You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பூமியை விட்டு விலகும் நிலவு - இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் என்ன ஆகும்?
- எழுதியவர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்
- பதவி, முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு
பூமியைவிட்டு விலகிச் செல்லும் நிலா: இதனால் என்ன ஆபத்து
நிலா ஆண்டுதோறும் 3.78 செ.மீ என்ற அளவில் பூமியைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. இந்த உண்மை சமீபத்தில்தான் உறுதி செய்யப்பட்டது.
இதற்கு என்ன காரணம்? பூமியை விட்டு நிலா விலகிச் செல்வதால் என்ன ஆபத்து? இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
பூமியில் இருந்து பல்வேறு விண்கலங்கள் நிலாவில் தரையிறக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பாக சோவியத் அதன் லூனா விண்கலத்தை அனுப்பியது. அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் சென்று தரையிறங்கியது.
அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலாவில் கால் பதித்தார்கள். இப்படியான பயணங்களின்போது ரெட்ரோ ரிஃப்ளக்டர் (Retroreflector) என்றழைக்கப்படும் ஒரு கண்ணாடிப் பொருளை அங்கு பொருத்தினார்கள். அதன் மூலமாக நிலாவுக்கும் பூமிக்குமான தொலைவை விஞ்ஞானிகள் அளந்தார்கள்.
நிலாவில் ஒரு கண்ணாடியைக் கொண்டு போய் வைப்பதன் மூலம் எப்படி பூமிக்கும் அதற்குமான தொலைவை அளக்க முடியும்?
நிலா, பூமிக்கு இடையிலான தொலைவை கணக்கிடுவது எப்படி?
கடந்த 1969ஆம் ஆண்டு அப்பல்லோ 11 1970இல் லூனா 17, 1971 அப்பல்லோ 14, 15, 1973இல் லூனா 21. இப்படியாக நிலவுக்குச் சென்ற ஐந்து விண்கலங்களும் நிலாவின் தரைப்பரப்பில் கண்ணாடி போன்ற அந்த லேசர் பிரதிபலிப்பான் கருவியை நிலவில் அமைத்தார்கள்.
அந்தக் கருவியை வைத்து நிலாவின் தொலைவை எப்படித் துல்லியமாக அளவிடுகிறார்கள்?
நிலாவில் லேசர் பிரதிபலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு பூமியில் இருந்து துடிப்பான லேசர் ஒளிக்கற்றையை நிலவை நோக்கி அனுப்புவார்கள்.
அந்த லேசர் ஒளிக்கற்றை நிலாவிலுள்ள பிரதிபலிப்பானில் பட்டுப் பிரதிபலித்து மீண்டும் பூமியை நோக்கித் திரும்பி வரும்.
பூமியிலிருந்து நிலாவுக்குச் செல்ல எடுத்துக்கொண்ட நேரம், அங்கிருந்து திரும்பி வருவதற்கு எடுத்துக்கொண்ட நேரம், இந்த இரண்டையும் வைத்து ஒளி பூமியிலிருந்து சென்று திரும்ப எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
நிலவுக்கு அனுப்பப்பட்ட அந்த ஒளியின் வேகம் என்ன என்பது அனுப்பியவர்களுக்குத் தெரியும். ஆகவே, ஒளியின் வேகத்தையும் அது நிலவுக்குச் சென்று, திரும்ப எடுத்துக்கொண்ட நேரத்தையும் வைத்து, பூமிக்கும் நிலவுக்குமான தொலைவைத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.
நிலா, பூமியை விட்டு விலகிச் செல்வது எப்படி உறுதியானது?
நிலா பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. ஆகவே இரண்டுக்கும் இடையிலான தொலைவு ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும்.
அதன்படி, அதிகபட்ச தொலைவில் இருக்கும்போது இரண்டுக்கும் இடையே 406,731 கி.மீ தூரம் இருக்கும். குறைந்தபட்சம் தொலைவில், இரண்டுக்கும் இடையே 364,397 கி.மீ தூரம் இருக்கும். இரண்டுக்கும் இடையிலான சராசரி தொலைவு 384,748 கி.மீ.
மேலே பார்த்த லேசர் ஒளிக்கற்றையை தினமும் நிலவுக்கு அனுப்பி, தொலைவைக் கணக்கிட்டுக் கொண்டே வந்தால், நிலா, பூமிக்கு இடையிலான தொலைவு குறித்த தினசரி தரவுகள் கிடைக்கும்.
பல ஆண்டுகள் இதுபோல் தரவுகளைச் சேகரித்து, அதன் சராசரியைக் கணக்கிட்டால், பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவு மாறி வருகிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அதன்படி இரண்டுக்கும் இடையிலுள்ள தூரம் மாறிக்கொண்டு வருவதாகத் தற்போது உறுதி செய்துள்ளனர்.
தயாரிப்பு: க. சுபகுணம்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: சாம் டேனியல்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)