திருநங்கை கீர்த்தனாவின் காளையிடம் திணறிய மாடுபிடி வீரர்கள் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை கீர்த்தனாவின் காளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் சுற்றில் வெற்றி பெற்றது. வாடிவாசலைத் திறந்தவுடன் பாய்ந்து வந்த அவருடைய காளையைப் பிடிக்க முடியாமல் மாடுபிடி வீரர்கள் திணறிய காட்சியைக் கண்ட கீர்த்தனாவால், மகிழ்ச்சிச் சிரிப்பை மறைக்க முடியவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட வாடிவாசல்களில் அவருடைய மாடுகள் களமிறங்கியுள்ளன.
அவர் பிபிசியிடம் முன்பு பேசியபோது, “ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் வந்தபோது, காவல்துறை, ஐடி என்று பல துறைகளில் சாதிக்கிறார்களே, நாம் ஏன் மாடு வளர்க்கக்கூடாது எனத் தோன்றியது.
எனக்குத் தெரிந்த விஷயத்தில் இறங்கி ஏன் சாதிக்கக்கூடாது என்று நினைத்தேன். அப்போது தொடங்கி மாடுகளை ஜல்லிக்கட்டுக்கு வளர்த்து வருகிறேன்,” என்று கூறினார்.
2022-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டிலும் மாடுகளைக் களமிறக்க அவர் தயார்படுத்தினார். இப்போது 2023 ஜல்லிக்கட்டையும் அவருடைய காளை வெற்றியோடு தொடக்கி வைத்துள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7.45 மணிக்குத் தொடங்கியது. 318 மாடுபிடி வீரர்கள், 1004 காளைகள் பங்கேற்புடன் தொடங்கியது.
மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் தமிழ்நாடு பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் நாளான இன்று அவனியாபுரத்தில் தொடங்கியது.
தொடர்ந்து மூன்று நாள் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டின் முதல் நாள் போட்டிகள் அவனியாபுரத்தில் நடக்கின்றன.
ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர். 45 நிமிடங்களுக்கு ஒரு சுற்று வீதம், இன்று மாலை வரை 8 முதல் 10 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். காலை 7.45 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து முழு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி 16 பேர் அடங்கிய ஆலோசனைக் குழு அமைத்து மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டை நடத்துகிறது.

போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவும் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
மாடுபிடி வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிப்பதற்கு மருத்துவக் குழுவினருக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்குப் பரிசோதனை மற்றும் முதலுதவி அளிக்கக் கால்நடை இயக்குநர் சரவணன் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என்று 93 பேர் அடங்கிய 40 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இணையம் மூலம் 9699 காளைகள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு போட்டியிலும் சுமார் 1000 காளைகள் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்படுகின்றன. குறிப்பாக போட்டிகளில் நாட்டு இன காளைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறப்புப் பரிசாகச் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு கார் வழங்கப்படுகிறது. சிறந்த காளைகளுக்குப் பசுமாடுகள் மற்றும் இரண்டு சக்கர வாகனம் வழங்கப்படுகின்றன. மேலும் பல்வேறு தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக அவனியாபுரத்தில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து, சுமார் 1,500 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












