You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கரையை கடக்கத் தொடங்கிய 'மோன்தா' புயல் - தற்போது என்ன நிலை?
வங்கக்கடலில் தீவிர புயலாக உருவெடுத்துள்ள மோன்தா புயல் கரையை கடக்கத் தொடங்கியது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 17 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல், தற்போது மச்சிலிப்பட்டினத்திலிருந்து 120 கிமீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 110 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து 220 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக ஆந்திரப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
புயல் முழுமையாகக் கரையைக் கடக்க 3-4 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
இது காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கடற்கரையில் மணிக்கு 90-100 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என ஆந்திரப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆந்திரா, ஒடிசா, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சூறாவளி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பிரகார் ஜெயின், "மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு" அறிவுறுத்தியுள்ளார்.
"அக்டோபர் 28ஆம் தேதி இரவு நேரத்தில் காக்கிநாடாவைச் சுற்றி ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை மோன்தா புயல் கடக்கும். அப்போது மணிக்கு 90–100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். அது மணிக்கு 110 கிலோமீட்டர் வரையிலும் வேகமடையலாம்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் எம். மொஹபத்ரா, மோன்தா புயல் தாக்கம் குறித்து ஆங்கில செய்தி சேனலான என்டிடிவி-யிடம் பேசுகையில், "புயலின் தாக்கம் பெரும்பாலும் ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும். பின்னர் அது ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாட்டைப் பாதிக்கும். அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்" என்று கூறினார்.
ஆந்திராவில் என்ன நிலை?
ஆந்திரா மாநில அரசு அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இது குறித்துப் பேசிய ஆந்திரப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பிரகார் ஜெயின், "மோன்தா புயல் 1419 கிராமங்களையும் 44 நகராட்சிகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது. அந்தப் பகுதிகளில் ஏற்கனவே 2194 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் மக்களை மறுவாழ்வு மையங்களுக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. 3,465 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
ஆந்திராவில் மோன்தா புயல் காரணமாக தெற்கு மத்திய ரயில்வே பல ரயில்களை ரத்து செய்துள்ளது. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இயக்க திட்டமிடப்பட்ட மொத்தம் 67 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆந்திர உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா, "மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும், அவசரநிலையைத் தவிர்த்து, வேறு காரணங்களுக்காக வெளியே வர வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
புயல் காரணமாக, விஜயவாடா விமான நிலையத்திலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கைப்படி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு விவரம்
மோன்தா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (28/10/2025) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மோன்தா புயல் எதிரொலியாக சென்னை, எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தமிழ்நாட்டின் கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களிலும், புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இரு துறைமுகங்களிலும் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
அக்டோபர் 29-ஆம் தேதி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆயுவு மையம் தெரிவித்திருக்கிறது. இன்றும் நாளையும் தமிழ்நாட்டு கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். அது மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தையும் எட்டலாம்.
ஆகவே, தமிழ்நாட்டு மீனவர்கள் அக்டோபர் 29-ஆம் தேதி வரை கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் மழை பெய்திருக்கிறது?
கடந்த 24 மணி நேரங்களில் தமிழ்நாட்டில் 16 இடங்களில் கனமழையும், ஒரு இடத்தில் மிக கன மழையும் பெய்துள்ளது என்றும், எண்ணூரில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பெய்துள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி செந்தாமரைக்கண்ணன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.
ஆந்திராவில் 'நிலச்சரிவு' எச்சரிக்கை
மோன்தா புயல் இன்று ஆந்திராவில் கரையைக் கடப்பதால் அங்கு சூறாவளிக் காற்றுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 17 கடலோர மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஏனாம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய அதிகனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆந்திரா, ஏனாம் மற்றும் ராயலசீமா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசுமென்றும், அது மணிக்கு 80 கிலோமீட்டர் வரை வேகமடையும் என்றும் வானிலை ஆயுவு மையம் எச்சரிக்கிறது. இதே புயல் இன்றே மணிக்கு 90-100 கிலோமீட்டர் வேகத்தை அடையலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஒருசில மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் என்றும், கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு