'ரூ. 90,000 லாபம் எடுத்தும் தந்தை பாராட்டவில்லை' - ஏவிஎம் சரவணன் தயாரித்த முக்கிய படங்கள் எவை?

ஏவிஎம் சரவணன்

பட மூலாதாரம், AVM productions

படக்குறிப்பு, ஏவிஎம் சரவணன்

தமிழ் திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்தின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார். அவருக்கு வயது 86.

வயதுமூப்பின் காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த ஏவிஎம் சரவணன், இன்று (டிசம்பர் 4) காலமானார். அவருடைய உடல் சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் பொதுமக்கள், திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவருடைய உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், சூர்யா, நடிகை கே.ஆர். விஜயா, இயக்குநர்கள் வசந்த், பார்த்திபன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

சுமார் 60 ஆண்டுகள் திரைப்பட தயாரிப்பில் பெரும் அனுபவம் வாய்ந்தவரான ஏவிஎம் சரவணன், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நூற்றுக்கணக்கான படங்களை தயாரித்துள்ளார்.

தனது தந்தையும் ஏவிஎம் ஸ்டுடியோவின் நிறுவனருமான ஏவி மெய்யப்பனை போன்றே திரைப்பட தயாரிப்பில் இறங்கிய சரவணன், பல இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் திரையுலகில் அறிமுகமாக காரணமாக இருந்தார்.

முதலமைச்சர் இரங்கல்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், "தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ - அதே அளவுக்கு ஏவிஎம் நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் சரவணன் பங்கும் அளப்பரியது." என தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் "ஓர் இரவு", கருணாநிதியின் "பராசக்தி", முரசொலி மாறனின் "குலதெய்வம்" என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு என குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

ஏவிஎம் சரவணன்

பட மூலாதாரம், AVM productions

படக்குறிப்பு, சென்னை மாநகர ஷெரீஃப் ஆக பதவியேற்றபோது

யார் இந்த ஏவிஎம் சரவணன்?

ஏவி மெய்யப்பன் 1934ம் ஆண்டு முதலே தமிழ் திரையுலகில் படங்களை தயாரித்து வந்த நிலையில், 1945ம் ஆண்டில் ஏவிஎம் ஸ்டுடியோவை தொடங்கினார். அதன்படி, சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் பல திரைப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

சிவாஜி கணேசன் (பராசக்தி), கமல்ஹாசன் (களத்தூர் கண்ணம்மா) போன்ற புகழ்மிக்க நடிகர்களை இந்த நிறுவனம் தான் அறிமுகம் செய்தது.

ஏவி மெய்யப்பனின் மகனான ஏவிஎம் சரவணனுக்கும் திரைத்துறைக்கும் இடையேயான பிணைப்பும் மிக நெடியது.

தன் தந்தை ஏவி மெய்யப்பனின் வழியிலேயே திரைப்பட தயாரிப்பில் கால்பதித்தவர் ஏவிஎம் சரவணன்.

தன்னுடைய இளமை காலத்திலேயே தெய்வப்பிறவி, மாமியார் மெச்சிய மருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்புப் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பை தனது தந்தை வழங்கினார் என சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சமயத்தில் ஒரு படத்திற்கு வழக்கத்தைவிட 90,000 ரூபாய் அதிகமாக நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கும் வகையில் சில பணிகளை செய்துள்ளார் சரவணன்.

ஏவிஎம் சரவணன்

பட மூலாதாரம், AVM productions

படக்குறிப்பு, எம்ஜிஆருடன் ஏவிஎம் சரவணன்

'90,000 ரூபாய் அதிக லாபம்'

அதுகுறித்த தன்னுடைய பழைய நேர்காணல் ஒன்றில் பேசிய சரவணன், "90,000 ரூபாய் அதிகமாக லாபம் எடுத்தும் என் அப்பா அதை வெளிப்படையாக பாராட்டவில்லை. 'என்ன இது, இவ்வளவு லாபம் எடுத்துக் கொடுத்திருக்கிறோம், ஆனால் பாராட்டாமல் இருக்கிறாரே' என வருந்தினேன். ஆனால், என் அப்பா என்னிடம் வந்து அடுத்த படங்களை தயாரிக்கும் பணியில் முழுமையாக ஈடுபடுமாறு கூறினார். இதுதான் என் தந்தையின் பாராட்டு என அப்போது புரிந்தது" என்றார்.

1979ம் ஆண்டு மெய்யப்பனின் மறைவுக்குப் பிறகு பட தயாரிப்பில் முழுமையாக ஈடுபட்டார் சரவணன். அவருடைய சகோதரர்கள் எம். குமரன், எம். பாலசுப்ரமணியன் ஆகியோரும் இணைந்து ஏவிஎம் நிறுவனத்தின் கீழ் பல திரைப்படங்களை தயாரித்தனர்.

முக்கிய பிரபலமான 10 படங்கள்

பல்வேறு நடிகர், நடிகைகளை வைத்து முக்கியமான பல பிரபல படங்களை தயாரித்துள்ளார் சரவணன். அதில் 10 முக்கியமான படங்கள்:

  • சகலகலா வல்லவன்
  • சம்சாரம் அது மின்சாரம்
  • முந்தானை முடிச்சு
  • ராஜா சின்ன ரோஜா
  • சிவாஜி
  • மின்சார கனவு
  • எஜமான்
  • ஜெமினி
  • பேரழகன்
  • ப்ரியமான தோழி

2007ம் ஆண்டில் வெளியான ரஜினி நடித்த சிவாஜி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

யுகே டாப் 10 எனப்படும் புகழ்மிக்க பட்டியலில் இடம்பெறும் அளவுக்கான புகழை இந்த படம் எட்டியதாக, ஏவிஎம் நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களில் புதிய டிரெண்ட் மற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் சரவணன் முனைப்பாக இருந்ததாக திரைத்துறையினர் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக 2012ம் ஆண்டில் சிவாஜி திரைப்படம் டால்பி அட்மோஸ் ஒலி தொழில்நுட்பத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டது.

மேலும், ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் வரும் 'ராஜா சின்ன ரோஜா' எனும் பாடலில் இந்தியாவிலேயே முதன்முறையாக அனிமேஷன் காட்சிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறுகிறது 'தி இந்து' ஆங்கில செய்தி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சென்னை மாநகர ஷெரீஃப்

திரைக்கதையை மேம்படுத்துவதிலும் சரவணன் பங்காற்றியுள்ளார்.

'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம் உருவான கதையை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த சரவணன், "விசு என்னிடம் கதைகள் சிலவற்றை கூறியபோது அவை எனக்கு சரியாக ஒத்துப்போகவில்லை. அப்போதுதான் 'உறவுக்கு கை கொடுப்போம்' என பெயரில் தன்னுடைய நாடகம் ஒன்று வெற்றி பெற்றதையும் ஆனால், அக்கதையில் ஜெமினி கணேசன் நடித்து படமாக வெளியான நிலையில் சரியாக ஓடவில்லை என்றும் கூறினார். உடனே நான், படம் சரியாக போகாததற்கு என்ன காரணம் என அலசி, படத்தை மீண்டும் எடுக்கலாம் எனக்கூறி, கதையில் மனோரமா கதாபாத்திரத்தை சேர்க்க சொன்னேன்," என்று கூறினார்.

இப்படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது, சிறந்த பிரபல திரைப்படத்திற்கான தேசிய விருதுகளை பெற்றது.

படங்கள் மட்டுமின்றி, "பெரும் பொருட்செலவு தேவைப்படாது" என்பதாலும் ஸ்டுடியோவிலேயே தயாரிக்கலாம் என்பதாலும் பல தொலைக்காட்சி தொடர்களையும் ஏவிஎம் தயாரித்ததாக பேட்டியில் குறிப்பிடுகிறார் சரவணன். மனதில் உறுதி வேண்டும், நிம்மதி உங்கள் சாய்ஸ், உறவுக்கு கை கொடுப்போம் என பல தொடர்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் இரண்டு ஆண்டுகள் சென்னை மாநகர ஷெரீஃப் ஆகவும் (சென்னையின் முக்கிய குடிமகனுக்கு வழங்கப்பட்டு வந்த அரசியல் சார்பற்ற பதவி) சரவணன் இருந்துள்ளார். மேலும், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் வென்றுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு