காணொளி: உமர் காலித்துக்கு ஜாமீன் மறுப்பு - உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, உமர் காலித்துக்கு ஜாமீன் மறுப்பு
காணொளி: உமர் காலித்துக்கு ஜாமீன் மறுப்பு - உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

டெல்லி கலவர சதி வழக்கில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. எனினும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் பங்கு குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

உமர் காலித் உட்பட குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும், குடியுரிமைத் திருத்தச் சட்ட போராட்டங்களின் பேரில், 2020 பிப்ரவரியில் டெல்லியில் வகுப்புவாத வன்முறையைத் தூண்ட சதி செய்தனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாணவர் தலைவர் உமர் காலித் மீது இரண்டு FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறையில் உள்ளார். ஒரு வழக்கில், உமருக்கு ஏப்ரல் 2021இல் பிணை வழங்கப்பட்டது. இரண்டாவது வழக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் பிணை மனுவை நிராகரித்திருந்தன.

கலவரங்கள் நடந்தபோது தான் டெல்லியில் இல்லை, எந்த தூண்டிவிடும் பேச்சுகளையும் பேசவில்லை அல்லது வன்முறையைத் தூண்டவில்லை என உமர் காலித் கூறுகிறார்.

பெயரறியாத சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவர் இணைந்த வாட்ஸ்அப் குழுக்கள், அவர் செய்த தொலைபேசி அழைப்புகள், போராட்டங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் கலந்துகொண்டது ஆகியவற்றின் அடிப்படையில், உமர் காலித் கலவரங்களைத் திட்டமிட்டு தொலைவிலிருந்து கண்காணித்தார் என அரசு குற்றம்சாட்டுகிறது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஓர் ஆண்டுக்கு பிறகு அல்லது சாட்சிகளிடம் விசாரணை முடிந்த பிறகு, உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் மீண்டும் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு