ஸ்மார்ட்போனில் புதிய புரட்சி - இதய நோயைக் கண்டுபிடிக்க இனி ஒரு செல்பி போதும்!

    • எழுதியவர், டாம் ஊக்
    • பதவி, பிபிசி நியூஸ்

உலகின் முதல் மொபைல் போனை உருவாக்கிய குழுவை வழிநடத்திய மார்ட்டின் கூப்பர், "செல்போன்கள் நம் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் ஒரு முக்கிய கருவியாக மாறும்," என்று கடந்த வாரம் கூறியிருந்தார்.

அதனை நிரூபிப்பது போல, ரத்தம் உறைதல் என்ற தீவிர உடல்நல பிரச்னையை ஸ்மார்ட்போன் மூலம் முன்கூட்டியே எளிதில் அறிந்து கொள்ளும் வசதி வந்துள்ளது. இனி ரத்தம் உறைதல் திறனை அறிய, ஒரு சிரிஞ்ச் நிறைய ரத்தத்தை எடுத்து பரிசோதிக்க வேண்டிய சிரமம் இருக்காது. நீங்கள் கைகளில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே ரத்தம் உறைவதை பரிசோதித்து விட முடியும்.

ஐபோனில் ரத்தப் பரிசோதனை

கடந்த ஆண்டு மார்ச் மாதம், வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு சொட்டு ரத்தத்தை பயன்படுத்தி, ஐபோன் மூலமாக ரத்தம் உறையும் திறனை பரிசோதித்தனர்.

இந்தச் சோதனையின் போது, 'லிடார்' என்ற கருவியை பயன்படுத்தினர். லிடார், என்பது ஒளியை உள்வாங்கி கண்டறியும் சென்சார்(light detecting and ranging) ஆகும். உள்வாங்கும் ஒளியின் அலைக்கற்றை துடிப்புகள் உதவியுடன், 3D படத்தை உருவாக்குகிறது.

இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன், மெய்நிகர் மற்றும் நிஜ மாடல்களின் வழியே ரத்தத்தின் உறையும் திறனை கண்டறிய முடியும், என்கின்றனர், இதை உருவாக்கிய ஆய்வாளர்கள்.

உதாரணமாக, ஆகுமென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலமாக காலியாக உள்ள உங்கள் அறையில் ஒரு கட்டில் அல்லது மேஜையை எங்கு வைத்தால் நன்றாக இருக்கும் என்பதை உங்களால் போன் கேமரா மூலமாக பார்க்க முடியும்.

அது போலவே உங்கள் உடலில் உள்ள ரத்தக் கட்டிகள் குறித்து, லிடார் மூலமாக கிடைக்கும் தகவல்களை திரட்டி ஒரு மாடலை உருவாக்குகிறது இந்த கண்டுபிடிப்பு.

எப்படி இந்த சோதனை நடக்கும்?

ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து முடிவுகளை தெரிந்து கொள்ள நமது போனில் உள்ள சென்சார்கள் துல்லியமாக இருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அப்படி இருந்தால் மட்டுமே, ஒளி ஊடுருவும் தொழில்நுட்பத்தின் வழியாக உங்கள் ரத்தத்தின் உறையும் திறனையோ, பாலில் ஏற்படும் கலப்படத்தையோ உங்களால் இந்த லிடார் சென்சார் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

லிடார் சென்சாரில் ஒரு திரவம் (எடுத்துக்காட்டாக ஒரு சொட்டு ரத்தம்) செலுத்தப்படும் போது, அந்த சென்சாரில் பட்டு சிதறும் ஒளியை பகுப்பாய்வு செய்து அதிலிருந்து உருவாகும் லேசர் அலைக்கற்றின் மூலமாக ஒரு வடிவம் பெறப்படுகிறது.

சோதனைக்காக நீங்கள் செலுத்தும் பாலில் உள்ள கொழுப்பின் அளவு மாறினால், அதிலிருந்து கிடைக்கும் வடிவம் வேறுபடும். இதன்மூலம் பாலில் கலப்படம் இருக்கிறதா என்பதை நம்மால் உறுதி செய்ய முடியும்.

இதே முறைதான் ரத்தம் உறைதல் விஷயத்திலும் நடக்கும். ரத்தத்தின் ஏற்படும் மாற்றங்கள் வழியே நமக்கு ரத்தக் கட்டிகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறதா என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

இதை உருவாக்கும் முயற்சியின் போது, சென்சாரின் கண்ணாடி ஸ்லைடில் வைக்கப்படும் ஒரு துளி ரத்தத்தில் இருந்து உறையும் தன்மை இருக்கும் ரத்தத்தை வேறுபடுத்த முடிந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

செல்போன் கேமரா மூலம் பரிசோதனை

சமீபத்திய ஆராய்ச்சியின் மூலம், ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமரா மற்றும் அதிர்வு மோட்டார்களைப் பயன்படுத்தி, செப்பு துகள்களின் இயக்கத்தின் வழியே ரத்தம் உறையும் திறனை கண்டறிந்தனர்.

இன்னும் சில ஆய்வாளர்கள், ரத்த அழுத்தம் போன்ற இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் பிரச்னைகளை அளவிட தொலைபேசியின் கேமராவைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர்.

கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழகம், சீனாவின் ஹாங்சோ நார்மல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உங்கள் போன் கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்களின் மூலமாக கண்ணுக்கு புலப்படாத நம் முகத்தின் ரத்த ஓட்டத்தை கண்டறிய உதவும் கணினி வழிமுறைகளை(algorithm) உருவாக்கியுள்ளனர்.

மற்றொரு சீன விஞ்ஞானிகளின் குழு, ஸ்மார்ட்போனை பயன்படுத்தி எடுக்கப்படும் நான்கு படங்களின் உதவியுடம் மாரடைப்பு போன்ற இதய கோளாறுகள் ஏற்படுவது குறித்து எச்சரிக்கும் வகையில் ஒரு கணினி வழிமுறையை (deep-learning algorithms) உருவாக்கியுள்ளது.

இந்தச் சோதனையை உங்கள் ஸ்மார்ட்போன் செய்ய, உங்களின் 4 புகைப்படங்கள் மட்டும் போதுமானது.

நேராக நீங்கள் கேமராவைப் பார்க்கும் ஒரு புகைப்படம், பக்கவாட்டில் எடுக்கப்பட்ட இரண்டு படங்கள், கீழே குனிந்து பார்ப்பது போல தலைக்கு மேலே எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் என மொத்தம் 4 புகைப்படங்கள் இதற்கு தேவைப்படும்.

இந்த படங்களின் உதவியுடன், கணினி அல்காரிதம் நமது கன்னம், நெற்றி, மூக்கில் ஏற்படும் நுணுக்கமான மாற்றங்களை அடையாளம் காண்கிறது. இந்த மாற்றங்களை ஏற்கனவே இருக்கும் மாடல் உதவியுடன் ஒப்பிட்டு நமது இதய நோய் வருவது குறித்து எச்சரிக்கிறது.

உதாரணமாக, இந்த மாடல் உதவியுடன் உங்கள் முகத்தில் உள்ள தோல் சுருக்கம், கொழுப்புக் கட்டிகள் போன்றவற்றை அடையாளம் கண்டு நம்மை எச்சரிக்கிறது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 80 சதவீத இதய நோயை சரியாக கண்டறிய முடியும். இருப்பினும், 46 சதவீத நபர்களிடம் தவறான அடையாளத்தை கண்டறிந்து அவர்களுக்கு தேவையற்ற கவலைகள் உருவாக வழிவகுத்தது.

இந்த சாதனம் 'மலிவான, எளிமையான, பயனுள்ள' ஒன்றாக இருக்கிறது என்று இந்த ஆய்வை மேற்கொண்ட சீனாவின் இதய நோய்க்கான தேசிய மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த தொழில்நுட்பம இன்னும் வேகமாக வளரும் போது, நம் கையடக்க செல்போன் உதவியுடன் இதய நோயை மிக எளிமையாக கண்டறிய முடியும் என்று இந்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இனி என்ன நடக்கும்?

லாஸ் ஏஞ்சலஸின் குழந்தைகள் மருத்துவமனையின் இதயநோய் நிபுணரான ஜெனிஃபர் மில்லர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொறியாளர்களுடன் சேர்ந்து ஸ்மார்ட்போனில் இணைத்து பயன்படுத்தக்கூடிய எக்கோ கார்டியோகிராம் (echocardiogram) சாதனத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த சாதனம் இதயத்தின் ரத்த ஓட்டத்தை கண்காணிக்க உதவும் என்று கூறுகிறார் ஜெனிஃபர் மில்லர்.

இந்த தொழில்நுட்பங்கள் இன்னும் ஆராய்ச்சி, சோதனை என பல்வேறு நிலைகளில் இருந்தாலும், இதுபோன்ற சில கண்டுபிடிப்புகள் உங்கள் ஸ்மார்ட்போனை மையப்படுத்தி வந்துள்ளன. இதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியும்.

"நீங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவில் உங்கள் விரல் நுனியை வைக்கிறீர்கள், அது உங்கள் ரத்த அழுத்தத்தைக் அளக்க நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தை ஒரு அலையாக மாற்றி ரத்த ஓட்டத்தை கணக்கிடுகிறது."

"இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு," என்கிறார் 'The Smartphone: Anatomy of an Industry' என்ற நூலின் ஆசிரியர் எலிசபெத்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: