டான்ஸிங் ஆன் தி கிரேவ்: 32 வருட கொலை மர்மத்தின் அதிர்ச்சிக் கதை

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்திக்காக

"மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு பெண்ணின் கொலை மர்மத்தின் துப்பு துலக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் இன்று எங்களை (ஊடகங்களை) சந்தித்தார். அதனால் நான் அலுவலகத்திற்கு தாமதமாக வந்தேன்."

1994 மார்ச் 28ஆம் தேதி பெங்களூருவில் உள்ள செய்தியறைக்குள் இரவு தாமதமாக நுழைந்தபோது செய்தியாளர் ஒருவர் தனது செய்திப்பிரிவு தலைவரிடம் (ப்யூரோ சீஃப்) இவ்வாறு சொன்னார்.

வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்களை அந்த செய்தியாளர் கொடுத்த போது இந்தக் கதை எவ்வளவு பெரியது என்பதை மதிப்பிடும் முயற்சியில் செய்திப்பிரிவு தலைவர் ஈடுபட்டார்.

ஊருக்குப் புதிதாக வந்திருந்த இந்த செய்தியாளர், “அந்தப் பெண் மைசூர் திவானின் பேத்தி” என்றார்.

பீரோ சீஃப், "எந்த திவான்?" என்று கேட்டார்.

அதற்கு செய்தியாளர், "சர் மிர்ஸா இஸ்மாயில்" என்று பதிலளித்தார்.

சர் மிர்ஸா இஸ்மாயில் 1926-41 வரை மைசூர் திவானாக இருந்தார். கூடவே அவர் பெங்களூரு மற்றும் மைசூரை அலங்கரிப்பதில் பணிபுரிந்தார். 1942 முதல் 1946 வரை சுற்றுலாவுக்கான உள்கட்டமைப்பை உருவாக்கும் பணியையும் அவர் செய்தார்.

பாகிஸ்தானுடனான பற்றுதல் தொடர்பாக நிஜாமுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஹைதராபாத் திவானின் (1947-48) பதவி பறிபோனது.

திவானுக்கு ஷகிரா கலீலி என்ற பெயரில் பேத்தி இருப்பதை முதல் முறையாக அறிந்தோம். இரான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கான இந்திய தூதர் மற்றும் உயர் ஆணையர் போன்ற முக்கிய பதவிகளை வகித்த இந்திய வெளியுறவு சேவை அதிகாரி அக்பர் கலீலியை, ஷகிரா முதலில் திருமணம் செய்து கொண்டார். அவர் மத்திய கிழக்கின் நிபுணராகவும் இருந்தார்.

மூன்றாண்டுகள் பழமையான காணாமல் போன புகார்

ஷகிராவின் மகள் சபா கலீலி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அளித்த ’காணாமல் போன புகார்’ வழக்கை தீர்த்து விட்டதாக காவல்துறை பெருமையுடன் அறிவித்தது.

“காணாமல் போன புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையைக் கண்டித்து அவர் என் அலுவலகத்திற்கு வந்தபோதுதான் இந்தப் பெண்ணை நான் முதன்முதலில் சந்தித்தேன்,”என்று போலீஸ் கமிஷனர் கோதண்டராமையா செய்தியாளரிடம் அன்றிரவு கூறினார்.

புகார்தாரர் சபா கலீலி அலுவலகத்தை அடைந்ததும் சத்தமாக குரல் கொடுக்க ஆரம்பித்தார். பின்னர் காவல் கமிஷனர் கோதண்டராமையா மற்றும் பிற காவலர்கள் முன்னிலையில் சத்தமாக அழத் தொடங்கினார்.

அவர் அமைதியடைந்தவுடன், தனது தாயைப் பற்றிய கதையையும், அவரை கண்டுபிடிக்க கடந்த மூன்று ஆண்டுகளாக தான் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் விவரித்தார்.

1991 ஏப்ரல் 13 ஆம் தேதி, ஷகிரா கலீலி தனது தாயார் கௌஹர் தாஜ் நமாசியை சந்தித்தார். ஆறு நாட்களுக்குப் பிறகு சபா, ஷகிராவை சந்தித்தார். 1991 மே 28 அன்று, ஷகிராவின் வீட்டு வேலைகளில் உதவிடும் ஜோஸ்பின் மற்றும் வீட்டு உதவியாள் ராஜுவும் அவரைப் பார்த்தனர். ஷகிராவை கடைசியாகப் பார்த்தது இவர்கள்தான்.

தனது தாயை அடையும் சபாவின் முயற்சிகளைத் தடுக்கும் வேலையை சுவாமி ஷ்ரத்தானந்த் என்ற முரளி மனோகர் மிஷ்ரா செய்தார். ஷகிரா அக்பர் கலீலியை விவாகரத்து செய்த பிறகு ஷ்ரத்தானந்தை மணந்தார்.

மும்பையிலிருந்து சபா போன் செய்யும் போதெல்லாம், ஷ்ரத்தானந்த் அவரிடம் ஏதாவது ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். சில சமயம் ஷகிரா ஒரு பெரிய வைர வியாபாரியின் திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்றதாகச் சொல்வார். சில சமயம் அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் என்று சொல்வார் அல்லது நிறைய சொத்து இருப்பதால், வருமான வரித்துறைக்கு பயந்து வெளியே வர விரும்பவில்லை என்று கதை சொல்வார்.

இதனால் அவர் சபா ஷ்ரத்தானந்தை சந்தேகிக்கத் தொடங்கினார். தனது தாயார் காணாமல் போனதற்கு அவர்தான் காரணம் என்று நினைக்கத்தொடங்கினார்.

அக்பர் கலீலியிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு சபா மட்டுமே அவரை சந்திக்க அடிக்கடி பெங்களூரு வந்து செல்வது வழக்கம். ஷகிரா ஷ்ரத்தானந்தை திருமணம் செய்த பிறகு தனது நான்கு மகள்கள் மற்றும் குடும்பத்தினருடனான உறவை முறித்துக் கொண்டார்.

ராம்பூரின் பேகம் ஷ்ரத்தானந்தை கலீலிகளுக்கு அறிமுகப்படுத்தியபோது ஷ்ரத்தானந்த் ரிச்மண்ட் சாலையில் உள்ள அவர்களது பங்களாவில் வசிக்க வந்தார். ஏனென்றால் அவர் சொத்து விவகாரங்களைக் கவனித்து வந்தார். கூடவே அவர்களது சொத்துக்கள் தொடர்பான சில பிரச்னைகளையும் தீர்த்து வைத்தார்.

அக்பர் கலீலி அந்த நாட்களில் இரானில் பணிபுரிந்தார். அந்த நாடுகளின் உள்நாட்டு நிலவரங்கள் காரணமாக பெரும்பாலான தூதர்களால் தங்கள் குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல முடியவில்லை.

காலப்போக்கில் ஷ்ரத்தானந்த் ஷகிராவுக்கு இடையே நெருக்கம் அதிகரித்தது. ஷகிரா ஒரு மகனுக்காக ஏங்கிக்கொண்டிருப்பதையும், அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்யத்தயாராக இருப்பதையும் ஷ்ரத்தானந்த் அறிந்திருந்தார். இதை சாத்தியமாக்கும் சில சக்திகள் தன்னிடம் இருப்பதாக அவர் ஷகிராவிடம் கூறினார்.

காவல் ஆணையர் பி. கோதண்டராமையா இந்த வழக்கை சிசிபியிடம் (மத்திய குற்றப்பிரிவு) ஒப்படைத்தபோது ’காணாமல் போன புகாரின்’ விசாரணை முன்னேற்றம் கண்டது.

சிசிபிக்கு சிக்கல்

இந்த வழக்கை உங்கள் குழுவில் யார் தீர்த்தார்கள்? இந்த கேள்விக்கு பதிலளித்த காவல்துறை ஆணையர் கோதண்டராமையா தொலைபேசியில் பலமாக சிரித்தபடி, "ஊடகங்களில் உள்ள உங்கள் சகாக்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்" என்று கூறினார்.

அப்போது செய்தியாளர் சந்திப்பின் விவரங்களை கோதண்டராமையாவின் சக ஊழியர் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.

சிசிபி குழு, நீண்ட காலம் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டது. அதேவேளை, போலீஸ் காவலர் மகாதேவ் ஒரு பழைய தந்திரத்தை கடைப்பிடிக்க முடிவு செய்தார்.

”ஷகிரா வீட்டின் உதவியாளரை பிரிகேட் ரோட்டில் உள்ள பிரபல இடத்துக்கு குடிப்பதற்காக அவர் அழைத்துச் சென்றார். (அந்த நாட்களில் அரக் என்ற நாட்டு மதுபானம் அங்கு விற்கப்பட்டது). இந்த வழக்கில் ஷ்ரத்தானந்திற்கு தொடர்பு இருப்பது எங்கள் குழுவுக்கு தெரிய வந்தது. நாங்கள் அவரை கண்காணிக்க ஆரம்பித்தோம்,” என்று கோதண்டராமையா செய்தியாளரிடம் கூறினார்.

நிறைய மது அருந்திவிட்டு, ராஜு மகாதேவிடம், ”பங்களாவுக்குப் பின்னால் உள்ள ஒரு சிறிய வீட்டின் படுக்கையறைக்கு முன் தரையில் குழி தோண்டப்பட்டுள்ளது. அதில் தண்ணீர் நிரப்பும் வகையில் அது தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சிவாஜிநகரில் இருந்து ஒரு பெரிய பெட்டி வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பெட்டியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்தது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அதை எளிதாக நகர்த்த முடியும்,” என்று கூறினார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ராஜு சக ஊழியரிடம், "நான் விருந்தினர் மாளிகையிலிருந்து அந்தப் பெட்டியைக் கொண்டு வர நான்கு பேரை அழைத்தேன்," என்று சொன்னார்.

”செயின்ட் மார்க்ஸ் சாலையில் அமைந்துள்ள வங்கியின் லாக்கர்களை அணுக ஷகிரா வழங்கிய ஜெனரல் பவர் ஆஃப் அட்டார்னியை ஷ்ரத்தானந்த் பயன்படுத்தினார்,” என்று விசாரணை அதிகாரி வீரய்யா பின்னர் செய்தியாளரிடம் கூறினார்.

"அவர் பலமுறை வங்கிக்குச் சென்றார். ஷகிராவுக்கு அவரது எண்ணம் மீது சந்தேகம் ஏற்பட்டது. 1991 மே மாதம் தனது சொத்துக்கள் எல்லாவற்றின் கூட்டுக் கணக்குதாரர் என்ற இடத்திலிருந்து ஷகிரா அவரது பெயரை நீக்கினார். இது அவர் காணாமல் போவதற்கு முன்பு நடந்த ஒரு விஷயம்," என்று வீரய்யா கூறினார்.

இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பெங்களூரைச் சேர்ந்த பிரபல குற்றவியல் வழக்கறிஞர் சி.வி.நாகேஷ் நியமிக்கப்பட்டார்.

"சபா மற்றும் மற்ற மகள்களுடனான அவரது நெருக்கம் ஷ்ரத்தானந்தை தொந்தரவு செய்யத் தொடங்கியது" என்று நாகேஷ் அப்போது இந்த செய்தியாளரிடம் தெரிவித்தார்.

ஷ்ரத்தானந்த் தானும் ஷகிராவும் வசித்த வீட்டைத் தவிர மற்ற எல்லா சொத்துக்களையும் பெரும் தொகைக்கு விற்க ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்த ஒப்பந்தம் எவ்வளவு பெரிய தொகைக்கு செய்து கொள்ளப்பட்டது என்று இந்த செய்தியாளர் கேட்டார்.

"உங்கள் நாற்காலியில் இருந்து விழுந்து விடாதீர்கள். அது சுமார் ஏழு கோடி ரூபாய்" என்றார் கோதண்டராமையா. (பெங்களூருவில் சொத்து விலைகள் அந்த நேரத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு உயரவில்லை. அதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.)

இதைத்தொடர்ந்து, ஷ்ரத்தானந்திடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஷகிராவை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

போலீஸ் முன்னிலையில் நடந்த மறுஒத்திகை

கொலையை ஒப்புக்கொண்ட பிறகு ஷ்ரத்தானந்த், புலனாய்வுக் குழுவால் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

"சக்கரங்கள் இருந்த மரப்பெட்டியைத் தள்ளிய இடத்தை அவர் எங்களுக்குக் காட்டினார். மனைவிக்கு தினமும் டீ போட்டு,அந்த டீயில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்தார்" என்று வீரய்யா எங்களிடம் கூறினார்.

"பின்னர் ஷகிராவை மெத்தையுடன் பெட்டிக்குள் தள்ளி மேல் பலகையை மூடி விட்டார். படுக்கையறையில் ஜன்னலுக்கு கீழே உள்ள சுவரை அவரே உடைத்து, பின்னர் பெட்டியை திறந்த குழியில் தள்ளிவிட்டார். அவர் ஏற்கனவே இந்த குழியை தயார் செய்திருந்தார்,” என்று வீரய்யா செய்தியாளரிடம் கூறினார்.

ஷகிராவை அவர் உயிருடன் புதைத்து விட்டார். தடயவியல் குழுவினர் இதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பு முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஷ்ரத்தானந்த் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இங்கு வந்ததும் அவர் பெட்டியைத் தள்ளிய குழியை மூடியிருந்த கற்களில் சாக் மூலம் குறியிட்டார்.

போலீஸ் குழு பெட்டியை அகற்றி, அதில் மண்டையோடு கூடிய எலும்புக்கூடு இருந்ததை கண்டுபிடித்தனர். தடயவியல் அறிவியல் ஆய்வகம் (FSL) அடையாளம் காண இது ஒரு முக்கியமான ஆதாரமாகும்.

கிரானியோஃபேஷியல் நுட்பத்தின் உதவியுடன், ஷகிராவின் படம் மண்டை ஓட்டின் மேல் பொருத்தப்பட்டது. இந்த புகைப்படம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறரால் அங்கீகரிக்கப்பட்டது. அது ஷகிராதான் என்று அவர்கள் உறுதி செய்தனர்.

டிஎன்ஏ சோதனையும் அது ஷகிராதான் என்று உறுதிப்படுத்தியது. ஷகிராவின் விரல்களில் இருந்த மோதிரங்களை அவரது தாயார் கௌஹர் தாஜ் நமாசி அடையாளம் காட்டினார்.

நகரின் முக்கிய குற்றவியல் வழக்கறிஞர்களில் ஒருவரான சி.வி.நாகேஷை சிறப்பு அரசு வழக்கறிஞராக கர்நாடக அரசு நியமித்தது.

இந்த வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் 2005, மே 21ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கியது. அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நாகேஷ், “அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்” என்றார்.

”இது என் அம்மாவின் மரணத்திற்கு இழப்பீடு அல்ல. என் தாயை என்னால் இனி பெற முடியாது. ஆனால் நீதி கிடைத்துள்ளது.'' இவ்வாறு கூறி சபா கண்ணீர் விட்டார்.

வழக்கின் பின்னணி

கர்நாடக உயர் நீதிமன்றம் 2005 செப்டம்பர் 20 ஆம் தேதி மரண தண்டனையை உறுதி செய்தது. நீதிபதிகள் எஸ்.ஆர்.பன்னூர் மட், ஏ.சி.காபின் ஆகியோர் அடங்கிய அமர்வு, " தனது மனைவியைக் கொன்று அவரது மதிப்புமிக்க சொத்துகளைப் பயன்படுத்தி தன்னை வளப்படுத்திக்கொள்வது என்ற உள்நோக்கம் குற்றம்சாட்டப்பட்டவருக்கு உள்ளது. எங்கள் கருத்துப்படி இந்த வழக்கு அரிதான வழக்குகளில் ஒன்றாகும்,” என்று தெரிவித்தது.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகளும் விசாரித்தன.

மொத்தம் 8 நீதிபதிகள் வழக்கை விசாரித்து அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தனர். மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றலாம் என்று ஒரு நீதிபதி கடைசியில் நினைத்தார். ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஷ்ரத்தானந்த் தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கவேண்டும்.

இந்நிலையில், மீண்டும் தற்காலிக பரோல் பெறும் ஷ்ரத்தானந்தின் முயற்சி முறியடிக்கப்பட்டது. நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா, அஷானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, கடந்த வாரம் இந்த மனுவை நிராகரித்தது.

ஷகிரா கலீலியின் கதை இப்போது ஓடிடி தளத்தில் குற்ற ஆவணத் தொடராக தயாரிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: