தமிழ்நாட்டு பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவது ஏன்?

    • எழுதியவர், சுசீலா சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சில தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் டெல்லியில் உள்ள பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு NFHS-5 தெரிவிக்கிறது. NFHS-5 மற்றும் NFHS-4 தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் டெல்லியில் உள்ள பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளது தெரியவருகிறது.

 ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கவுன்சில் ஃபார் சோஷியல் டெவலப்மென்ட் அமைப்பு, NFHS-5 தரவுகளின் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது.

”NFHS-4 மற்றும் NFHS-5 ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இந்த புள்ளிவிவரங்கள் மிகவும் கவலையளிக்கின்றன. பல இடங்களில் பெண்களின் உடல் பருமன் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 40.5%, கேரளாவில் 38.2%, ஆந்திராவில் 36.3%, புதுச்சேரியில் 46.3% அதிகரிப்பு காணப்படுகிறது,” என்று சமூக மேம்பாட்டு கவுன்சிலில் ஆராய்ச்சி உறுப்பினராக பணிபுரியும் முகமது ஷாஹித் கூறுகிறார்.

அதே நேரத்தில், 15-49 வயதுக்குட்பட்ட ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளதாகவும் தரவு கூறுகிறது.

ஆனால் தென் மாநில பெண்களிடையே மட்டும்தான் உடல் பருமன் அதிகரித்துள்ளது என்று சொல்லமுடியாது. டெல்லியில் 41.4% ஆகவும், பஞ்சாபில் 44% ஆகவும் இது அதிகரித்துள்ளது.

ஒரு நபர் அதிக எடை கொண்டவரா,அதிக பருமன் கொண்டவரா என்பதை எப்படி அறிவது? Body mass index (பிஎம்ஐ), உடல் எடை மற்றும் உயரத்தைக்கொண்டு அளவிடப்படுகிறது. பிஎம்ஐ 25க்கு மேல் இருந்தால் அதிக எடை என்றும் 30க்கு மேல் இருந்தால் உடல் பருமன் என்றும் கருதப்படுகிறது.

உடல் பருமனுக்கு காரணம்?

 சென்னையில் உள்ள ஒரு அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் டயட்டீஷியனாக பணிபுரியும் டாக்டர் மீனாட்சி பஜாஜ், இந்த மருத்துவமனையின் தொழில்நுட்ப பேரியாட்ரிக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். இங்கு வரும் நோயாளிகளுக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை தேவையா இல்லையா என்பதை கமிட்டி உறுப்பினர்களுடன் சேர்ந்து அவர் முடிவு செய்கிறார்.

இது ஒரு பக்கம் என்றாலும், தென்னிந்தியாவில் கார்போஹைட்ரேட் உட்கொள்ளல் அதிகமாக உள்ளது என்று அவர் கூறுகிறார். நகர்ப்புறங்களில் பாலீஷ் செய்யப்பட்ட அரிசியை அதிகம் உண்ணும் பழக்கம் உள்ளது.

அதே வேளையில், கிராமப்புறங்களில் கம்பு, கேழ்வரகு, அரிசி போன்ற பல்வேறு விதமான தானியங்கள் உண்ணப்படுகின்றன. அவை பாலிஷ் செய்யப்பட்டவை அல்ல. அதே நேரத்தில், இந்தியா முழுவதையும் ஒப்பிடும்போது தென் மாநிலங்களில் இறைச்சி, முட்டை, மீன் மற்றும் கடல் உணவுகளின் நுகர்வு அதிகம் என்றும் இதுவும் உடல் பருமனுக்கு ஒரு பெரிய காரணம் என்றும் ICMR தரவு கூறுகிறது. அதே நேரத்தில், பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து குறைவாக உட்கொள்ளப்படுகிறது.

NFHS இன் முதன்மைஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் சஹாரன் பெட்கான்கர், தென் மாநிலங்களை மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால், அதிக வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்.

போக்குவரத்து வசதிகள் உள்ள இடங்களில், தூரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. அத்தகைய சூழ்நிலையில் தினசரி உடல் செயல்பாடு குறைகிறது. இரண்டாவதாக அங்கு நலத் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கின்றன. இது பெண்களிடையே உடல் பருமனை ஏற்படுத்துகிறது.

அதே நேரத்தில், 35 வயது அல்லது நடுத்தர வயதிற்குப் பிறகு, உடலில் வளர்சிதை மாற்றம்(metabolism) குறைகிறது, இது எடை அதிகரிப்புக்கு ஒரு காரணியாகிறது.

நகர்ப்புறங்களில் உள்ள பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவதாகவும், உணவு மற்றும் வாழ்க்கை முறை இதில் பெரும் பங்கு வகிக்கிறது என்றும் சர்வதேச மக்கள்தொகை அறிவியல் கழகத்தின் பேராசிரியர் எஸ்.கே.சிங் கூறுகிறார்.

“பிராஸஸ் செய்யப்பட்ட அல்லது பதபடுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதை ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளோம். சர்க்கரை மற்றும் உப்பின் அளவு இதில் அதிகமாக உள்ளது.

இது போன்ற உணவுகளுக்கான, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி செலவு கடந்த பத்து ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்துள்ளதை எங்கள் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இப்போது மக்கள் வெளியே சென்று உணவு உண்பதை தேர்வு செய்கிறார்கள். இந்தப்பழக்கம், தென்னிந்தியா மட்டுமல்ல, வட இந்தியாவிலும் காணப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

தென்னிந்தியாவில் அரிசி அதிகமாக உட்கொள்ளப்படும் அதே நேரம் வட இந்தியாவில் ​​கோதுமை, மசாலா உணவுகள் மற்றும் எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்று பேராசிரியர் எஸ்.கே.சிங் மற்றும் டாக்டர் சஹாரன் பெட்கோன்கர் ஆகிய இருவரும் கூறுகிறார்கள். சமீப காலமாக பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

ஆரோக்கியத்தில் தாக்கம்

டெல்லியின் கிளவுட் நைன் மருத்துவமனையில் பணிபுரியும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரதீபா சிங்கல், பெண்களுக்கு ஏற்படும் PCOD பிரச்சனைகள் பற்றி விளக்குகிறார்.

"பிசிஓடியில், பெண்ணின் உடலில் ஹார்மோன்கள் சமச்சீரின்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக கருமுட்டைப்பையில் பல நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றன, இதன் காரணமாகவும் உடல் பருமன் அதிகரிக்கிறது. உடல் எடையை குறைப்பது கடினமாகிறது. டெல்லி மற்றும் தென்னிந்திய பெண்களிடையே எடை அதிகரிப்பதற்கு இது ஒருமுக்கிய காரணமாக இருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

"இளம் பெண்களின் எடை 65 முதல் 70 கிலோ இருப்பது இப்போது சாதாரண விஷயமாகிவிட்டது. கர்ப்பம் தரிக்க திட்டமிடும் அல்லது கர்ப்பமான 30 வயதுடைய பல இளம் பெண்கள் என்னிடம் வருகின்றனர். அவர்களின் எடை 85 கிலோவுக்கு மேல் இருக்கிறது.

இளம்பெண்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரித்து வருவதையும், சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை உட்கொள்வதே இதற்கு முக்கியக் காரணம் என்பதையும் நாம் பார்க்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

"இதுதவிர வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலும் உட்கார்ந்து வேலை பார்க்கிறார்கள். வீட்டு வேலைகளுக்கு பணியாட்களை வைத்துக்கொள்கிறார்கள். நேரமின்மை காரணமாக நடை பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய முடியாமல் அவர்கள் உள்ளனர். கூடவே ஜங்க் ஃபுட் மற்றும் வெளி உணவு ஆகியவையும் பெண்களின் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாகிறது,”என்று டாக்டர் பிரதீபா கூறினார்.

 ”உடல் பருமன் பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. பல உடல் மற்றும் மன நோய்கள் இதன் காரணமாக ஏற்படுகின்றன. உடல் பருமன் காரணமாக, நடக்கும்போது அல்லது படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுவாங்கல் ஏற்படுகிறது,”என்கிறார் அவர்.

உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்

  • உயர் இரத்த அழுத்தம்
  • நீரிழிவு நோய்
  • இதய நோய்கள் - மாரடைப்பு மற்றும் ஹார்ட் ஸ்ட்ரோக்
  • கொலஸ்ட்ரால்
  • மலட்டுத்தன்மை
  • புற்றுநோய்

உடற்பயிற்சியைக் குறைப்பது அல்லது மூட்டுகளில் அதிக எடை வருவதன் காரணமாக ஆஸ்டியோபோரோசிஸ் அதாவது எலும்பு தேய்மானம் மற்றும் ஆட்ர்த்ரைட்டிஸ் அதாவது மூட்டு அழற்சியின் அபாயம் அதிகரிக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: