மோதி அமைச்சரவையில் உள்ள 20 அரசியல் வாரிசுகளின் குடும்ப பின்னணி - முழு விவரம்

பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அமைச்சரவையில் சுமார் 20 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் 20 அமைச்சர்களின் பெயர் பட்டியலை வெளியிட்ட ராகுல் காந்தி "பல தலைமுறைகளின் பாரம்பரிய மிக்க போராட்டம், சேவை, தியாகம் ஆகியவற்றை 'குடும்ப அரசியல்' என்று சொன்னவர்கள், தற்போது தங்களது விருப்பத்திற்கேற்ப அதிகாரத்தை 'வாரிசுகளுக்கு' வழங்கியுள்ளனர். சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இந்த வேறுபாட்டைத்தான் நரேந்திர மோதி என்கிறோம்." என ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்ட பட்டியலின்படி தற்போது கேபினட் அமைச்சரவையில் ஒரு முன்னாள் பிரதமரின் மகன், ஒரு முன்னாள் பிரதமரின் பேரன், மூன்று முன்னாள் முதல் அமைச்சர்களின் மகன்கள், ஐந்து முன்னாள் மத்திய அமைச்சர்களின் மகன்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஹெச். டி. குமாரசாமி

கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய கேபினட் அமைச்சருமான குமாரசாமியின் தந்தை ஹெச்.டி. தேவே கௌட . ஜனதா தளம் கட்சியின் தலைவரான தேவே கௌட 1994- ல் முதல் முறையாக கர்நாடகாவின் முதலமைச்சரானார்.

1996-ல் வாஜ்பேயி அரசு 13 நாட்களில் கவிழ்ந்தபோது, கூட்டணி கட்சிகள் துணையுடன் இந்திய பிரதமராக பதவியேற்றார். ஆனால் அவரால் 10 மாதங்கள் வரை மட்டுமே அப்பதவியில் நீடிக்க முடிந்தது. தற்போது தேவே கௌட மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

ஜெயந்த் சவுத்ரி

இதேபோல தற்போது அமைச்சரவையில் உள்ள ஜெயந்த் சவுத்ரியின் தாத்தாவான சவுத்ரி சரண் சிங் முன்னாள் பிரதமராவார். சரண் சிங் 1979-ல் இந்தியாவின் ஐந்தாவது பிரதமராக பதவியேற்றார். இரண்டு முறை உத்தர பிரதேச முதலமைச்சராகவும் சரண் சிங் இருந்துள்ளார்.

ராம்நாத் தாகூர்

மோதியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ராம்நாத் தாகூரின் தந்தை கர்ப்பூரி தாக்கூர் பிகாரின் முன்னாள் முதல் அமைச்சராக இருந்தவர். கடந்த ஜனவரி மாதம் கர்ப்பூரி தாகூருக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி 1952-ல் முதல்முறையாக பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கர்ப்பூரி தாகூர், அதன் பிறகு தன் அரசியல் வாழ்க்கையில் ஒருமுறை கூட தோற்றதில்லை என குறிப்பிட்டுள்ளது. சோஷலிச கட்சி சார்பாகவும், ஜனதா கட்சி சார்பாகவும் இரண்டு முறை பிகார் முதல்வராக இருந்தவர் கர்ப்பூரி தாகூர்.

ராவ் இந்திரஜித் சிங்

தற்போது மோதியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாஜகவைச் சேர்ந்த ராவ் இந்திரஜித் சிங்கின் தந்தை ராவ் பிரேந்திர சிங் அரியாணாவின் முதலமைச்சராக இருந்தவர். இந்த குடும்பத்துக்கு நீண்ட அரசியல் பாரம்பரியம் உள்ளது. அதுமட்டுமின்றி சுதந்திர போராட்ட பின்னணியும் உண்டு.

அரியாணாவைச் சேர்ந்த ராவ் இந்திரஜித் சிங், காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் அமைச்சரவையிலும் இடம்பெற்றார். பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜனதா தளத்தில் இணைந்து, சந்திரசேகர் அமைச்சரவையிலும் இடம் பிடித்திருந்தார்.

அவரது மகன் ராவ் இந்திரஜித் சிங் மூன்று முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 2014 முதல் பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். தற்போது குர்கான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராவ் இந்தர்ஜித் சிங்குக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ரவ்நீத் சிங் பிட்டு

பஞ்சாப்பை சேர்ந்த இணையமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டுவின் தாத்தா பியாந்த் சிங் முன்னாள் முதலமைச்சராக இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் சார்பில் பியாந்த் சிங் 1992-ல் பஞ்சாப் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1995-ல் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் பியாந்த் சிங் கொல்லப்பட்டார்.

சிராக் பஸ்வான்

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் தற்போது மோதி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வானின் தந்தை ராம் விலாஸ் பஸ்வான் மோதி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2020 வரை அவரது அமைச்சரவையில் இருந்தவர். மக்களவையில் ஒன்பது முறை, மாநிலங்களவையில் இரண்டு முறை என மொத்தம் 11 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

இந்திய அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலான ராம் விலாஸ் பஸ்வானின் அரசியல் பயணம் பல ஏற்றங்கள் கொண்டதாகவே இருந்தது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய அமைச்சரவையில் மீண்டும் இடம்பிடித்துள்ள ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையான மாதவ்ராவ் சிந்தியா நரசிம்மராவ் அமைச்சரவையில் விமான போக்குவரத்து துறை, சுற்றுலா, மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளை கவனித்தார்.

முன்னதாக, ராஜிவ் காந்தி அமைச்சரவையிலும் மாதவ்ராவ் சிந்தியா இணை அமைச்சராக செயல்பட்டிருக்கிறார். தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் ஜன சங்கத்திலும், ஜனதா கட்சியிலும் இருந்தவர், பின்னர் காங்கிரசில் இணைந்தார். 1984-ல் காங்கிரஸ் சார்பில் நின்று அடல் பிகாரி வாஜ்பேயியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். தனது 56 வயதில் மாதவராவ் சிந்தியா 2001-ல் நிகழ்ந்த விமான விபத்தில் மரணமடைந்தார்.

ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து 2020-ம் ஆண்டு விலகி பாஜகவுடன் இணைந்தார். இதனால் அப்போது மத்திய பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கவிழந்தது குறிப்பிடத்தக்கது.

ராம் மோகன் நாயுடு

ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராம் மோகன் நாயுடு இளம் வயது அமைச்சராக மோதியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். தேவே கௌட, ஐ.கே குஜரால் அமைச்சரவையில் இவரது தந்தை கிஞ்சரப்பு எர்ரன் நாயுடு இருந்துள்ளார்.

ஆந்திர மாநில அரசியலில் முக்கிய நபராக பார்க்கப்படும் எர்ரன் நாயுடு , சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், மக்களவை உறுப்பினர் மத்திய அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்திருக்கிறார். ஶ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1996 முதல் 2009 வரை இருந்த எர்ரான் நாயுடு ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார்.

பியூஷ் கோயல்

தற்போது மத்திய அமைச்சரவையில் உள்ள பியூஷ் கோயல் தந்தை வேத் பிரகாஷ் கோயல் வாஜ்பேயி அமைச்சரவையில் இருந்தவர். அடல் பிகாரி வாஜ்பேயி அரசாங்கத்தில் 2001 முதல் 2003 மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டார்.

தர்மேந்திர பிரதான்

ஒடிஷாவைச் சேர்ந்த தர்மேந்திர பிரதானின் தந்தை தேவேந்திர பிரதான் 1998 – 2004 ஆண்டுகளில் வாஜ்பேயி அமைச்சரவையில் இணை அமைச்சர் பதவி வகித்தார்.

கிரண் ரிஜிஜூ

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் தந்தை ரின்சின் கரு , அருணாசல பிரதேசத்தில் தற்காலிக சபாநாயகராக இருந்துள்ளார்.

ஜே பி நட்டா

பாஜக தேசிய தலைவரும் தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜே பி நட்டாவின் மாமியார் ஜெயஶ்ரீ பானர்ஜி. இவர், மத்திய பிரதேச அமைச்சரவையிலும் இடம் பிடித்துள்ளார். அத்துடன், ஜபல்பூர் தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.

ஜிதின் பிரசாதா

மத்திய இணை அமைச்சர் ஜிதின் பிரசாதாவின் தந்தை ஜிதேந்திர பிரசாதா காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். ராஜிவ்காந்தி, நரசிம்மராவ் ஆகியோர் பிரதமராக இருந்தபோது அவர்களின் அரசியல் ஆலோசகராக அறியப்பட்டார்.

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக நான்கு முறையும் மாநிலங்களவை உறுப்பினராக ஒருமுறையும் பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பொறுப்பும் உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் ஜிதேந்திர பிரசாதா செயல்பட்டுள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் சோனியா காந்திக்கு எதிராக ஜிதேந்திர பிரசாதா போட்டியிட்டார். அவரது மகன் ஜிதின், கடந்த 2021-ல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது ஜிதின் இணை அமைச்சராக உள்ளார்.

கீர்த்தி வர்தன் சிங்

மோதி அமைச்சரவையில் வெளியுறவுத் துறையின் இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கீர்த்தி வர்தன் சிங்-ன் தந்தை மகாராஜ் ஆனந்த் சிங், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக இருந்தவர். அவர், கடந்த 2014-ல் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.

அனுப்பிரியா பட்டேல்

மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை இணை அமைச்சராக உள்ள அனுப்பிரியா பட்டேல்-ன் தந்தை சோனே லால் பட்டேல் உத்தரபிரதேசத்தின் முக்கிய அரசியல்வாதி. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சோனேலால், சரண் சிங்கின் உதவியுடன் அரசியலுக்குள் நுழைந்தவர்.

பகுஜன் சமாஜ் கட்சியை நிறுவியவர்களில் ஒருவரான சோனேலால் பின்னர் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி அப்னா தள் என்கிற தனிக்கட்சியை உருவாக்கினார். 2009 ல் சோனேலால் சாலை விபத்தில் மரணமடைந்தார்.

அவரது மறைவிற்கு பிறகு கட்சி இரண்டாக பிரிந்தது. அப்னா தளம் சோனேலால் பிரிவின் தலைவரான அனுப்பிரியா தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றதோடு மிர்சாபூர் தொகுதியில் வென்று தற்போது இணை அமைச்சராகியுள்ளார்.

ரக்‌ஷா நிகில் கட்சே

பாஜகவின் ரக்‌ஷா நிகில் கட்சே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மாமனார், ஏக்நாத் கட்சே கடந்த 1987 முதல் 2020 வரை பாஜகவில் இருந்தவர்.

பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸிஸ் இணைந்தார். தற்போது சரத் பவார் அணியில் ஏக்நாத் கட்சே அங்கம் வகிக்கிறார்.

கம்லேஷ் பஸ்வான்

ஊரக மேம்பாட்டுத் துறையின் இணையமைச்சராக பதவியேற்றிருக்கும் கம்லேஷ் பஸ்வானின் குடும்பமும் அரசியல் பின்புலம் கொண்டது தான். அவரது தந்தை ஓம் பிரகாஷ் பஸ்வான் பாஜக சார்பில் உத்திரபிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

கடந்த 1996ல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது அவர் கொலை செய்யப்பட்டார். கம்லேஷின் தாயார் சுபவதி பஸ்வான் சமாஜ்வாதி கட்சி 1996-ல் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றிருக்கிறார். கம்லேஷின் சகோதரர் விம்லேஷ் பஸ்வான் உத்தர பிரதேச பாஜக அரசில் சட்டமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கிறார்.

சாந்தனு தாகூர்

சாந்தனு தாகூருக்கு துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித்துறை இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரது தந்தை மஞ்சுல் கிருஷ்ண தாகூர் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அமைச்சராக இருந்தவர். 2014-ல் பாஜகவில் சேர்ந்த அவர் சில மாதங்களிலேயே மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்.

அன்னபூர்ண தேவி

நரேந்திர மோதி அரசின் கேபினட் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அன்னபூர்ண தேவியின் கணவர் பிகார் மாநிலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இருந்தவர். அன்னபூர்ண தேவி ராஷ்ட்ரிய ஜனதா தளத்திலிருந்து பின்னர் பாஜகவுக்குச் சென்றார்.

விரேந்திர குமார் கதிக்

மோதி அரசின் கேபினட்டில் இடம்பிடித்துள்ள விரேந்திர குமார் மத்திய பிரேதேசத்தின் மூத்த அரசியல் வாதி கௌரி ஷங்கர் ஷெஜ்வாரின் மைத்துனர். கௌரி ஷங்கர் மத்திய பிரேதேசத்தின் மூத்த பாஜக அரசியல்வாதி.

மாநில அரசில் அமைச்சராக இருந்தார், திக்விஜய் சிங் ஆட்சியின் போது எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)