எவரெஸ்ட் மலையின் வடிவம் மாறுகிறதா? உயிரிழப்புகள் தொடர்வது ஏன்?

எவரெஸ்ட், இமயமலை, பருவநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜோயல் குவின்டோ
    • பதவி, பிபிசி நியூஸ்

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைவதற்குமுன் ஆஸ்திரேலிய பொறியாளர் ஜேசன் கென்னிசன் தன் தாயிடம் வீடியோ காலில் பேசினார். திரும்பி வந்ததும் சந்திப்பதாகக் கூறினார்.

ஆனால் அதுதான் அவரது கடைசி அழைப்பு.

கென்னிசன் தனது வாழ்நாள் கனவை நிறைவேற்றச் சென்றிருந்தார்.

ஆனால் சிகரத்திலிருந்து இறங்கும்போது, 40 வயதான அவர், மலைகளில் வரும் காய்ச்சல் ஏற்பட்டு இறந்துபோனார்.

வரலாறு காணாத மரணங்கள்

கென்னிசனின் மரணம், இந்த வசந்தகால மலையேற்ற சீசனில் நிகழ்ந்த 12 மரணங்களில் ஒன்று. இதுவரை ஐந்து பேர் காணாமல் போயிருக்கின்றனர்.

சமீபகாலங்களில் இதுதான் மிக ஆபத்தான சீசன் என்று கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு எவரெஸ்டில் ஏறிய 11 பேர் இறந்தனர்.

இவ்வருடம் நிகழ்ந்த இறப்புகளுக்கு மலையிலிருந்து தவறி விழுந்ததும், உயரங்களில் ஏற்படும் காய்ச்சலும் காரணங்களாகக் கூறப்படுகிறது.

இம்மரணங்கள், இரண்டு விஷயங்களின் மீது கவனத்தைத் திருப்பியிருக்கின்றன:

1) நேபாள அரசு அதிகப்படியான மலையேற்ற அனுமதிகள் வழங்குவதால் மலையில் ஏற்படும் நெரிசல்.

2) பருவநிலை மாற்றத்தினால் எவரெஸ்டில் ஏற்படும் மாறுதல்கள்.

இமயமலையில் ‘போக்குவரத்து நெரிசல்’

எவரெஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிகப்படியான மக்கள் மலையேறுவது, இமாலய மலைத்தொடரின் ஏறும் வழிகளில் ‘போக்குவரத்து நெரிசல்களை’ ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது

எவரெஸ்டிற்கான பயணம் பெரும்பாலும் நேபாளத்திலிருந்தே துவங்குகிறது.

கோவிட் பெருந்தொற்றின்போது அடக்கி வைத்திருந்த பயண வேட்கையின் விளைவாக, ஏராளமானோர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி கோரவும், நேபாள அரசு, இம்முறை 900 அனுமதிகளை வழங்கியதாக நேபாள மக்கள் கூறுகின்றனர்.

இத்தனை மக்கள் மலையேறுவது, இமாலய மலைத்தொடரில் ஏறும் வழிகளில் ‘போக்குவரத்து நெரிசல்களை’ ஏற்படுத்துவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மலையேற்ற நிறுவனமான கார்ரெட் மாடிசன் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியது.

சிகரத்தை அடைவதற்கு, சுமூகமான வானிலை, மிதவேகமான காற்று ஆகியவை முக்கியம். 8,000 மீட்டர் உயரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் இருக்கும், எனவே மலையேறுபவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு செல்வர்.

ஆனால், அனுபவமற்ற மலையேறிகள் வரிசைகளுக்கு இடர்செய்வதன்மூலம் மலையேற்றத்திற்கு இடையூறு விளைவிக்கின்றனர். தாமதிப்பதனால், ஆக்சிஜன் சிலிண்டர்கள் தீர்ந்துபோகின்றன.

அதி உயரங்கள், மனித உடலில் அதிக திரவச் சுரப்பைத் தூண்டுகின்றன. இது நுரையீரல் மற்றும் மூளையில் வீக்கத்தை உண்டாக்கி உடல்சோர்வு, மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

அதிக வருவாய் வேண்டி பாதுகாப்பு கைவிடப்படுகிறதா?

எவரெஸ்ட் மலையேற்றம் நேபாளத்தின் முக்கிய வருவாயாக உள்ளது. அனுமதிக் கட்டணம் கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் ரூபாய். இதற்குமேல், மலையேறும் ஒவ்வொருவரும் இதர அனுமதிக் கட்டணங்கள், வாகன எரிபொருள், உணவு, வழிகாட்டிகள் மற்றும் பயணத்திற்கென சுமார் 22 லட்ச ரூபாய் செலவழிக்கின்றனர்.

அனுமதிக் கட்டணத்தைச் செலுத்தக்கூடிய அனைவருக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் நேபாள அரசின்மீது உண்டு.

எவரெஸ்டின் மிக ஆபத்தான பகுதிகளில் பயிற்சியற்றவர்களையும் சில நேபாள நிறுவனங்கள் அழைத்துச்செல்வதாகக் கூறுகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பென்க்ளோ மலையேற்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஏட்ரியன் பல்லிங்கர்.

ஆனால் இக்குற்றச்சட்டை மறுக்கிறார் நேபாள சுற்றுலாத்துறையின் இயக்குநர் யுபராஜ் கடிவாடா. மருத்துவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கொண்ட குழுவொன்று எவரெஸ்ட் அடிவாரத்தில் நிறுத்தப்படும் என்று அவர் கூறினார். “மலையேறுபவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம், கூட்டத்தைக் கட்டுப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றார்.

ஆஸ்ட்ரியாவில் ஒரு சுற்றுலா நிறுவனம் நடத்தும் லூகாஸ் ஃபுர்டென்பாக், ஆக்சிஜன் சிலிண்டர்களின் இருப்பு முக்கியமானது என்கிறார். “அத்தியாவசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உபகரணங்கள் மூலம் எவரெஸ்டில் நிகழும் பல மரணங்களைத் தடுக்க முடியும்,” என்கிறார் அவர்.

உருகும் பனிப்பாறைகள்

எவரெஸ்ட், பருவநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பருவநிலை மாற்றத்தின் விளைவுகள், பனிப்பரப்பைவிட பாறைகளே அதிகம் தெரியும்படிச் செய்கின்றன

இவ்வருடம் பனிச்சரிவுகளினால் மரணங்கள் ஏற்படவில்லை. ஆனால் பனிச்சரிவுகளே சமீப வருடங்களில் தோராயமாக 40% மரணங்களுக்குக் காரணம் என்கிறது ‘தி ஹிமாலயன் டேட்டாபேஸ்’.

2014ல் ஒரு பனிச்சரிவில் 16 பேர் இறந்தனர், இது இமயமலைத்தொடரின் நவீன வரலாற்றில் மிக மோசமான விபத்தாகக் கருதப்படுகிறது.

மேலும், அதிகரிக்கும் வெப்பநிலைகள் பனிப்பறைகளை உருக்கிக் குளங்களாக்குகின்றன. விஞ்ஞானிகள், எவரெஸ்ட் அமைந்திருக்கும் திபெத்தியப் பீடபூமியின் வெப்பநிலை கடந்த 40 வருடங்களில் 2C அதிகரித்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

பனி உருகும்போது, பனிப்பாறைகளின்மீது சூரிய வெப்பம்பட்டு, அவை உருகி வழிகின்றன, அல்லது காற்றில் ஆவியாகின்றன, என்று மெய்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கூறுகிறது.

பருவநிலை மாற்றத்தின் விளைவுகள், பனிப்பரப்பைவிட பாறைகளே அதிகம் தெரியும்படிச் செய்கின்றன. பனிச்சரிவுகளை கணிக்க இயலாததாக்குகின்றன. சீசனின் போது 1,000 பேர் இருக்கக்கூடிய அடிவார முகாமை ஸ்திரமற்றதாக்குகின்றன, என்றும் அந்த ஆராய்ச்சி கூறுகிறது.

மாறிவரும் மலையின் வடிவம்

மாறிவரும் நிலப்பரப்பு கைதேர்ந்த வழிகாட்டிகளையும் குழப்புகிறது.

பழம்பெரும் வழிகாட்டி பசங்க் யாஞ்சீ, “ஒவ்வொரு முறை திரும்பிச்செல்லும் போதும் மலை வேறுமாதிரி தெரிவதாகக் கூறுகின்றனர். போனவருடம் பனி இருந்த இடத்தில், இப்போது நீர் இருக்கிறது. உறைபனி இருந்த இடத்தில் இப்போது மென்பனி உள்ளது,” என்கிறார்.

இவ்வருடம் பருவம் தப்பிய பனிப்பொழிவும் இருந்தது என்று நேபாள மலையேற்றச் சங்கத்தின் தலைவர் ஆங்க் ஷெரிங்க் ஷேர்ப்பா ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறினார்.

“பருவநிலை மாற்றங்கள் குறிப்பிடத்தக்கனவாய், முன்னெப்போதும் இல்லாதனவாய் இருக்கின்றன. அடுத்த 5 முதல் 10 வருடங்களில் புவி வெப்பமயமாதல் எவரெஸ்ட் ஏறும் வழியை எப்படி மாற்றும் என்பதை இனிதான் மெல்ல மெல்லப் பார்க்கப்போகிறோம்,” என மேலும் தெரிவித்தார் ஃபுர்டென்பாக்.

சிகரத்தின் வசீகரம் தொடர்கிறது

எவரெஸ்ட், மீட்பு
படக்குறிப்பு, ஒரு நேபாள வழிகாட்டி, ஆபத்தான பகுதியில் சிக்கியிருந்த மலேசிய மலையெறி ஒருவரை 8,500மீட்டர் உயரத்திலிருந்து ஆறு மணிநேரம் நடந்து மீட்டு வந்தார்

என்ன இருப்பினும், இம்முறை, அசாத்தியமான சாதனைகளும், மீட்புகளும் நிகழ்ந்தன.

சென்ற மாதம் கெல்ஜே ஷெர்பா என்ற நேபாள வழிகாட்டி, ஆபத்தான பகுதியில் சிக்கியிருந்த மலேசிய மலையேறி ஒருவரை 8,500மீட்டர் உயரத்திலிருந்து ஆறு மணிநேரம் நடந்து மீட்டு வந்தார்.

காமி ரீத்தா ஷெர்பா என்ற நேபாள மலையேறி 28வது முறையாக எவெரெஸ்டில் ஏறிச் சாதித்து, ‘எவெரெஸ்ட் மனிதன்’ என்ற புகழை அடைந்திருக்கிறார்.

அதற்கு முன், ஹரி புத்தா மாகர் என்ற இரண்டு கால்களும் இல்லாத முன்னாள் ராணுவ வீரர் செயற்கைக் கால்களைப் பொருத்திகொண்டு எவெரெஸ்டில் ஏறி, உலகிலேயே இச்சாதனையை செய்த இரண்டாவது கால்களற்ற நபர் என்ற பெருமையை அடைந்திருக்கிறார்.

துயரங்களும் சாதனைகளும் சில நாட்களுக்குள் மாறி மாறி வருவது, எவரெஸ்டில் ஏறுவதற்கு பயிற்சி எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிறது, என்கின்றனர் நிபுணர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: