You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய விவசாயிகளுக்கு லாபத்தை அள்ளித் தரும் 'மாயாஜால' சங்குப்பூ சாகுபடி
- எழுதியவர், ப்ரீத்தி குப்தா
- பதவி, தொழில்நுட்ப செய்தியாளர்
"சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தனது கிராமத்தில் சங்கு புஷ்பம் என்பது சாதாரண படரும் கொடி வகைச் செடியாகவே இருந்தது" என்கிறார் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள அந்தாய்க்லாவ் என்ற கிராமத்தில் வசிக்கும் நீலம் பிரம்மா.
சங்குப்பூ, சங்கு புஷ்பம் என்றும், 'அபராஜிதா' என்றும் அழைக்கப்படும் இந்தத் தாவரம், கொடி வகையைச் சேர்ந்தது, கண்ணைக் கவரும் நீல நிற மலர்களைக் கொண்டது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உள்ளூர் பெண்கள் இந்த மலர்களை விற்பனை செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது குறித்து நீலம் பிரம்மா கேள்விப்பட்டார். இந்த மலர்களில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது மற்றும் நீல நிறச் சாயம் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.
பிற பெண்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பிய அவருக்கு அது ஆக்கபூர்வமானதாக இருந்தது.
"உலர்த்தப்பட்ட மலர்களை விற்று முதல் முறையாக நான் சுமார் 4000 ரூபாய் சம்பாதித்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனது வாழ்க்கையை நன்றாக வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையை அது எனக்குக் கொடுத்தது," என்கிறார் அவர்.
அவர் தனது முயற்சியின் அடுத்தகட்டமாக தொழில்முனைவோராக மாறினார். "நான் சிறிய தொகையைக் கடனாகப் பெற்று, சூரிய ஒளியில் இயங்கும் உலர்த்திகளில் (Solar dryers) முதலீடு செய்தேன். இந்த இயந்திரங்களின் உதவியால், மலர்களை விரைவாக உலர்த்தவும். அவற்றின் நிறத்தைப் பாதுகாக்கவும் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் சிறப்பான தரத்தை எட்டவும் முடிந்தது" என்று அவர் கூறுகிறார்.
தாய்லாந்தும் இந்தோனீசியாவும் சங்குப்பூ உற்பத்தியிலும் நுகர்விலும் முன்னணியில் இருந்தபோதிலும், தற்போது இந்த மலருக்கான தேவை சர்வதேச அளவில் அதிகரித்து வருவதால், இந்திய தொழில்முனைவோரை கவரும் ஒன்றாக இது மாறி வருகிறது.
"இயற்கை நிறமூட்டிகளுக்கான உலகளாவிய தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது," என்று இயற்கைச் சாயங்கள் மற்றும் கூடுதல் பொருட்களை ஏற்றுமதி செய்யும் 'டி.ஹெச்.எஸ் இம்பெக்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் வர்ஷிகா ரெட்டி கூறுகிறார்.
இயற்கையான மூலப்பொருட்கள் மீதான நுகர்வோரின் ஆர்வமும், உணவுக்கான செயற்கை நிறமூட்டிகள் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளும் இயற்கை நிறமூட்டிகளின் தேவை துரிதமாக அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், உணவில் சேர்க்கக்கூடிய ஒரு பொருளாக சங்குப்பூவுக்கு அங்கீகாரம் வழங்கியது. இருப்பினும், உணவில் இந்த மலரைப் பயன்படுத்துவது குறித்த பாதுகாப்பு கவலைகளை 2022-இல் ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையம் எழுப்பியது.
ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் ஆகிய இரண்டுமே, சங்குப்பூவை ஒரு 'புதிய வகை' உணவாக வகைப்படுத்தியுள்ளன. அதாவது, இந்தப் பூ, பரவலான பயன்பாட்டிற்கு வர இன்னும் முறையான ஒப்புதல் தேவைப்படுகிறது.
இருந்தபோதிலும், இந்திய தொழில்முனைவோர் சங்குப்பூ சாகுபடியில் பெரும் வாய்ப்புள்ளதாகக் கருதுகின்றனர் மற்றும் இந்தியாவில் அதன் சந்தையை மேம்படுத்த விரும்புகின்றனர்.
"இந்த பயிர் வணிகப் பொருளாகப் பார்க்கப்படாமல், இன்னும் வீட்டில் வளர்க்கப்படும் அலங்காரச் செடியாகவோ அல்லது மூலிகைச் செடியாகவோதான் பார்க்கப்படுகிறது," என்கிறார் வர்ஷிகா ரெட்டி.
"சங்குப்பூ சாகுபடி தொடர்பான முறையான சந்தை விழிப்புணர்வோ, அரசாங்க வகைப்பாடோ அல்லது நிலையான விலை நிர்ணய முறையோ இல்லை. இது விவசாயிகளுக்கு லாபம் கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலையை உருவாக்குகிறது."
உற்பத்தித் தரத்தை உயர்த்துவதற்காக வர்ஷிகா ரெட்டி விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். "நாங்கள் உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட விவசாயிகள் குழுவுடனும் அவர்களின் குடும்பங்களுடனும் இணைந்து பணியாற்றுகிறோம். இதில் பெண் விவசாயிகள் கணிசமான எண்ணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்."
"நாங்கள் அவர்களுடன் முறையான ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம். சிறந்த விவசாய முறைகள், பாசன மேலாண்மை மற்றும் பயிர் சார்ந்த நுட்பங்கள் குறித்த வழிகாட்டுதல் உள்ளிட்ட விரிவான வேளாண் ஆதரவை நாங்கள் வழங்குகிறோம்," என்று வர்ஷிகா ரெட்டி கூறுகிறார்.
இந்த மலர் சாகுபடியின் வணிக வாய்ப்புகள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
"சங்கு புஷ்பத்தை வெந்நீரில் ஊறவைக்கும்போது அது நீல நிறமாக மாறுகிறது. அதில் எலுமிச்சை சாற்றைப் பிழியும்போது ஊதா நிறமாக மாறுகிறது. இது பார்ப்பதற்கு மாயாஜாலம் போல் இருந்தது," என்று டெல்லியின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் நிதேஷ் சிங் கூறுகிறார்.
வர்ஷிகா ரெட்டியை போலவே, இவரும் இந்த மலருக்கு இந்தியாவில் அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதுகிறார். "ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கேயே இருக்கும் இந்த மலர் சுத்தமான, ஆரோக்கியமான உணவாக மாறும் என்று யாரும் சிந்தித்து இருக்க மாட்டார்கள்," என்று நிதேஷ் சிங் கூறுகிறார்.
இந்தியாவில் விளையும் சங்குப் பூக்களைக் கொண்டு இந்திய பிராண்ட் ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் 2018-ஆம் ஆண்டில் அவர் 'ப்ளூ டீ' நிறுவனத்தைத் தொடங்கினார். தொடக்கத்தில், இது எதிர்பார்த்தபடி அமையவில்லை.
"இந்தியாவில் தரமான மலர்கள் கிடைக்காததால் ஆரம்பத்தில் நாங்கள் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. இங்குள்ள மலர்களில் இதழ்கள் குறைவாக இருந்தன. மேலும் வெயிலில் உலர்த்திய பிறகு அதில் எதுவுமே எஞ்சியிருக்காது. உலர்த்திய பின்பும் நிறத்தைத் தக்கவைக்க அதிக நிறமிகளும், கூடுதல் இதழ்களும் கொண்ட மலர் தேவைப்பட்டது" என்கிறார் அவர்.
சங்குப்பூ உற்பத்தியின் அளவையும் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஏழு ஆண்டுகளாக, நிதேஷ் சிங் விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ஐந்து விவசாயிகளுடன் தனது பணியைத் தொடங்கிய அவர், தற்போது நாடு முழுவதும் 600 விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
"பயிற்சியும் தரக் கட்டுப்பாடும்தான் மிகப்பெரிய சவால்கள்," என்கிறார் அவர். மலர்களைக் கொய்வது இந்தச் செயல்பாட்டின் மிக முக்கியமான பகுதி. இந்தப் பணி பெரும்பாலும் பெண்களாலேயே செய்யப்படுகிறது.
"அவர்களின் கைகள் மென்மையானவை, செடிக்குச் சேதம் விளைவிக்காமல் மென்மையான மலர்களை எப்படி லாகவமாகப் பறிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு இயல்பாகவே கை வந்த கலை. பறிப்பதற்கேற்ற மலர்களை எப்படிக் கண்டறிவது என்பது குறித்துப் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது," என்கிறார் நிதேஷ் சிங்.
மலர்களைக் கொய்த பிறகு, அவற்றை மிகுந்த கவனத்துடன் உலர்த்த வேண்டும். "இந்த மலரை உலர்த்துவதற்கு வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். ஒரு சிறு தவறு நடந்தாலும் அதன் மதிப்பை இழக்க நேரிடும்," என்கிறார் அவர்.
மலர்கள் 'ப்ளூ டீ' நிறுவனத்திற்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பே, விவசாயிகளால் ஓரளவுக்கு உலர்த்தப்படுகின்றன; அங்கு வந்து சேர்ந்ததும் ஈரப்பதம் சோதிக்கப்பட்டு மேலும் தேவைப்படும் அளவுக்கு உலர்த்தப்படுகின்றன.
"மிகக் குறைந்த வெப்பநிலையில் நீண்ட நேரம் மலர்களை உலர்த்துகிறோம். வெப்பம் அதிகமாக இருந்தால், மலர் கருகிவிடும். பூக்கள் கருகினால், அதன் மருத்துவ குணத்தையும் நிறத்தையும் இழக்க நேரிடும்," என்கிறார் நிதேஷ் சிங்.
கண்ணைக் கவரும் நிறத்துடன் காணப்படும் சங்குப் பூக்கள் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன என்பதற்கான சில ஆதாரங்களும் உள்ளன. இருப்பினும், இது குறித்து இன்னும் கூடுதல் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.
"நாங்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்யத் தொடங்கியபோது, சங்குப்பூவில் வலுவான செயல்பாட்டு மற்றும் மூலிகை குணங்கள் இருந்தபோதிலும், அது குறித்த ஆய்வுகள் மிகக் குறைவாகவே இருப்பதைக் கவனித்தோம். தற்போதுள்ள பெரும்பாலான ஆராய்ச்சிகள் எலி மற்றும் சுண்டெலிகளை வைத்தே நடத்தப்பட்டுள்ளன," என்கிறார் சென்னையின் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் வி. சுப்ரியா.
நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்களைக் கொண்டு அவர் மேற்கொண்ட சிறிய அளவிலான ஆய்வில், சங்குப் பூக்களால் தயாரிக்கப்பட்ட தேநீரை அருந்தியவர்களின் சர்க்கரை அளவு, அதை பருகாதவர்களுடன் ஒப்பிடும்போது சிறப்பாகக் கட்டுப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.
"சங்குப்பூ பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருந்தது. ஆனால் இப்போது மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் ஆதாரங்கள் கிடைத்து வருவதால், தனது ஆரோக்கிய நன்மைகளால் அந்தப் பூ மிகவும் பிரபலமாகக் கூடும்," என்கிறார் சுப்ரியா.
மேற்கு வங்கத்தில் சிறிய அளவிலான பண்ணை வைத்திருக்கும் புஷ்பால் பிஸ்வாஸ் என்பவருக்கு, 'ப்ளூ டீ' நிறுவனம் மூலமாகவே சங்குப்பூ அறிமுகமானது.
"நான் முன்பு நெல் மற்றும் காய்கறிகளைப் பயிரிட்டு வந்தேன். அப்போது பல நேரங்களில் எனது விளைபொருட்களை விற்க முடியாமல் நட்டத்தைச் சந்தித்தேன்," என்கிறார் அவர்.
ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில், இந்தப் புதிய பயிரின் பிரபலம் அனைத்தையும் மாற்றிவிட்டது. "இது எளிதாக வளரக்கூடிய பயிர்," என்று அவர் சங்குப்பூ பற்றிக் கூறுகிறார்.
"அறிவியல் முறைகளைப் பின்பற்றியதால், உற்பத்தி 50 கிலோவில் இருந்து 80 கிலோவாக உயர்ந்தது. நான் ஈட்டிய பணத்தை வைத்துக் கூடுதல் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி பரப்பளவை அதிகரித்தேன். உற்பத்தியும் பெருகியது, படிப்படியாக எனது வருமானமும் உயர்ந்தது" என்கிறார் புஷ்பால் பிஸ்வாஸ்.
சில இந்திய சமூகங்களில், இந்த மலர் ஓர் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
"கடந்த சில ஆண்டுகளில், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலரும் எங்களுடன் இணைந்து இந்தப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்," என்கிறார் பிஸ்வாஸ்.
"இது இனி வெறும் விவசாயம் மட்டுமல்ல, இதுவொரு வலுவான பிணைப்பாக, ஒரு சமூகமாக, வணிகக் குடும்பமாக உருவெடுத்துள்ளது."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு