந்தா,

"அங்கே ஆடையில்லாமல் இருப்பது நான் இல்லை என்றாலும், அது என்னைப் போலவே இருந்தது. யாராவது என்னுடைய நிர்வாணப் படத்தையோ அல்லது பிகினி படத்தையோ உண்மையில் பதிவிட்டால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ, அதே போன்ற அத்துமீறலாகவே இதையும் நான் உணர்கிறேன்" என்றும் தெரிவித்தார்.

இது குறித்து பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுபோன்ற 'நிர்வாணமாக்கும்' கருவிகளைத் தடை செய்யச் சட்டம் இயற்றப்பட்டு வருவதாகவும், புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் இத்தகைய தொழில்நுட்பத்தை வழங்குபவர்களுக்கு "சிறைத் தண்டனையும் கணிசமான அபராதமும் விதிக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.

ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காம், பிரிட்டன் மக்கள் சட்டவிரோத உள்ளடக்கங்களைப் பார்ப்பதற்கான "ஆபத்து" குறித்து தொழில்நுட்ப நிறுவனங்கள் "ஆய்வு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளது.

ஆனால், எக்ஸ் அல்லது க்ரோக் தொடர்பாக தற்போது விசாரணை நடத்தப்படுகிறதா என்பதை அது உறுதிப்படுத்தவில்லை.

க்ரோக் என்பது எக்ஸ் தளத்தைப் பயன்படுத்துபவர்கள் தங்களின் பதிவுகளில் டேக் செய்தால் பதிலளிக்கும் ஒரு இலவச ஏஐ உதவியாளர் ஆகும். இதில் சில பிரீமியம் அம்சங்கள் கட்டண அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

பொதுவாக, பிற பயனர்களின் கருத்துகளுக்கு எதிர்வினை அளிக்க அல்லது கூடுதல் தகவல்களை வழங்க க்ரோக் பயன்படுத்தப்படுகிறது.

அதே நேரத்தில், அதன் ஏஐ எடிட்டிங் வசதியின் மூலம், பதிவேற்றப்பட்ட படங்களை பயனர்கள் மாற்றியமைக்கவும் முடியும்.

இந்த வசதி, நிர்வாணம் மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கங்களைக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க அனுமதிப்பதாக விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.

முன்னதாக, பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் குறித்த பாலியல் ரீதியான வீடியோவை உருவாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான கிளேர் மெக்லின் கூறுகையில், "எக்ஸ் அல்லது க்ரோக் நினைத்தால் இத்தகைய தவறுகளைத் தடுக்க முடியும், ஆனால் அவர்கள் தண்டனையின்றி செயல்படுகின்றன போலத் தெரிகிறது" என்றார்.

"பல மாதங்களாக இத்தகைய படங்களை உருவாக்கவும் பரப்பவும் இந்தத் தளம் அனுமதித்து வருகிறது, இதுவரை ஒழுங்குமுறை அமைப்புகளால் எந்தச் சவாலும் முன்வைக்கப்பட்டதை நாங்கள் காணவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

xAI-இன் கொள்கைப்படி, ஒரு நபரை "ஆபாசமான முறையில் சித்தரிப்பது" தடைசெய்யப்பட்டுள்ளது.

பிபிசி-யிடம் பேசிய ஆஃப்காம் அமைப்பு, "சம்மதமின்றி அந்தரங்கப் படங்களை அல்லது குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை உள்ளடக்கங்களை உருவாக்குவதும் பகிர்வதும் சட்டவிரோதமானது" என்று உறுதிப்படுத்தியது. இதில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பாலியல் டீப்ஃபேக் படங்களும் அடங்கும்.

மேலும், எக்ஸ் போன்ற தளங்கள், பிரிட்டன் பயனர்கள் தங்கள் தளங்களில் சட்டவிரோத உள்ளடக்கங்களைச் சந்திக்கும் "அபாயத்தைத் குறைக்கும்" வகையில் "தகுந்த நடவடிக்கைகள்" எடுக்க வேண்டும் என்றும், அத்தகைய உள்ளடக்கம் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

கூடுதல் அறிக்கை :கிறிஸ் வாலன்ஸ்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு