சாண்டா கிளாஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? வரலாற்றுப் பின்னணி

சாண்டா கிளாஸ் ஸ்லெட்ஜ்

பட மூலாதாரம், Avalon/Photoshot License/Alamy

    • எழுதியவர், இல்கா சைரன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சாண்டா கிளாஸ் எங்கிருந்து வருகிறார்? இந்தக் கேள்வியை நீங்கள் பின்லாந்து மக்களிடம் கேட்டால், அவர் லேப்லாந்தில் உள்ள 'கொர்வாதுந்துரி' மலையிலிருந்து வருகிறார் என்று கூறுவார்கள்.

லேப்லாந்து என்பது பின்லாந்தின் வடகோடியில் உள்ள பிரதேசம் ஆகும்.

டச்சு மக்கள் சாண்டா கிளாஸை 'சிண்டர்கிளாஸ்' என்று அழைக்கிறார்கள், ஜெர்மனியில் அவர் 'வைனக்ட்ஸ்மேன்' என்று அழைக்கப்படுகிறார். நீங்கள் அவரை 'சாண்டா' என்று அறிந்திருக்கலாம்.

சாண்டா கிளாஸுக்கு இது போன்ற பல பெயர்கள் உள்ளன. அதேபோல், பல நாடுகள் சாண்டா கிளாஸ் தங்களுக்கே சொந்தமானவர் என்று நினைக்கின்றன. இருப்பினும், ஒரு நாடு மட்டும் சாண்டா கிளாஸ் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், சாண்டாவின் உண்மையான அதிகாரப்பூர்வ இல்லம் தங்கள் நாட்டில்தான் உள்ளது என்றும் அதிகப்படியான உரிமையைக் கோர முடியும்.

செயின்ட் நிக்கோலஸ் இடைக்காலத்தைச் சேர்ந்த தாராள மனமும் பரோபகார சிந்தனையும் கொண்ட ஒரு கிறிஸ்தவ புனிதர் ஆவார். அவர் நான்காம் நூற்றாண்டில் தற்போதைய துருக்கியில் உள்ள 'மைரா' என்ற சிறிய ரோமானிய நகரத்தின் ஆயராக இருந்தார். அவரே இந்த சாண்டா கிளாஸ் உருவத்திற்குப் பின்னால் உள்ள தூண்டுதல் என்று நம்பப்படுகிறது.

செயின்ட் நிக்கோலஸின் எச்சங்கள் மீது உரிமை கோரும் துருக்கி

நிச்சயமாக செயின்ட் நிக்கோலஸ் எங்கே அடக்கம் செய்யப்பட்டார், அவரது உடல் எச்சங்கள் துல்லியமாக எங்கே உள்ளன என்பதில் சர்ச்சை உள்ளது. சிலரின் கருத்துப்படி அவை இத்தாலியில் உள்ளன, வேறு சிலரோ அவர் அயர்லாந்தில் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர்.

அக்டோபர் 2017-ல், துருக்கியைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்தால்யா மாகாணத்தில் உள்ள செயின்ட் நிக்கோலஸ் தேவாலயத்தின் அடியில் ஒரு கல்லறையைக் கண்டுபிடித்தனர். அந்த இடம் பண்டைய மைராவின் இடிபாடுகளிலிருந்து வெகு தொலைவில் இல்லை. அந்தக் கல்லறை செயின்ட் நிக்கோலஸினுடையதுதான் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

சாண்டா கிளாஸின் சொந்த ஊர் எது

பட மூலாதாரம், Citikka/Alamy Stock Photo

படக்குறிப்பு, சாண்டா கிளாஸ் எங்கிருந்து வருகிறார் என்று பின்லாந்து மக்களிடம் கேட்டால், அவர் லேப்லாந்திலிருந்து வருகிறார் என்று அவர்கள் கூறுவார்கள்.

செயின்ட் நிக்கோலஸ் அடக்கம் செய்யப்பட்ட இடம் குறித்த தங்களது வாதத்தை துருக்கியால் நிரூபிக்க முடிந்தால், உலகெங்கிலும் உள்ள சாண்டா கிளாஸ் பிரியர்களுக்கு ஒரு புதிய புனிதத் தலம் கிடைக்கும். ஆனால் பின்லாந்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அவ்வாறு நடக்காது.

பின்லாந்து மக்களிடம் சாண்டா கிளாஸைப் பற்றி நீங்கள் கேட்டால், அவர்கள் தங்கள் நாட்டின் லேப்லாந்தில் உள்ள கொர்வாதுந்துரிதான் சாண்டா கிளாஸின் பூர்வீக இடம் என்று சொல்வார்கள்.

பனி மூடிய மலையில் உள்ள சாண்டா கிளாஸின் கிராமம்

கொர்வாதுந்துரி மலை பெரும்பாலும் பனியால் மூடப்பட்டிருக்கும், அங்கே கலைமான் (reindeer) கூட்டங்கள் இருக்கும். இந்த மலையில்தான் சாண்டா கிளாஸின் ரகசியப் பணிமனை இருப்பதாக பின்லாந்தின் பல மக்கள் நினைக்கிறார்கள்.

இடைக் காலத்தில் பின்லாந்துக்கு கிறிஸ்தவ மதம் வருவதற்கு முன்பு, பின்லாந்து மக்கள் 'யூல்' என்ற ஒரு பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். அது குளிர்காலத்தின் நடுப்பகுதியில் கொண்டாடப்பட்டது. அந்தப் பண்டிகையில் ஒரு பிரமாண்ட விருந்து ஏற்பாடு செய்யப்படும். அந்த நேரத்தில் பின்லாந்து மக்கள் உலகின் எந்தவொரு முக்கிய மதத்தையும் பின்பற்றவில்லை.

நுட்டிபுக்கி பாரம்பரியம்

செயின்ட் நட்ஸ் தினம், அதாவது ஜனவரி 13 அன்று பல நார்டிக் நாடுகளில் 'நுட்டிபுக்கி' வீடு வீடாகச் சென்று பரிசுகளைக் கேட்பார்கள், மீதமுள்ள உணவைக் கேட்பார்கள் அல்லது சேகரிப்பார்கள்.

நுட்டிபுக்கிகள் என்பது ஒரு குறிப்பிட்ட வகை உடையை அணியும் ஆண்கள் ஆவர். இவர்கள் மென்மையான உரோமத்தால் ஆன மேற்சட்டைகள், பிர்ச் மரப்பட்டைகளால் செய்யப்பட்ட முகமூடிகள் மற்றும் கொம்புகளை அணிகிறார்கள்.

சாண்டா கிளாஸ்

பட மூலாதாரம், Ilkka Sirén

படக்குறிப்பு, பின்லாந்தின் கல்வி மற்றும் கலாசார அமைச்சகம், பின்லாந்தின் சாண்டா கிளாஸ் பாரம்பரியத்தை 'வாழும் பாரம்பரியப் பட்டியலில்' சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்தது.

இந்த உடை அணிந்து அவர்கள் வீடு வீடாகச் செல்வார்கள். நுட்டிபுக்கிகள் தீய ஆவிகளாகக் கருதப்பட்டனர். அவர்களுக்குத் தேவையானது கிடைக்காவிட்டால் அவர்கள் சத்தமிட்டு குழந்தைகளைப் பயமுறுத்துவார்கள்.

1800-களில் பரோபகாரியான புனித நிக்கோலஸ் பின்லாந்தில் பிரபலமானார். "முகமூடி அணிந்து நுட்டிபுக்கி வேடமிடும் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பாரம்பரியத்துடன், செயின்ட் நிக்கோலஸின் இந்த பிம்பம் ஒன்றிணைந்தது. இதன் விளைவாக 'ஜோலுபுக்கி' உருவானார், இதற்கு 'யூல் ஆடு' என்று பொருள்."

அன்பான ஜோலுபுக்கி

ஜோலுபுக்கியின் நடத்தை நுட்டிபுக்கிக்கு நேர்மாறாக இருந்தது. நுட்டிபுக்கி பொருட்களைக் கேட்பார், மாறாக ஜோலுபுக்கி பொருட்களை வழங்குவார். சாண்டா கிளாஸ் வீட்டின் புகைபோக்கி வழியாகக் கீழே இறங்குகிறார். அதற்கு மாறாக சிவப்பு நிற உடை அணிந்த ஜோலுபுக்கி கதவைத் தட்டி "இங்கே நல்ல நடத்தையுள்ள குழந்தைகள் யாராவது இருக்கிறார்களா?" என்று பொருள்படும் "ஒன்கோ தல்லா கில்டேஜா லாப்சியா?" என்று கேட்பார்.

பின்னர் பரிசுகளைக் கொடுத்த பிறகு ஜோலுபுக்கி மீண்டும் கொர்வாதுந்துரி மலைக்குத் திரும்புவார். கொர்வாதுந்துரி என்பதற்கு பின்லாந்து மொழியில் 'காதுகளின் மலை' என்று பொருள். கொர்வாதுந்துரி என்பது ஜோலுபுக்கி அனைத்தையும் கேட்கக்கூடிய ஒரு இடம் என்பது பின்லாந்து மக்களின் நம்பிக்கையாகும்.

பின்லாந்தின் ரோவனியேமி

பட மூலாதாரம், Tony Lewis/Getty Images

படக்குறிப்பு, பின்லாந்தின் ரோவனியேமியில் உள்ள சாண்டா கிளாஸ் கிராமத்தில் சுற்றுலாப் பயணிகள் பின்லாந்தின் சாண்டா கிளாஸைச் சந்திக்கலாம்.

நவம்பர் 2017-ல், பின்லாந்தின் கல்வி மற்றும் கலாசார அமைச்சகம் ஜோலுபுக்கியை (அல்லது இன்று அழைக்கப்படுவது போல் பின்னிஷ் சாண்டா கிளாஸ் பாரம்பரியம்) தேசிய வாழும் பாரம்பரியப் பட்டியலில் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்தது.

யுனெஸ்கோவின் 'புலப்படாத கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கையின்' ஒரு பகுதியாக தேசிய தொல்பொருள் வாரியத்தால் இந்தப் பட்டியல் பராமரிக்கப்படுகிறது.

"பின்லாந்தின் சாண்டா கிளாஸுக்கும் எங்களுக்கும் இது ஒரு பெரிய நடவடிக்கையாகும். இறுதியில் யுனெஸ்கோவின் புலப்படாத கலாசார பாரம்பரியத்தின் சர்வதேசப் பட்டியலில் பின்லாந்தின் சாண்டா கிளாஸ் பாரம்பரியம் சேர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்கிறார் ஜாரி அஹோஹர்ஜு. அவர் பின்லாந்தின் சாண்டா கிளாஸ் அறக்கட்டளையின் பிரதிநிதி ஆவார்.

பின்லாந்தின் சுற்றுலாத் துறையில் சாண்டா கிளாஸின் முக்கியத்துவம்

அஹோஹர்ஜுவின் கூற்றுப்படி, யுனெஸ்கோ பட்டியலில் இடம் பெறுவதால் சாண்டா கிளாஸ் பின்லாந்துக்கு மட்டுமே சொந்தமான பாரம்பரியம் என்ற அங்கீகாரம் கிடைக்காது என்றாலும், அது பின்லாந்திற்கு ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று ரீதியான கௌரவமாக இருக்கும். சாண்டா கிளாஸ் வசிக்கும் நாடு என்ற பின்லாந்தின் நிலை இதன் மூலம் மேலும் வலுவடையும்.

ஆனால், சாண்டா கிளாஸ் மீது ஏன் உரிமை கோர வேண்டும்? ஒருவேளை சாண்டா கிளாஸ் மீது யார்தான் உரிமை கோர மாட்டார்கள் என கேட்பது அதைவிட பொருத்தமான கேள்வியாக இருக்கும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். பலருக்கு சாண்டா கிளாஸ் என்பவர் மிகவும் மகிழ்ச்சியான, பரிசுகளை வழங்குகிற, அமைதியான ஆளுமை.

அவர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும், சூழலை உற்சாகமாக மாற்றவும் விரும்பும் ஒரு நபர். நிச்சயமாக, சிலர் சாண்டா கிளாஸை நவீன வணிகமயமாக்கலின் முகமாகப் பார்க்கிறார்கள். இருப்பினும் சாண்டா கிளாஸின் மகிழ்ச்சியான, கலகலப்பான மனநிலையின் தாக்கத்திலிருந்து தப்பிப்பது கடினம்.

இறுதியில் சாண்டா கிளாஸ் உண்மையானவராக இருந்தாலும் சரி அல்லது கற்பனையானவராக இருந்தாலும் சரி, அவர் நன்மதிப்பு மற்றும் நல்லெண்ணத்தின் தூதர்.

இதில் சுற்றுலா என்பது ஒரு முக்கியமான விஷயம். 'விசிட் பின்லாந்து' தகவல்படி, கடந்த ஆண்டு லேப்லாந்தில் இரவு தங்குபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அங்குள்ள 'நார்தர்ன் லைட்ஸ்' (வடதுருவ ஒளி) சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பெரிய ஈர்ப்பாக இருந்தாலும், லேப்லாந்து வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ரோவனியேமியில் உள்ள பின்னிஷ் சாண்டா கிளாஸைச் சந்திக்க ஆர்வமாக உள்ளனர். ரோவனியேமி என்பது பின்லாந்தின் லேப்லாந்தில் உள்ள ஒரு நகரம். ஒருவகையில் அது சாண்டா கிளாஸின் கிராமம்.

பின்லாந்தின் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்கு சாண்டா கிளாஸ் ஒரு முக்கியமான ஈர்ப்பு மற்றும் அதனால் அவர்களுக்கு அவர் ஒரு விலைமதிப்பற்ற சொத்து.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பின்லாந்தின் புவியியல் சூழலுக்கும் சாண்டா கிளாஸ் பாரம்பரியத்திற்கும் உள்ள ஒற்றுமை

செயின்ட் நிக்கோலஸின் எச்சங்கள் உண்மையிலேயே அந்தால்யாவில் கண்டெடுக்கப்பட்டால், அது சாண்டா கிளாஸ் மீதான துருக்கியின் உரிமை கோரலுக்கு நிச்சயமாக வலு சேர்க்கும்.

இருப்பினும், துருக்கியில் பனி அல்லது பனிப்பொழிவு இல்லை, கலைமான் இல்லை மற்றும் நார்தர்ன் லைட்ஸ் கிடையாது. இந்த அம்சங்கள் அனைத்தும் சாண்டா கிளாஸின் இல்லத்துடன் மிக ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக இவை அனைத்தும் பின்லாந்தில் காணப்படுகின்றன.

நமது இந்த மகிழ்ச்சியான நண்பருக்கு எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று யாருக்குத் தெரியும். ஆனால் ஒன்று நிச்சயம், ஜோலுபுக்கி லேப்லாந்திலிருந்து தனது நீண்ட பயணத்தை தொடங்குவார்.

அவர் பறந்து வரமாட்டார், மாறாக தனது ஸ்லெட்ஜ் வண்டியில் (பனி மீது சறுக்கிச் செல்லும் சக்கரமில்லாத வண்டி) பனிப் பாதைகளைக் கடந்து வருவார். அவர் வந்து பின்லாந்தின் அனைத்து வீடுகளின் கதவுகளையும் தட்டி, "ஒன்கோ தல்லா கில்டேஜா லாப்சியா?" அதாவது "இங்கே நல்ல குழந்தைகள் இருக்கிறார்களா?" என்று கேட்பார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு