டைட்டானிக் கப்பலையே 'மூழ்கடித்த' இடது, வலது குழப்பம் உங்களுக்கும் இருக்கிறதா?

    • எழுதியவர், கெல்லி ஓக்ஸ்
    • பதவி, பிபிசி ஃபியூச்சர்

இது குழந்தைத்தனமான தவறு போலத் தோன்றலாம். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அதிகளவிலான பெரியவர்களுக்கும் இடதுபுறத்தையும் வலதுபுறத்தையும் குழப்பிக் கொள்கிறார்கள். அதனால் இது குறித்துப் புரிந்து கொள்வதற்காக விஞ்ஞானிகள் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர்.

வலதுக்கும் இடதுக்குமான வேறுபாடு

பிரிட்டிஷ் மூளை அறுவை சிகிச்சை நிபுணரான ஹென்றி மார்ஷ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது நோயாளியின் படுக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தார். அவர் சொல்லப் போகும் செய்தி, மருத்துவரின் தவறால் ஏற்பட்டிருந்தது. படுக்கையில் இருந்த நபருக்கு நரம்பில் ஏற்பட்ட பிரச்னைக்காக அறுவை சிகிச்சை ஒன்று தேவைப்பட்டது. அறுவை சிகிச்சையின்போது, அவரது கழுத்தில் கீறல் போட்ட பிறகு தான் தவறான பக்கத்தில் அறுவை சிகிச்சை செய்திருப்பதை, மார்ஷ் உணர்ந்தார்.

மருத்துவத் துறையில் நடக்கும் தடுக்கக்கூடிய தவறுகளில் பெரும்பாலானவை தவறான பக்கத்தில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளே. தவறான கண்களில் ஊசி செலுத்துவது, தவறான மார்பகத்திலிருந்து பயாப்ஸி சோதனை மேற்கொள்வது என வலது இடது குழப்பத்தினால் பல தவறுகள் நடக்கின்றன.

வலது, இடது குறித்து ஏற்படும் குழப்பம் தேவையற்றவை. அது மேலிருந்து கீழ் என்று சொல்வது போல மிக எளிதாக ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும் என்று சிலர் வாதங்களை முன்வைக்கின்றனர். 

சமீபத்திய ஆய்வின்படி வலதிலிருந்து இடதை வேறுப்படுத்திக் கொள்வதில் ஆறு பேரில் ஒருவருக்கு சிக்கல் இருக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

'எனக்கு இந்தப் பிரச்னை இல்லை' என்று கூறும் நபர்களால், சுற்றுப்புறத்தில் இருக்கும் இரைச்சல் போன்ற கவனச் சிதறல்களால் சரியான தேர்வை எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது என்று இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

சிக்கலை அலசும் ஆய்வுகள்

நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்தின் நரம்பு மண்டல உளவியல் பேராசிரியர் இனெக் வான் டெர் ஹாம் கூறுகையில், "யாருக்கும் முன்னும் பின்னும், அல்லது மேலேயும் கீழும் இருப்பவற்றை வேறுபடுத்துவதில் சிரமம் இல்லை. ஆனால் வலமிருந்து இடதுபுறத்தை வேறுபடுத்துவதுதான் சிலருக்குக் கடினமாக இருக்கிறது," என்றார்.

"இதற்குக் காரணம் இடது வலது இரண்டுக்கும் இருக்கும் ஒத்த அமைப்பு தான். நீங்கள் செல்லும் திசையில் இருக்கும் இடது வலது வேறுபாடு, நீங்கள் எதிர் திசையில் பயணிக்கும்போது மாறுகிறது. இதுதான் இந்தக் குழப்பத்திற்கு காரணம்," என்று விளக்கினார் பேராசிரியர் ஹாம்.

இடது-வலது வேறுபாடு உண்மையில் மிகவும் சிக்கலான செயல்முறையாகும், இது நினைவு, மொழி, காட்சி அமைப்பு மற்றும் இடம் சார்ந்து புரிந்துகொள்ளும் உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நடக்கிறது. 

இடது வலது குறித்து சிந்திக்கும் நமது மூளை குறித்த ஆய்வுகள் தொடக்க நிலையில் தான் உள்ளன. 

வடக்கு அயர்லாந்தில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜெரார்ட் கார்ம்லி கூறுகையில், "சிலரால் இயல்பாகவே இடமிருந்து வலம் என்று சிந்திக்காமல் சொல்ல முடியும். ஆனால் மற்றவர்களுக்கு இது ஒரு செயல்பாட்டின் அடிப்படையில் தான் நடக்கிறது," என்றார்.

மருத்துவத் துறையில் தவறான வலது இடது குழப்பத்தால் நடக்கும் தவறான சிகிச்சை குறித்து மருத்துவ மாணவர்கள் மத்தியில் ஆய்வை மேற்கொண்டவர் ஜெரார்ட்.

வலது இடது குழப்பம் எழும்போது இந்த மாணவர்கள் சிலர் தங்களின் கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலை 'L' என்ற ஆங்கில எழுத்து போல வைத்துக் கொண்டு, அதில் எந்த விரலை எழுதப் பயன்படுத்துவது, எந்த விரலால் கிடாரை வாசிப்பது என்று யோசித்து முடிவை எடுக்கிறார்கள் என்று அவரிடம் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலர் தங்களுக்கு எந்தக் கையில் டாட்டூ இருக்கிறது என யோசித்து இந்தச் சிக்கலை தீர்த்துக் கொள்கின்றனர் என்று ஜெரார்ட் கூறினார். 

மற்றுமொரு சிக்கலும் இதில் இருக்கிறது. உங்கள் எதிரில் இருக்கும் நபருடன் உரையாடும்போது, அவருடைய இடது வலது பக்கங்களைப் புரிந்து கொள்ள நம்மில் பலர், நமது மூளையில் அவரின் திசையில் திரும்பி நின்று யோசித்துப் பார்த்து முடிவை எடுக்கிறோம் என்று பேராசிரியர் ஜெரார்ட் கூறினார்.

ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

2020ஆம் ஆண்டில் வான் டெர் ஹாம் மற்றும் அவரது சகாக்கள் வெளியிட்ட ஆராய்ச்சியில், இடது மற்றும் வலது என அடையாளம் காணும்போது சுமார் 15% மக்களால் உறுதியான முடிவுகளை எடுக்க முடிவதில்லை என்று தெரியவந்தது.

இந்த உத்திகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் பேர்கன் வலது-இடது பாகுபாடு சோதனை எனப்படும் ஒன்றைப் பயன்படுத்தினர். பங்கேற்பாளர்கள் தங்கள் கைகளைப் பல்வேறு நிலைகளில் வைத்துக்கொண்டு, தங்களை நோக்கியோ அல்லது விலகியோ இருக்கும் குச்சியுடன் இருக்கும் நபர்களின் படங்களைப் பார்க்க வைக்கப்பட்டனர். 

முதல் சோதனையில், பங்கேற்பாளர்கள் மேஜையில் கைகளை வைத்து அமர்ந்திருந்தனர். "அவர்கள் இருக்கும் திசையில் இருந்து குச்சியைப் பார்த்து எந்தக் கையில் குச்சி இருக்கிறது எனக் கேட்ட கேள்விக்கு பெரும்பாலானோர் எளிதாகவும் வேகமாகவும் விடையளித்தனர். அந்த விடைகள் சரியாகவே இருந்தன," என்று ஹாம் கூறினார்.

சோதனையில் பங்கெடுத்த பங்கேற்பாளர்களிடம், "இடது மற்றும் வலதுபுறத்தை அடையாளம் காண தங்கள் உடலை ஒப்பிட்டு முடிவுகளை எடுக்கிறீர்களா அல்லது மூளையில் சேமிக்கப்பட்ட சில குறிப்புகளைக் கொண்டு முடிவுகளை எடுக்கிறீர்களா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கான பதிலை அறிய ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை முறையை மாற்றினர். இந்த முறை நான்கு வெவ்வேறு காட்சிகளைக் காட்டி, பங்கேற்பாளர்கள் தங்கள் கைகளை அவர்களுக்கு முன்னால் உள்ள மேசையில் குறுக்கே கட்டியவாறு அல்லது நேராக வைத்தவாறு அமர்ந்திருந்தனர். மேலும் சோதனையின்போது அவர்களின் கைகள் வெளியே தெரியும்படியும் அல்லது கருப்புத் துணியால் மூடியும் சோதனைகளை மேற்கொண்டனர்.

ஆனால் இந்த மாற்றங்கள் எதுவும் சோதனை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பங்கேற்பாளர்கள் வலது மற்றும் இடதை வேறுபடுத்த தங்கள் சொந்த உடலைப் பயன்படுத்தும்போது தங்கள் கைகளைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று தெரியவந்தது.

வான் டெர் ஹாமின் சோதனைகளில், வலது இடது வேறுபாட்டை அறிய கைகளைப் பயன்படுத்தும் உத்தியை பெண்கள் அதிகமாகப் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. 

மேலும் பதிலளிப்பதில் பெண்களைவிட ஆண்கள் வேகமாக இருப்பதும் முடிவுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இடது-வலது வேறுபாடு சோதனைகளில் ஆண்கள் ஒட்டுமொத்தமாக சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டும் முந்தைய ஆய்வுகளை இந்தத் தரவு உறுதி செய்யவில்லை எனத் தெரியவந்துள்ளது.

"உங்கள் மூளையின் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்தைவிட சற்று பெரிதாக இருந்தால், உங்களால் வலது-இடது வேறுபாட்டை எளிதாக அடையாளம் காண முடியும்" என்று ஜெரார்ட் கூறுகிறார்.

"குழந்தைகளுக்கு வழியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டால், நீங்கள் அவர்களை உங்கள் முன் சில மீட்டர்கள் நடக்க வைத்து முடிவுகளை எடுக்க வைப்பது, அவர்களைச் சிறந்த வழிகாட்டியாக மாற்றும்" என்று ஹாம் கூறுகிறார்.

பிரான்சில் உள்ள லியோன் நரம்பியல் ஆராய்ச்சி மையத்தின் ஆலிஸ் கோமஸ் மற்றும் சகாக்களின் ஆராய்ச்சி இடது-வலது வேறுபாடு என்பது குழந்தைகள் விரைவாக எடுக்கக்கூடிய ஒன்று என்பதைக் குறிக்கிறது. ஐந்து முதல் ஏழு வயது வரையிலான குழந்தைகளின் உடல் பிரதிநிதித்துவ திறன்களை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட இரண்டு வாரத்திற்கான திட்டத்தை கோமஸ் வடிவமைத்தார்.

இதன்மூலம் பெரும்பாலான குழந்தைகள் எந்தக் கைகளைப் பயன்படுத்தி எழுதுகிறார்கள் என்பதை யோசித்து வலது இடது வேறுபாட்டை அறிகின்றனர் என்பதை கோமஸ் கண்டறிந்தார்.

வகுப்பறைகளில் உடலில் பாகங்கள் குறித்து ஆசிரியர் பாடம் எடுக்கும் போது, குழந்தைகளின் உடல் பாகங்களைக் குறிப்பிட்டு பாடம் எடுக்காமல், படத்தில் இருந்து பாடம் எடுப்பது, வலது இடது குறித்து எடுக்கப்படும் முடிவுகளில் பிரதிபலிக்கிறது, என்று கூறுகிறார் கோமஸ்

வலமிருந்து இடதுபுறத்தை அறிவது அன்றாட வாழ்வில் தேவையாக இருந்தாலும், சில சூழ்நிலைகளில் அது முற்றிலும் அவசியமானதாக இருக்கிறது.

மூளை அறுவை சிகிச்சை நிபுணர் மார்ஷ் தவறான பக்கத்தில் செய்த அறுவை சிகிச்சையை சரிசெய்ய முடிந்தது. ஆனால் தவறான சிறுநீரகத்தை அகற்றுவது அல்லது தவறான கால்களைத் துண்டிப்பது என இந்தத் தவறு நடந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். 

இடது-வலது பிழைகளால் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான விளைவுகளை ஏற்படுத்துவது மருத்துவத்துறை மட்டுமல்ல.

டைட்டானிக் மூழ்குவதற்கு அந்தக் கப்பலை இயக்கும் நபர், இடதுபுறத்திற்கு பதிலாக வலதுபுறமாக திருப்புவது ஒரு காரணமாக மாறலாம்.

"எப்போதும் இடது மற்றும் வலது குறித்த முடிவுகள் அனைவருக்கும் சரியாக அமைந்து விடாது. ஆனால் அத்தகைய முடிவுகளை எடுக்கும் முன் இருமுறை யோசித்து முடிவுகளை எடுப்பது பாதிப்புகளை குறைக்கும்," என்று பேராசிரியர் கோமஸ் நம்புகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: