பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் திருநெல்வேலி பெண் - காணொளி

காணொளிக் குறிப்பு, பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் திருநெல்வேலி பெண் - காணொளி
பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் திருநெல்வேலி பெண் - காணொளி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் லட்சுமி தேவி. இயற்கை விவசாய ஆர்வலரான இவர் கடந்த 13 வருடங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்து அழிவின் விளிம்பில் இருந்த 37 வகையான பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்து தனது நிலத்தில் பயிரிட்டு வருகிறார்.

தைராய்டு நோயின் காரணமாக எடை குறைந்து உடல்நிலை மோசமான போது, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி மற்றும் காய்கறிகளை தொடர்ந்து உட்கொண்டது இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெற உதவியது எனக் கூறுகிறார்.

இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் எதையும் பயன்படுத்தாமல் பஞ்சகாவியம், அமிர்த கரைசல் போன்றவற்றை பயன்படுத்தி பாரம்பரிய இயற்கை விவசாய முறையில் பால்குடவாழை, இரத்தசாலி, ஆத்தூர் கிச்சடி சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, கொட்டார சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற 37 வகையான நெல் விதைகளை பயிரிட்டும் பாதுகாத்தும் வருகிறார்.

தனது நிலத்தில் இயற்கை விவசாய முறையில் விளையும் அரிசி வகைகளை குறைந்த விலையில் பொது மக்களுக்கு நேரடியாக விற்பனையும் செய்கிறார்.

இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் மட்டுமில்லாமல் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்த புரிதலும் இவருக்கு இருக்கிறது. முதல் இரண்டு வருடங்களுக்கு தனது நிலத்தில் போதிய விளைச்சல் இல்லாததால், இதை கைவிடுமாறு பலர் வலியுறுத்தியதை நினைவு கூறுகிறார்.

நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு ஏற்றவாறு தயார் செய்து, நல்ல விளைச்சல் பெற குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை ஆகும், எனவே இயற்கை விவசாயத்தில் ஈடுபட விரும்புபவர்கள் இதையும் நினைவில் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

இயற்கை முறையில் பாரம்பரிய நெல் வகைகளை மட்டுமே பயிரிட்டு மற்ற விவசாய முறைகளை விட அதிக விளைச்சல் என்னும் இலக்கை அடைந்துள்ளார். இவரது இந்த சாதனையை பாராட்டி தமிழக அரசின் சார்பாக பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது, 2022-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல் வகைகள் குறித்து பிற விவசாயிகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார். இதற்காக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து வரும் இவர், தமிழ்நாட்டின் பாரம்பரிய வேளாண்மை குறித்த தகவல்கள் பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டுமென வலியுறுத்துகிறார்.

தயாரிப்பு, ஒளிப்பதிவு – சிராஜ், பிபிசி தமிழுக்காக

படத்தொகுப்பு – டேனியல், பிபிசி தமிழுக்காக

பெண்கள், இயற்கை விவசாயம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: