ராஜஸ்தான் பாலியல் வழக்கு: 32 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி- இன்னும் ஒருவர் தலைமறைவு

    • எழுதியவர், செரில்லன் மொல்லன்
    • பதவி, பிபிசி நியூஸ், மும்பை

“என் இதயம் வலியால் நிரம்பியுள்ளது. அந்த ஒரு சம்பவம் என் வாழ்க்கையை நாசாமாக்கியதை நினைத்தால் எனக்கு இப்போதும் அழுகை வந்துவிடும்”

கடந்த 1992-ம் ஆண்டு. வீடியோ பதிவுகளை பார்க்கலாம் என தெரிந்த நபர் ஒருவர் பொய்யாக கூறி, கைவிடப்பட்ட கிடங்கு ஒன்றுக்கு தன்னை அழைத்துச் சென்றபோது தனக்கு 18 வயது என கூறுகிறார் சுஷ்மா* (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

அங்கு, 6-7 நபர்கள் அவரை கட்டிவைத்து பாலியல் வன்புணர்வு செய்து, அதை புகைப்படங்களாக எடுத்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் ராஜஸ்தானின் அஜ்மீர் நகரத்தின் செல்வாக்கு நிறைந்த, பணக்கார குடும்பங்களை சேர்ந்தவர்கள்.

“என்னை பாலியல் வன்புணர்வு செய்த பின், அவர்களுள் ஒருவர் லிப்ஸ்டிக் வாங்கிகொள்ளுமாறு எனக்கு 200 ரூபாய் கொடுத்தார். நான் அந்த பணத்தை வாங்கிக்கொள்ளவில்லை,” என்கிறார் அவர்.

இந்தநிலையில் 32 ஆண்டுகள் கழித்து, கடந்த வாரம் அவரை வன்புணர்வு செய்தவர்களை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து, ஆயுள் தண்டனை வழங்கியதை சுஷ்மா கண்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

“எனக்கு இப்போது 50 வயதாகிறது, கடைசியாக எனக்கு நீதி கிடைத்துவிட்டது போன்று உணர்கிறேன்,” என்கிறார் அவர். “ஆனால், அது நான் இழந்த அனைத்தையும் திருப்பி தராது” என்கிறார்.

இதனால், பல ஆண்டுகளாக தான் சமூகத்தின் அவதூறுகள் மற்றும் கிண்டல்களை தாங்கிக் கொள்ள வேண்டியிருந்ததாக அவர் கூறுகிறார். மேலும், கடந்த காலம் காரணமாக, அவருடைய இரண்டு திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தன.

கடந்த 1992-ம் ஆண்டில் அஜ்மீர் நகரின் வெவ்வேறு இடங்களில் பல்வேறு மாதங்களாக செல்வாக்குமிக்க கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மிரட்டப்பட்ட 16 பேரில் சுஷ்மாவும் ஒருவர். பாதிக்கப்பட்ட அனைவரும் பள்ளி மாணவர்கள் ஆவர். பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பல போராட்டங்களும் நடைபெற்றன.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் ஆறு பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அவர்கள், நஃபீஸ் சீஷ்டி, இக்பால் பாட், சலீம் சீஷ்டி, சயீத் ஜமீர் ஹுசைன், டர்ஸான் என்ற நசீம், சுஹைல் கானி.

அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என, அவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட மீதமுள்ள 12 பேருக்கு என்ன ஆனது?

கடந்த 1998-ஆம் ஆண்டு எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர்களுள் நான்கு பேர் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ளவர்களின் தண்டனை பத்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

மீதமுள்ள நான்கு பேரில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். மற்றொருவருக்கு 2007-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகள் கழித்து விடுதலையானார். மற்றொருவர் இதேமாதிரியான சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார், ஆனால் பின்னர் விடுதலையாகிவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.

"இதை நீதி என கூற முடியுமா?"

“இதை நீதி(ஆகஸ்ட் 20 தீர்ப்பு) என்று கூற முடியுமா? தீர்ப்பு என்பது நீதி அல்ல,” என இந்த சம்பவம் குறித்து எழுதியுள்ளவரும் அரசுத்தரப்பு சாட்சியாக இருந்தவருமான பத்திரிகையாளர் சந்தோஷ் குப்தா கூறினார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரெபேக்கா ஜான், “தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” என்பதற்கான மற்றொரு வழக்காக இது உள்ளது என கூறிய கருத்தை அவர் பிரதிபலித்துள்ளார்.

“சட்ட அமைப்பை தாண்டி நீளும் பிரச்னையை இது சுட்டிக்காட்டுகிறது. ஆணாதிக்க சமூக கட்டமைப்பு உடைந்துள்ளது. மனநிலையில் மாற்றம் வரவேண்டும், ஆனால் அதற்கு இன்னும் எவ்வளவு காலமாகும்?”

பாதிக்கப்பட்ட பெண்களை ஏமாற்றவும் மிரட்டவும் தங்களின் அதிகாரம் மற்றும் செல்வாக்கை, குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பயன்படுத்தியதாக, அரசுத்தரப்பு வழக்கறிஞர் வீரேந்திர சிங் ரத்தோர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் எடுத்ததாகவும், அவர்களை அமைதியாக்கவும் மற்ற பெண்களை அழைத்துவரவும் அவற்றை பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

“ஒரு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவர் தனக்கு தெரிந்தவரை கேளிக்கை விருந்திற்கு அழைத்து அவரை மது அருந்தச் செய்துள்ளார். அவரை புகைப்படங்கள் எடுத்து, அதை வைத்து அவருடைய பெண் தோழிகளை தங்களிடம் அழைத்துவராவிட்டால், அதனை பொதுவெளியில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்,” என ரத்தோர் தெரிவித்தார்.

“அதன்மூலம்தான் அவர்கள் பலரையும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.”

குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு வலுவான அரசியல் மற்றும் சமூக தொடர்புகளும் உள்ளன. அவர்களுள் சிலருக்கு நகரின் பிரபலமான தர்காவுடன் தொடர்புள்ளது.

“அந்த காலத்திலேயே சிறுநகரம் ஒன்றில் அவர்கள் பைக் மற்றும் கார்களில் சுற்றித் திரிவார்கள்” என சந்தோஷ் குப்தா கூறுகிறார். “சிலர் அவர்களை பார்த்து பயப்படுவார்கள், சிலர் அவர்களிடம் நெருக்கமாக விரும்புவார்கள், சிலர் அவர்களை போன்று ஆக வேண்டும் என நினைப்பார்கள்.”

அவர்களுடைய அதிகாரம் மற்றும் தொடர்புகள்தான் பல மாதங்களாக இந்த வழக்கை மூடிமறைக்க அவர்களுக்கு உதவியதாக கூறுகிறார் அவர். ஆனால், அந்த புகைப்படங்களை உருவாக்கிய ஸ்டுடியோவில் பணியாற்றியவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலருக்கும் கூட என்ன நடக்கிறது என்பது தெரிந்திருந்தது.

ஒருநாள், குற்றம்சாட்டப்பட்ட ஒருவரால் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் குப்தாவின் கவனத்திற்கு வந்தது. அவை அவருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.

“நகரின் அதிகாரமிக்க ஆண்கள் அப்பாவி சிறுமிகளிடம் கொடுமையான குற்றங்களை புரிந்துள்ளனர், அதற்கான ஆதாரங்களும் உள்ளன. ஆனால், காவல்துறையிடமிருந்தோ அல்லது பொதுமக்களிடமிருந்தோ பெரிய எதிர்வினை எதுவும் வரவில்லை,” என்கிறார் அவர்.

அவர் அதுகுறித்து சில செய்திகளை எழுதியுள்ளார். ஆனால், எதுவும் பெரிதளவில் அந்த விவகாரம் வெடிக்க உதவிசெய்யவில்லை.

வெளியே வந்தது எப்படி?

பின்னர் ஒருநாள், அவருடைய செய்தித்தாள், “தைரியமான முடிவு ஒன்றை எடுத்தது,” என்கிறார் அவர்.

இருபுறமும் ஆண்களுக்கு நடுவே, இடுப்பு வரை நிர்வாணமாக உள்ள சிறுமியின் மார்பகங்களை, அந்த ஆண்கள் தழுவுவது போன்ற புகைப்படத்தை அச்செய்தித்தாள் வெளியிட்டது. அதில் ஒரு ஆண் கேமராவை நோக்கி சிரிக்கிறார். சிறுமியின் முகம் மட்டுமே அதில் மறைக்கப்பட்டிருந்தது.

இந்த செய்தி, அந்நகர் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வெகுண்டெழுந்த மக்கள், பல நாட்களுக்கு தங்கள் போராட்டங்கள் வாயிலாக நகரையே முடக்கினர். பற்றி எரியும் தீ போல ராஜஸ்தான் முழுவதும் கோபம் பரவியது.

“இறுதியில், அரசிடமிருந்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு மற்றும் அவர்களை மிரட்டியது தொடர்பாக காவல்துறை வழக்குகளை பதிவுசெய்தன. மேலும், அவ்வழக்கு சிபிசிஐடிக்கும் மாற்றப்பட்டது,” என்கிறார், வீரேந்திர சிங் ரத்தோர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதில் தடுமாற்றம், வழக்கை தாமதப்படுத்துவதற்காக குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர் சில உக்திகளை கையாண்டதாக கூறப்படுவது, அரசுத்தரப்புக்கு நிதி போதாமை மற்றும் நீதி அமைப்பில் உள்ள அமைப்பு ரீதியான பிரச்னைகள் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த வழக்கு 32 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டதாக ரத்தோர் விளக்குகிறார்.

காவல்துறை முதல்கட்டமாக 1992-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தபோது, கடந்த வாரம் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட ஆறு பேரும் அச்சமயத்தில் தலைமறைவாக இருந்ததால் விடுபட்டிருந்தனர்.

அது தவறு என நம்பும் ரத்தோர், 2002-ல் அந்த ஆறு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தபோதும் அவர்கள் தலைமறைவாகவே இருந்தனர். அவர்களுள் இருவர் 2003-ம் ஆண்டும் 2005-ல் ஒருவரும் மேலும் இருவர் 2012-ம் ஆண்டும் கைது செய்யப்பட்டனர், கடைசி நபர் 2018-ல் கைது செய்யப்பட்டார்.

இழுத்தடிக்கப்பட்டது ஏன்?

ஒவ்வொரு முறையும் ஒரு நபர் கைது செய்யப்படும்போதும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அரசுத்தரப்பால் கொண்டு வரப்பட்ட சாட்சியங்களுடன் மீண்டும் விசாரணை புதிதாக தொடங்கும்.

“சட்டத்தின்படி, சாட்சியங்கள் சாட்சியம் வழங்கும்போது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருக்க உரிமை உள்ளது. எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்வதற்கு உரிமை உள்ளது,” என ரத்தோர் விளக்குகிறார்.

இது பாதிக்கப்பட்டவர்களை அந்த மோசமான சூழ்நிலையை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வழிவகுக்கிறது.

தங்களுடைய 40 மற்றும் 50 வயதுகளில் உள்ள பாதிக்கப்பட்ட நபர்கள், தாங்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு பல ஆண்டுகள் கழித்தும் தங்களை ஏன் நீதிமன்றத்திற்கு இழுக்கிறீர்கள் என, நீதிபதியை நோக்கி அடிக்கடி கத்தியதாக ரத்தோர் நினைவுகூர்கிறார்.

காலம் கடக்கவே, சாட்சியங்களை கண்டறிவது காவல்துறையினருக்கு சவாலாக இருந்தது.

“அதிலிருந்து கடந்து சென்றுவிட்டதால் அந்த வழக்குடன் தொடர்புப்படுத்திக் கொள்ள பலரும் விரும்பவில்லை,” என ரத்தோர் கூறுகிறார்.

“இப்போதும் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவர் கைது செய்யப்பட்டாலோ அல்லது இந்த தீர்ப்புக்கு எதிராக ஒருவர் மேல்முறையீடு செய்தாலோ, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்கள் தங்களின் சாட்சியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.”

ஆறு பேர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவதில் முக்கிய பங்கு வகித்த சாட்சியங்களை வழங்கிய மூன்று பேரில் ஒருவரான சுஷ்மா, உண்மையை கூறுவதாலேயே தான் அனுபவித்த வேதனையை ஊடகத்திடம் தெரிவிப்பதாக கூறினார்

“நான் என்னுடைய கதையை மாற்றவில்லை. எனக்கு அவர்கள் இதை செய்தபோது, நான் இளம்பெண், ஓர் அப்பாவியாக இருந்தேன். என்னிடமிருந்து அனைத்தையும் அச்சம்பவம் பிடுங்கிவிட்டது. என்னிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை,” என அவர் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)