சாகிப் உல் கனி: விஜய் ஹசாரே தொடரில் கோலி, ரோகித்தைத் தாண்டி இவர் பேசப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடருக்கு சற்றும் குறைவில்லாமல் இந்தியாவில் நடக்கும் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
இதற்கு நட்சத்திர போட்டியாளர்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பாக விளையாடுவதும் காரணமாக இருக்கிறது.
விராட் கோலி அல்லது ரோஹித் ஷர்மா அல்லது தற்போது கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரும் சிறப்பாக விளையாடிவருகின்றனர்.
லிஸ்ட்-ஏ கிரிக்கெட் போட்டியில் 32 பந்துகளில் வேகமாக சதம் அடித்த சாகிப் உல் கனி போன்ற பொதுமக்கள் அதிகம் அறியாத பல கிரிக்கெட் வீரர்களும் இதில் உள்ளனர்.
டி20 இந்திய அணிக்கு திரும்பியுள்ள இஷான் கிஷானும் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்காக திறம்பட பேட்டிங் செய்து 33 பந்துகளில் சதம் அடித்தார்.
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தற்போது ஒரு குழுவுக்குள் இடம்பெற்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், போட்டி குறித்த ஆர்வம் இன்னும் அதிகரிக்கும்.
டெண்டுல்கரை விஞ்சிய கோலி

பட மூலாதாரம், Getty Images
பெங்களூருவில் நடந்த ஆந்திர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், உள்நாட்டு கிரிக்கெட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது.
விராட் கோலி 2009-2010ல் நடந்த விஜய் ஹசாரே தொடரில் தான் கடைசியாக பங்கேற்றார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து அவர் உள்நாட்டு போட்டிக்கு திரும்பியுள்ளார்.
ஆந்திர பிரதேசத்தின் 299 ரன்கள் எனும் இலக்கை துரத்திய டெல்லி அணி சார்பாக விராட் கோலி 101 பந்துகளில் 131 ரன்கள் அடித்தார்.
லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் வேகமாக 16,000 ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இதன்மூலம் விராட் கோலி மிஞ்சினார். இந்த சாதனையை தன்னுடைய 330வது இன்னிங்ஸில் அவர் படைத்துள்ளார்.
கிரிக்கெட் வலைதளமான இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ அளித்துள்ள தகவலின்படி, சச்சின் டெண்டுல்கர் 16,000 ரன்கள் என்ற சாதனையை தன்னுடைய 391வது இன்னிங்ஸில் அடித்தார். டெண்டுல்கர் விளையாடிய 551 லிஸ்ட் ஏ போட்டிகளில் 538வது இன்னிங்ஸ் வரை 21,999 ரன்கள் வைத்திருந்தார். இதில், 452 ஒருநாள் சர்வதேசஇன்னிங்ஸ்களில் அடித்த 18,426 ரன்களும் அடக்கம்.
ஆனால், விராட் கோலி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 296 இன்னிங்ஸ்களில் 14,557 ரன்களை அடித்திருந்தார்.
ரோஹித் ஷர்மாவின் தனித்துவமான சாதனை

பட மூலாதாரம், Getty Images
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா விஜய் ஹசாரே கோப்பை தொடரில் நன்றாக விளையாடினார். இவர் இந்த தொடரில் கடைசியாக 2017-2018ம் ஆண்டு சீசனில் பங்கேற்றிருந்தார்.
இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் ரோஹித் இந்த தொடருக்கு மீண்டும் திரும்பியுள்ளார். சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக அவர் சதம் அடித்தார். ஜெய்பூரில் நடந்த அப்போட்டியில் மும்பை, சிக்கிம் அணியை 8 விக்கெட்டுகளில் தோற்கடித்தது, இதில் 94 பந்துகளில் ரோஹித் ஷர்மா 155 ரன்களை அடித்தார்.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்தின்படி, லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிகளவிலான 150 ரன்களை குவித்த டேவிட் வார்னரின் சாதனையை ரோஹித் ஷர்மா சமன் செய்தார்.

இந்த சாதனையை டேவிட் வார்னர் மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் 9 முறை படைத்துள்ளனர்.
இதன்மூலம், இந்த தொடரில் சதம் அடித்த இரண்டாவது அதிக வயதுடைய வீரரானார். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்தின்படி, ரோஹித் ஷர்மா இந்த சதத்தை தன்னுடைய 38 வயதில் (238 நாட்கள்) அடித்துள்ளார்.
முன்னதாக, வங்காள அணியின் அனுஸ்டுப் மஜும்தார் 2023-2024ம் ஆண்டு சீசனில், தன்னுடைய 39வது வயதில் இரண்டு சதங்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை படைத்தார்.
விஜய் ஹசாரே தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி பங்குபெறுவது குறித்து எதிர்பார்ப்பு கிளம்பியது. கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவரும் தங்களின் ஆட்டத்திற்காக பாராட்டை பெற்றிருந்தனர்.
அதிக இலக்கை வைத்த பிகார் அணி

பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட்டில் ஆச்சர்யங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், அதுதான் பிகார் மற்றும் அருணாச்சல பிரதேச அணிகளுக்கு இடையிலான போட்டியின்போதும் நடந்தது. ஒருநாள் போட்டியில் அருணாச்சல பிரதேச அணிக்கு 575 என்ற இலக்கை நிர்ணயித்த பிகார், 397 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த அதிக ரன்கள் இலக்குக்கு மூன்று பேட்ஸ்மேன்களின் திறமையான ஆட்டம் காரணமாக இருந்தது. இதில், கிரிக்கெட்டில் தற்போது பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் வைபவ் சூர்யவன்ஷி வ் எறும் 84 பந்துகளில் 190 ரன்களை அடித்திருந்தார்.
இரண்டாவதாக, சாகிப் உல் கனி ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 128 ரன்களையும் ஆயுஷ் லோஹாருகா 116 ரன்களையும் அடித்தனர்.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்தின்படி, சாகிப் உல் கனி 32 பந்துகளில் சதம் அடித்தார், இதன்மூலம் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன்களில் மிக வேகமாக சதமடித்தவர் ஆனார். முன்னதாக, இந்த சாதனையை 35 பந்துகளில் சதம் அடித்து அன்மோல்ப்ரீத் சிங் படைத்தார்.
வைபவ் சூர்யவன்ஷி 59 பந்துகளில் 150 ரன்களை அடித்திருந்தார், இதன்மூலம் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் வேகமாக 150 ரன்களை அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 2015ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 64 பந்துகளில் 150 ரன்களை அடித்து தென்னாப்பிரிக்காவின் ஏபி டீ வில்லியர்ஸ் இந்த சாதனையை படைத்தார்.
மற்றொருபுறம், டி20 அணிக்கு திரும்பியுள்ள இஷான் கிஷன், திறம்பட பேட்டிங் செய்தார்.
கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் அவர் 125 ரன்களை விளாசினார், 33 பந்துகளில் அவர் சதம் அடித்தார்.
ஆனால், அவருடைய அதிரடியான பேட்டிங்குக்கு மத்தியிலும் கர்நாடகா அணியை அவருடைய அணியால் வெற்றி பெற முடியவில்லை. கர்நாடகா அணி 48வது ஓவரில் ஜார்க்கண்டின் 412 ரன்களை தாண்டியது. இப்போட்டியில் தேவ்தத் படிக்கல் கர்நாடக அணிக்காக 147 ரன்களை அடித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












