பஜன்லால் சர்மா: வசுந்தரா ராஜேவை பின்னுக்கு தள்ளி ராஜஸ்தான் முதல்வரானது எப்படி?

ராஜஸ்தானில் பா.ஜ.க தனது புதிய ஆட்சியை பஜன்லால் சர்மாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

சங்கனேர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கட்சியின் மாநில அமைப்பில் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

பஜன்லால் சர்மா சங்கனேர் தொகுதியில் வெற்றி பெற்று, முதன்முறையாக எம்.எல்.ஏ ஆகியுள்ளார். அவர் பா.ஜ.க.வின் முக்கிய முகமாகக் கருதப்படுகிறார். இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். அவர் பரத்பூரில் வசித்து வருகிறார்.

இதுதவிர, ராஜஸ்தானில் இரண்டு துணை முதலமைச்சர்களையும் அக்கட்சி அறிவித்துள்ளது. பஜன்லால் சர்மாவின் அமைச்சரவையில் தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

மத்தியில் இருந்து பார்வையாளராக அனுப்பப்பட்ட கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த சந்திப்பின் மத்திய பார்வையாளர்களாக ராஜ்நாத் சிங் தவிர, சரோஜ் பாண்டே மற்றும் வினோத் தாவ்டே ஆகியோரும் ஜெய்ப்பூருக்கு வந்திருந்தனர்.

இந்த பதவிக்கு பா.ஜ.க.வில் பல தலைவர்களின் பெயர்கள் பேசப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பஜன்லால் சர்மாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் பதவிக்கு விவாதிக்கப்பட்ட பெயர்கள்

ராஜஸ்தான் முதலமைச்சர் பதவிக்கு வசுந்தரா ராஜே சிந்தியாவைத் தவிர, ஜெய்ப்பூர் அரச குடும்பத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சிபி ஜோஷி, தியா குமாரி, பாபா பாலக்நாத், சபாநாயகர் ஓம் பிர்லா, அர்ஜுன் மேக்வால், ராஜேந்திர சிங் ரத்தோர், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோரின் பெயர்கள் இந்தப் பதவிக்கான போட்டியில் இருந்தன.

வசுந்தரா ராஜே ராஜஸ்தானின் முதலமைச்சராக இருந்துள்ளார். மேலும் மாநிலத்தில் பா.ஜ.க.வின் மூத்த மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஆனால், அக்கட்சி தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

இரண்டு முறை ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியா, கட்சித் தலைமையின் தேர்வு அல்ல என்று ஏற்கனவே கூறப்பட்டது.

ராஜ்சமந்த் எம்.பி.யான தியா குமாரியும் வசுந்தரா ராஜே போன்ற அரச குடும்பத்தில் இருந்து வந்தவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி உட்பட பா.ஜ.க.வின் உயர்மட்ட தலைவர்களுக்கு விருப்பமானவராக கருதப்படுகிறார். அவருக்கு புதிய அரசில் துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆல்வார் மாவட்டத்தில் உள்ள திஜாரா தொகுதிக்கான பா.ஜ.க வேட்பாளர் பாபா பாலக்நாத் ரோஹ்டக்கில் அமைந்துள்ள அஸ்தல் போஹர் நாத் ஆசிரமத்தின் மடாதிபதி ஆவார். போஹார் மடத்தின் எட்டாவது மடாதிபதியான இவர், உத்தரபிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் போன்று பார்க்கப்படுகிறார். இவரது பெயரும் ராஜஸ்தான் முதல்வராவதற்குக் கருதப்பட்டது என்று செய்திகள் கூறின.

கட்சிக்குள் வசுந்தரா ராஜேவின் எதிர்ப்பாளராக கஜேந்திர சிங் ஷெகாவத் கருதப்படுகிறார். ஜோத்பூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டை தோற்கடித்த ஷெகாவத், மத்திய அமைச்சராக உள்ளார்.

கோட்டா தொகுதியை சேர்ந்த ஓம் பிர்லா தற்போது மக்களவை சபாநாயகராக உள்ளார். முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் ரகசிய போட்டியாளராகவும் கருதப்பட்டார். அவர் பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் முக்கிய தலைவர்களுக்கு நெருக்கமானவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் கருதப்படுகிறார். பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு பிர்லா மிகவும் நெருக்கமானவர்.

இந்த முறை பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர் ஆரம்பம் முதலே கூறி வந்தார். ராத்தோர் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற மாணவர் தலைவராக இருந்துள்ளார். 68 வயதான ரத்தோர் கட்சியில் பல வெற்றி-தோல்விகளை சந்தித்திருக்கிறார்.

அர்ஜுன் மேக்வாலின் பெயரும் பா.ஜ.க தரப்பிலிருந்து விவாதிக்கப்பட்டது. முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சரான அர்ஜுன் மேக்வால், பிகானேர் தொகுதியின் எம்.பி. ஆவார். இவர் கட்சியின் தலித் முகமாக அறியப்படுகிறார்.

ஹரியானாவில் மனோகர் லால் கட்டார், உ.பி.யில் யோகி ஆதித்யநாத், அசாமில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா அல்லது உத்தராகண்டில் புஷ்கர் தாமி ஆகியோர் முதலமைச்சராக பதவியேற்கும் முன், அவர்கள் அப்பதவியில் அமர்த்தப்படுவார்கள் என யாரும் அறிந்திருக்கவில்லை.

ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள்

1998-ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பதிவு செய்து அசோக் கெலாட் முதல்வரானார். ஆனால், ஓராண்டுக்குள் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

2003-இல் இருந்து 2014 வரை இந்த முடிவுகள் மாற்றப்பட்டன. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று வந்த அக்கட்சி, மக்களவைத் தேர்தலில் அதை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகிறது.

இருப்பினும், 2018-ஆம் ஆண்டில் இந்த முறை மாறியது. ஏனெனில் அந்தாண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், 2019-இல் பாஜக 25-இல் 24 இடங்களையும் ஆர்.எல்.பி (ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி) ஒரு இடத்தையும் வென்றது.

ராஜஸ்தானில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 0.5 சதவீதம் மட்டுமே. 2018-இல் 200 இடங்களில் காங்கிரஸ் 100 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் சட்டமன்றத்தின் 199 தொகுதிகளுக்கு இம்முறை நடைபெற்ற தேர்தலில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்றது. அதாவது, பாஜக அறுதிப்பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் 69 இடங்களில் வெற்றி பெற்றது.

யார் இந்த பஜன்லால் சர்மா?

பஜன்லால் சர்மா ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், 2022-23-ஆம் ஆண்டில் தனது மொத்த வருமானம் ரூ.6,86,660 எனத் தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்த காலகட்டத்தில் அவரது மனைவி பெயரில் அறிவிக்கப்பட்ட தொகை ரூ.4,27,080. அவரது மொத்த அசையும் மற்றும் அசையா சொத்துகள் சுமார் ரூ.1.4 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

அரசு ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் வலுக்கட்டாயமாக நிறுத்தியதாக, அவர் மீது குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்கனேர் தொகுதியில் காங்கிரஸின் புஷ்பேந்திர பரத்வாஜை 48,081 வாக்குகள் வித்தியாசத்தில் பஜன்லால் சர்மா தோற்கடித்தார். அவர் மொத்தம் 1,45,162 வாக்குகள் பெற்றார். அவர் நீண்ட காலமாக ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) மற்றும் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஆகியவற்றுடன் தொடர்புடையவர்.

அவர் பாஜகவில் நீண்ட காலமாக உள்ளார். மாநிலத்தில் பாஜகவின் தேர்தல் மேலாண்மை (ஒருங்கிணைப்பு) குழுவிலும் பணியாற்றியுள்ளார். பாஜகவின் கடைசி மூன்று - நான்கு மாநிலத் தலைவர்களுடனும் அவர் பணியாற்றியுள்ளார்.

சங்கனேர் தொகுதி பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்த தொகுதி ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வருகிறது. அத்தொகுதியில் ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்த அசோக் லஹோட்டிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாமல், பஜன்லால் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தொகுதியில் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்று கருதப்பட்டது. அசோக் லஹோட்டி வசுந்தரா ராஜேவின் ஆதரவாளராகக் கருதப்படுகிறார். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கோபமடைந்த அவரது ஆதரவாளர்கள் பாஜக அலுவலகத்திற்கு வெளியே முழக்கங்களை எழுப்பினர்.

தற்போது முதல் எம்.எல்.ஏ. ஆனதுமே இரண்டு முறை முதலமைச்சராக இருந்த, சக்தி வாய்ந்த மூத்த தலைவரான வசுந்தரா ராஜே சிந்தியாவை பின்னுக்குத் தள்ளி ராஜஸ்தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

'அனைத்து சாதியினரையும் திருப்திப்படுத்த முயற்சி'

சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பஜன்லால் சர்மா, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அனைத்து சாதியினரையும் கவரும் பாஜகவின் முயற்சியாக பலரும் பார்க்கின்றனர். பஜன்லால் சர்மா ஒரு பிராமணர். அதேசமயம் தியா குமாரி, ராஜ்புத் சமூகத்தையும், பிரேம்சந்த் பைர்வா தலித் சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

அவரது பெயர் அறிவிக்கப்பட்டதும், அதே கேள்வியை பாஜக மூத்த எம்எல்ஏ கிரோரி லால் மீனாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

இது ராஜ்புத், பிராமண, தலித் தலைவர்கள் மூலம் பல்வேறு சாதியினரை வெல்வதற்கான முயற்சியா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

இதுகுறித்து மீனா கூறுகையில், “நாங்கள் சாதியை வளர்க்கவில்லை. நரேந்திர மோதியின் பெயரால் மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றோம். 2024 மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம்” என்றார்.

56 வயதான பஜன்லால் சர்மாவின் பெயர், முதலமைச்சர் போட்டி குறித்த ஊடக விவாதங்களில் இடம்பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், பாஜகவுக்குள் அவரது பெயர் பேசப்பட்டு வந்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)