ஆஸ்திரேலியா: துப்பாக்கியை பறித்து தாக்குதலை தடுக்க முயன்ற 'வீர' தம்பதிக்கு என்ன நேர்ந்தது?

ஜனவரி மாதம் தங்களது 35வது திருமண நாளைக் கொண்டாடவிருந்த நிலையில், போரிஸ், சோஃபியா தம்பதி துப்பாக்கிச்சுடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரைத் தடுக்க முயன்று தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்

பட மூலாதாரம், GoFundMe

படக்குறிப்பு, ஜனவரி மாதம் தங்களது 35வது திருமண நாளைக் கொண்டாடவிருந்த நிலையில், போரிஸ், சோஃபியா தம்பதி துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைத் தடுக்க முயன்று இறந்தனர்
    • எழுதியவர், ஃபிரான்செஸ்கா கில்லெட் & ஆன்னா லாம்ச்சே
    • பதவி,

ஆஸ்திரேலியாவின் போன்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தம்பதி, தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரில் ஒருவரின் துப்பாக்கியைப் பிடித்து தடுக்க முயன்றுள்ளனர் என்பதை டேஷ்கேம் காட்சிகள் காட்டுகின்றன.

போரிஸ் குர்மன் (69 வயது) மற்றும் அவரது மனைவி சோஃபியா (61 வயது), தாங்கள் சுடப்படுவதற்கு முன்பு, மற்றவர்களைப் பாதுகாக்க தைரியமாக முன்வந்து முயற்சி எடுத்ததாக அவர்களது குடும்பத்தினர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.

பணி ஓய்வு பெற்றவரான போரிஸ் குர்மன், தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் சண்டையிடுவது, அவரிடமிருந்து ஆயுதத்தைப் பறித்துக்கொண்டு, இருவரும் சாலையில் விழுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து எழுந்த குர்மன், அந்தத் துப்பாக்கியால் சந்தேகத்திற்குரிய நபரைத் தாக்குவது போலத் தெரிகிறது. அதன் பிறகு அந்த நபர் மற்றொரு துப்பாக்கியை எடுத்து அவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளார்.

சிட்னியில் ஆயுததாரியின் துப்பாக்கியை பறிக்க முயன்று பலியான தம்பதி

பட மூலாதாரம், Jenny

'கொல்லப்பட்ட முதல் இரண்டு நபர்கள்'

"போரிஸ் மற்றும் சோஃபியாவை இழந்த வலியை எதனாலும் குறைக்க முடியாது என்றாலும், அவர்களுடைய வீரம் மற்றும் தன்னலமற்ற பண்பு குறித்து நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்," என்று அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், "இதுதான் அவர்கள் யார் என்பதை முழுமையாக அடையாளம் காட்டுகிறது. அவர்கள் தன்னலமின்றி பிறருக்கு உதவ முயன்றவர்கள்" என்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

யூதர்களான குர்மன் தம்பதி, ஞாயிற்றுக் கிழமை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் இரண்டு நபர்கள் என்று சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

யூதர்களின் ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் ஒரு நிகழ்வின்போது நடந்த இந்தத் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குர்மன் தம்பதியின் குடும்பத்தினர் தங்கள் அறிக்கையில், அவர்கள் 34 ஆண்டுகளாகத் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், "எங்கள் அன்புக்குரிய போரிஸ் மற்றும் சோஃபியாவின் திடீர் இழப்பால் நாங்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். போரிஸ் ஓய்வுபெற்ற மெக்கானிக். அவர் தனது தாராள குணம், அமைதியான மன உறுதி மிக்க பண்பு, தேவைப்படும் எவருக்கும் உதவிக்கரம் நீட்டும் மனப்பான்மை ஆகியவற்றுக்காக அறியப்பட்டவர்.

சோஃபியா ஆஸ்திரேலியா போஸ்ட்டில் பணியாற்றினார். அவர் தனது சக ஊழியர்கள் மற்றும் சமூகத்தினரின் ஆழமான அன்புக்கு உரித்தானவர்" என்று குடும்பத்தினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா: துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை தடுக்க முயன்று உயிர் தியாகம் செய்த தம்பதி

பட மூலாதாரம், Getty Images

'வீரர்'

அதோடு, "போன்டை பகுதியைச் சேர்ந்த இவர்கள், நேர்மையான, கடின உழைப்பு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். அவர்கள் சந்தித்த அனைவரையும் கருணை, பாசம் மற்றும் மரியாதையுடன் நடத்தினார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாக, குடும்பத்தின் இதயமாக இருந்தனர். அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது," என்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள், போரிஸ் குர்மனை ஒரு "வீரர்" என்று வர்ணிக்கின்றனர்.

டேஷ்கேம் காட்சிகளை வைத்திருக்கும் பெண், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசியபோது, "குர்மன் ஓடி ஒளியவில்லை. அவர் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி துப்பாக்கியைப் பறிக்க முயன்றும், மரணம் வரை போராடியும் ஆபத்தை நேராக எதிர்கொண்டார்" என்று கூறியுள்ளார்.

"எனது கேமராவில் பார்க்கும்போது அந்த முதியவர் இறுதியில் சுடப்பட்டு சரிந்து விழுவதைக் காண முடிந்தது. அந்தத் தருணம் என் இதயத்தை நொறுக்கியது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் கண்டதாகக் கூறிய மற்றொருவர் 9 நியூஸ் செய்தி நிறுவனத்திடம், "அவர் ஒரு ஹீரோ. அவர் முயற்சி செய்தார். இதை நாங்கள் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர் செய்ததை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில், அவர் இந்தச் சம்பவத்தின் தொடக்கத்திலேயே தன்னைத் தானே ஆபத்தின் முன்பாக நிறுத்திக்கொண்டார். அப்போதே துப்பாக்கியில் இருந்து குண்டுகள் சுடப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல் தன்னை ஆபத்தின் முன்பாக நிறுத்திக்கொண்டார்," என்று தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலை யூத சமூகத்தின் மீது குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு "பயங்கரவாத சம்பவம்" என்று காவல்துறை விவரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு, சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, தந்தை - மகன் யார்? முழு பின்னணி
படக்குறிப்பு, நவீத் அக்ரம்

போராடிய மற்றொரு நபர்

அகமது அல் அகமது என்று 43 வயதுடைய மற்றொரு வழிப்போக்கர், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்ததற்காக 'வீரர்' என்று பாராட்டப்பட்டார். அவர் பலமுறை சுடப்பட்டாலும் உயிர் பிழைத்தார். அவரது காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அவரது தந்தை பிபிசி அரபி சேவையிடம் பேசியபோது, தனது மகன் தனது 'மனசாட்சியால்' உந்தப்பட்டு, 'பாதிக்கப்பட்டவர்களையும், ரத்தத்தையும், தெருவில் கிடந்த பெண்கள் மற்றும் குழந்தைகளையும் கண்டு செயல்பட்டதாக" கூறினார்.

இந்தத் தாக்குதலை ஐம்பது வயதான சஜித் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகன் நவீத் அக்ரம் நடத்தியதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு, சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, தந்தை - மகன் யார்? முழு பின்னணி

பட மூலாதாரம், FACEBOOK/CHRIS MINNS

படக்குறிப்பு, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த அகமது அல் அகமது தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்

ஆஸ்திரேலிய ஊடகங்களின்படி, நவீத் அக்ரம் கோமாவில் இருந்து மீண்டும் மருத்துவமனையில் சுயநினைவுடன் இருக்கிறார். சஜித் அக்ரம் ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குச் சில வாரங்களுக்கு முன்பு இந்த இருவரும் பிலிப்பின்ஸிக்கு பயணம் மேற்கொண்டதாகவும், அவர்கள் ஏன் அந்தப் பயணத்தை மேற்கொண்டார்கள் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உறுதி செய்யப்படாத ஊடக செய்திகளின்படி, இந்த இரண்டு சந்தேக நபர்களும் பிலிப்பின்ஸில் இருந்தபோது "ராணுவ பாணியிலான பயிற்சியை" பெற்றனர்.

அவர்கள் நவம்பர் 1ஆம் தேதியன்று பிலிப்பின்ஸ் வந்ததாகவும் நவம்பர் 28ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அந்நாட்டின் குடிவரவுப் பணியகம் பிபிசியிடம் உறுதி செய்துள்ளது.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனத்தில் ஐ.எஸ் குழுவின் கொடிகளையும், மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளையும் கண்டெடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதோடு, இந்த இருவரும் ஐ.எஸ் சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாகத் தெரிவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

இதுவரை நடந்தது என்ன?

  • ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போன்டை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) உள்ளூர் நேரப்படி மாலை 6:47 மணிக்கு யூத சமூகத்தின் ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தை குறி வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது
  • இந்தத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
  • துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம்சாட்டப்படும் இருவர், தந்தை- மகன் என்றும், சஜித் அக்ரம் (50) மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் (24) என்றும் உள்ளூர் ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளன.
  • சஜித் காவல்துறையின் பதில் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், காயமடைந்த நவீத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • இது ஒரு 'யூத எதிர்ப்பு பயங்கரவாதச் சம்பவம்' என்று ஆஸ்திரேலியப் பிரதமர் விவரித்துள்ளார். அத்துடன், துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
  • சம்பவ இடத்தில் இருந்த 43 வயதான அகமது அல் அகமது என்பவர், துப்பாக்கிச்சூடு நடத்திய இரு நபர்களில், ஒருவரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்த ஆயுதத்தைப் பறித்தார். அவரது செயலுக்காகப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அவருக்காக 10 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது.
  • இந்தச் சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் இருவரும் பிலிப்பின்ஸ் நாட்டிற்குச் சென்றது குறித்து ஆஸ்திரேலிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • சஜித் அக்ரம் இந்திய பாஸ்போர்ட்டையும், அவரது மகன் நவீத் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டையும் பயன்படுத்தி பிலிப்பின்ஸ் நாட்டிற்குப் பயணம் செய்ததாக மணிலாவில் உள்ள குடிவரவு அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
  • துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்படும் சஜித் அக்ரம் (50) இந்தியாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என்று தெலங்கானா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
  • இந்தத் தாக்குதல் "இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) அமைப்பின் சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது" என ஆஸ்திரேலியப் பிரதமர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு