You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்கர் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி: மொழி எல்லைகளை கடந்த இசை சாதனையாளர்
"தி கார்பென்டர்ஸ் இசை ஆல்பம் கேட்டு வளர்ந்தேன், இதோ இப்போது ஆஸ்கர் விருதுடன் நிற்கிறேன்" என்று ஆஸ்கர் விழா மேடையில் ஆர்.ஆர்.ஆர். இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி உணர்ச்சி பொங்கக் கூறினார். அந்த படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோபைத் தொடர்ந்து ஆஸ்கர் விருதையும் அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1961-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி பிறந்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் இயற்பெயர் கொடுரி மரகதமணி கீரவாணி என்பதாகும். அவரது தந்தையான சிவசக்தி தத்தா திரைப்பட பாடலாசிரியராக இருந்தவர்.
அறிமுகம் 1990, திருப்பம் தந்த 1991
கீரவாணி இசையின் மீதான காதலால் தனக்கு அந்த பெயரையே தந்தை சூட்டிவிட்டதாக எம்.எம்.கீரவாணி பல நேர்காணல்களில் கூறியுள்ளார். தந்தையால் இசை மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட அவர், 2 ஆண்டுகளில் வயலின் கற்றுக் கொண்டிருக்கிறார்.
தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்த சக்கரவர்த்தியிடம் உதவியாளராக சேர்ந்ததன் மூலம் சினிமா வாழ்க்கையை கீரவாணி தொடங்கினார். 1990-ல் 'கல்கி' என்ற படத்துக்கு இசையமைத்தார். அந்தப் படம் வெளியாகவில்லை. அதே ஆண்டு மெளலி இயக்கத்தில் வெளியான 'மனசு மகாத்மா' என்ற தெலுங்கு படமே மரகதமணி இசையமைப்பில் வெளியான முதல் படமானது.
எம்.எம். கீரவாணியின் திரையுலக பயணத்தில் 1991-ம் ஆண்டு முக்கியமான ஒன்றாக அமைந்தது. அந்த ஆணடு வெளியான 'சீதாராமையா காரி மனவராலு' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான 'ஷனா ஷனம்' என்ற திரைப்படத்தின் மூலம் எம்.எம்.கீரவாணி பெரும் புகழை அடைந்தார்.
அதன் பிறகு அவரது திரைப்பயணத்தில் தொடர்ந்து ஏறுமுகம்தான். தெலுங்கு திரைப்பட இசையுலகின் அசைக்க முடியாத மன்னராக அன்று முதல் அவரே திகழ்கிறார்.
மெலடி இசையே ரசிகர்களை கவரும், மெலடி பாடல்களே வெற்றிபெறும் சாத்தியங்கள் கொண்டவை என்று ஒரு நேர்காணலில் கீரவாணி குறிப்பிட்டார். துள்ளல் இசைப் பாடல்கள் நடனம், துடிப்பான இசை மூலம் வெற்றியடைகின்றன, ஆனால் மெலடிப் பாடல்களோ ரசிகர்களின் இதயத்தை வெல்கின்றன என்பது அவரது கருத்து.
தெலுங்கு, தமிழ், இந்தியில் அவரது இசையில் வெளியான பல பாடல்கள் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவை.
தமிழில் மரகதமணி என்ற பெயரில்...
1990-ம் ஆண்டு இயக்குநர் கே.பாலச்சந்தர் தனது 'அழகன்' படத்தின் மூலம் தமிழில் கீரவாணியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் இடம் பெற்ற 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா', 'சாதி மல்லி பூச்சரமே' போன்ற காதல் மெலடி பாடல்கள் ரசிகர்களிடையே இன்றும் முணுமுணுக்கப்படுகின்றன. 'துடிக்கிறதே நெஞ்சம்' என்ற துள்ளல் இசைப்பாடல், 'கோழி கூவும் நேரம் ஆச்சு' என்ற கிராமியப் பாடல் என அனைத்து வகைகளிலும் அழகான பாடல்களைக் கொடுத்து முத்திரை பதித்தார்.
அதுமுதல் சில ஆண்டுகள் பாலச்சந்தர் தயாரிப்புகளுக்கும் அவர் இயக்கும் படங்களுக்கும் ஆஸ்தான இசையமைப்பாளராக மரகதமணி திகழ்ந்தார். 1992-ல் பாலச்சந்தர் இயக்கிய 'வானமே எல்லை' படத்திலும் இவர் கொடுத்த அனைத்து பாடல்களும் வெற்றிபெற்றன. பாலச்சந்தர் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் 'நீ பாதி நான் பாதி' படத்துக்கும், பாலச்சந்தர் இயக்கிய 'ஜாதி மல்லி' ஆகிய படங்களுக்கும் மரகதமணி இசையமைத்தார்.
அர்ஜுன் நடித்து இயக்கிய 'சேவகன்', 'பாட்டொன்று கேட்டேன்', 'கொண்டாட்டம்' ஆகிய மற்ற இயக்குநர்களின் படங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் அரவிந்த் ஸ்வாமி - ஸ்ரீதேவி நடித்த 'தேவராகம்' படத்துக்கு இசையமைத்தார். இந்தப் படம் தமிழிலும் வெளியானது. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பாடல்கள் கவனம் பெற்றன.
தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான 'மாவீரன்', 'நான் ஈ', 'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய படங்களின் மூலம் தமிழில் 2k கிட்ஸ்கள் மத்தியில் அவர் அதிக பிரபலமடைந்தார்.
இந்தியில் க்ரீம் என்ற பெயரில்...
தெலுங்கில் எம்.எம்.கீரவாணி, தமிழில் மரகதமணி என்ற பெயரில் வெளிப்பட்ட இவர் பாலிவுட்டில் க்ரீம் என்ற பெயரில் இசையமைப்பாளராக பணியாற்றினார். 1994-ம் ஆண்டு கிரிமினல் என்ற படத்தின் மூலம் இந்தியில் அவர் அறிமுகமானார்.
2002-ம் ஆண்டில் வெளியான சர்: தி மெலடி ஆஃப் லைஃப் திரைப்படம் இவரை இந்தி ரசிகர்களிடையே வெகுவாக கொண்டு சேர்த்தது. அந்த படத்தில் இடம் பெற்ற அபிஜா... அபிஜா... என்ற பாடல் வட மாநிலங்களில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
2003-ம் ஆண்டு ஜிஸ்ம் படத்தில் இடம் பெற்ற மெலடி பாடல்கள் இந்தி ரசிகர்களை உருகச் செய்தன. ஜாடு ஹாய் நஷா ஹாய். ச்சலோ டும்கோ லெகர், ஆவார பன் ஆகிய பாடல்கள் இந்தி சினிமா ரசிகர்களால் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டவையாக இருந்தன.
இந்தி பட ரசிகர்களின் உதடுகள், இவரது இசையில் உருவான டும் மைல் தில் கிலே, ஜாடு ஹாய் நஷா ஹாய் போன்ற பாடல்களை முணுமுணுக்காமல் இருந்திருக்கவே முடியாது.
2005-ம் ஆண்டு ஷாரூக் கான் நடிப்பில் வெளியான பஹெலி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் படத்தின் இசை பேசப்படும் ஒன்றாக இருந்தது. அதில் இடம் பெற்ற தீரே ஜல்நா தீரே ஜல்நா பாடல் சூப்பர் ஹிட்டானது.
இந்தியில் 'கிரிமினல்', ஷாருக் கான் நடித்த 'பஹேலி', பிபாஷா பாசு நடித்த 'ஜிஸ்ம்' உள்பட 26 படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.
ராஜமௌலியுடன் இணைந்து சிகரம் தொட்ட கீரவாணி
இந்திய திரையுலகில் மாபெரும் இயக்குநராக உருவெடுத்துள்ள எஸ்.எஸ்.ராஜமௌலியின் அனைத்துப் படங்களுக்கும் எம்.எம்.கீரவாணியே இசையமைத்துள்ளார். இருவருமே நெருங்கிய உறவினர்கள் ஆவர். அதாவது, ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்தும், கீரவாணியின் தந்தை சிவசக்தி தத்தாவும் சகோதரர்கள்.
2001-ம் ஆண்டு ஸ்டூடன்ட் நம்பர் ஒன் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமான எஸ்.எஸ்.ராஜமௌலியின் தொடர் வெற்றிகளில் எம்.எம்.கீரவாணியும் இணைந்தே பயணப்பட்டார். மகாதீரா, நான் ஈ, பாகுபலி, பாகுபலி-2 என இருவரது கூட்டணியில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பாகுபலி பெற்றுத் தந்த பெரும்புகழ்
2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படம் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு மட்டுமல்ல, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கும் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. விமர்சகர்களின் பாராட்டிலும் வசூலிலும் உலக சாதனை படைத்த 'பாகுபலி' படங்கள் மூலம் தேசிய, சர்வதேச கவனத்தை ஈர்த்தார். அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
அதன் பிறகு, இருவர் கூட்டணியில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படமும் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்த, அதில் இடம் பெற்ற பாடல்களும் பெருவெற்றி பெற்றன. குறிப்பாக, நாட்டு நாட்டு பாடல் இந்தியா மட்டுமின்றி, அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களைச் சேர்ந்த மக்களையும் ஆட்டம் போட வைத்தன. இன்றும் கூட பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிட்ட வண்ணம் இருப்பதை பார்க்க முடிகிறது.
பாடலாசிரியர், பாடகர், எழுத்தாளர் என பன்முகம்
நாடு போற்றும் இசையமைப்பாளராக உயர்ந்துள்ள எம்.எம்.கீரவாணி பாடலாசிரியர், பின்னணி பாடகர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர். அவர் இசையமைத்த பல பாடல்களை அவரே பாடியும் இருக்கிறார். தெலுங்கு, சமஸ்கிரும் ஆகிய மொழிகளில் தேர்ந்த அவர், 15 தெலுங்கு படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். தெலுங்கில் பிரபல பாடலாசிரியரான வெட்டூரி சுந்தர ராமமூர்த்தியே தனது குரு என்றும், அவரிடம் இருந்தே இலக்கியத்தைக் கற்றுக் கொண்டதாகவும் கீரவாணி கூறுகிறார்.
பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள ஒகா ப்ராணம், கன்னா நிடுரிஞ்சாரா, தன்டலய்யா ஆகிய 3 பாடல்களும் எம்.எம்.கீரவாணியின் கைவண்ணத்தில் உருவானவையே. ஆஸ்கரை வென்று பெருமை சேர்த்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் ஜனனி என்று தொடங்கும் பாடலையும் அவர் எழுதியுள்ளார்.
இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என்பதைக் காட்டிலும் பாடலாசிரியர் என்று குறிப்பிடுவதையே பெருமையாக கருதுவதாக நேர்காணல் ஒன்றில் எம்.எம்.கீரவாணி கூறியுள்ளார். சிறந்த எழுத்தாளர் என்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்பதே அதற்குக் காரணம் என்கிறார் அவர்.
பல சிறுகதைகளையும் எழுதியுள்ள கீரவாணி, அவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.
எம்.எம்.கீரவாணி வென்றுள்ள விருதுகள்
தெலுங்கு திரைப்பட இசையுலகில் இன்று முடிசூடா மன்னனாக திகழும் எம்.எம்.கீரவாணிக்கு சிறப்பான இசைத் திறமைக்காக விருது கொடுத்து முதலில் கௌரவித்தது தமிழ்நாடுதான். 1991-ம் ஆண்டு அழகன் திரைப்படத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த இசையமைப்பாளர் விருது அளிக்கப்பட்டது.
1997-ம் ஆணடு அன்னமய்யா என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. சிறந்த இசைக்காக, ஆந்திர அரசு வழங்கும் நந்தி விருதுகளை 11 முறையும், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை 13 முறையும் அவர் வென்றிருக்கிறார்.
பாகுபலி-2 திரைப்படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.
ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி, தற்போது அதே பாடலுக்காக சிறந்த ஒரிஜினல் இசை பிரிவில் ஆஸ்கரையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஆஸ்கர் விழா மேடையில் பேசிய கீரவாணி, "தி கார்பென்டர்ஸ் இசை ஆல்பம் கேட்டு வளர்ந்தேன், இன்று இதோ ஆஸ்கர் விருதுடன் நிற்கிறேன்" என்று உருக்கத்துடன் குறிப்பிட்டார். 1970-களில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாப் மெல்லிசைப் பாடலான 'Top Of The World' பாடலின் மெட்டிற்கு புதிய வரிகளை இட்டு நிரப்பி, அவர் பாடினார்.
அந்த வரிகள், "என் மனதில் ஒரே ஒரு ஆசை மட்டுமே இருந்தது. அது ஆர்.ஆர்.ஆர். படம் ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்பதே. இதனால், ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை" எனும் வகையில் அமைந்திருந்தன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்