You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
8 மணி நேர வேலை அமலுக்கு வந்தது எப்போது? இந்தியா உள்பட உலகம் முழுவதும் சாத்தியமானது எப்படி?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தினமும் எட்டு மணி நேரம் உழைப்பு என்ற உரிமை தொழிலாளர்களுக்கு எளிதாகக் கிடைத்ததில்லை. பல நாடுகளில் பல ஆண்டுகள் நடந்த போராட்டத்தின் விளைவாகவே இந்த உரிமை கிடைத்தது. அதன் சுருக்கமான வரலாறு.
தொழிலாளர்களுக்கு தினமும் எட்டு மணி நேரம் வேலை என்பது ஒரே நேரத்தில், உலகம் முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. அந்தந்த நாடுகளின் சூழல், அங்கு இருந்த அழுத்தங்கள், தொழிற்சூழல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இவை அமலுக்கு வந்தன.
உலகில் முதன் முதலில் எட்டு மணி நேர வேலையை அறிமுகப்படுத்திய தேசம் ஸ்பெயின். இரண்டாம் ஃபிலிப் ஸ்பெயினின் மன்னராக இருந்த காலத்தில், 1594ல் அரச சாஸனம் ஒன்றின் மூலம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். தொழிலாளர்கள் காலை நான்கு மணி நேரம் மாலை நான்கு மணி நேரம் பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இது உலகம் தழுவிய போக்காக மாறவில்லை.
உலகின் பல பகுதிகளிலும் 14 மணி நேர வேலை என்பது சர்வசாதாரணமாக இருந்தது. பிரிட்டனில் தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு வேலை நேரம் மீதான அழுத்தம் இன்னும் அதிகரித்தது. அந்தத் தருணத்தில் ஜவுளி தொழிற்சாலையின் முதலாளியும் சோஷலிசவாதியுமான ராபர்ட் அவன், தொழிலாளர் நலன் குறித்து பேச ஆரம்பித்தார். தொழிற்சாலைகளில் சூழலை மேம்படுத்துவது, குழந்தைகள் வளர்ப்பைக் கூட்டாகச் செய்வது போன்றவற்றில் அவர் தொடர்ந்து குரல்கொடுத்துவந்தார்.
1810ல் முதல் முறையாக ஒரு நாளில் எட்டு மணி நேர வேலை என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார் ராபர்ட் அவன். அதற்குப் பிறகு, 1817ல் "8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணி நேரம் ஓய்வு" என்ற புகழ்பெற்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார்.
தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்தும் விவகாரம் தொடர்ந்து பொது விவாதமாக இருந்த நிலையில், 1847ல் பிரிட்டனில் 10 மணி நேர வேலை அமல்படுத்தப்பட்டது. 1848ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பிறகு ஃப்ரான்சில் 12 மணி நேர வேலை அமலுக்கு வந்தது.
1850களில் நியூசிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் தொழிலாளர் இயக்கங்கள் எட்டு மணி நேரம் என்பதை வலியுறுத்த ஆரம்பித்தன. சில இடங்களில் அது கிடைக்கவும் செய்தது. 1866ல் ஜெனீவாவில் கூடிய சர்வதேச தொழிலாளர் அமைப்பு, எட்டு மணி நேர வேலையை கோரிக்கையாக வைத்தது.
இதற்கிடையில் 1889 ஜூலை 14ஆம் தேதி பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது. 18 நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, அதாவது 1890ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை ஒட்டியே மே ஒன்றாம் தேதி மே தினம் உலகமெங்கும் படிப்படியாக பிரபலமாக ஆரம்பித்தது.
ஒரு அரச சாஸனத்தின் மூலம் எட்டு மணி நேர வேலை என்ற கருத்தாக்கம் இருந்தாலும், 1919ல் இதற்கென ஒரு சட்டத்தை இயற்றியது ஸ்பெயின். எந்த வேலை பார்ப்பவராக இருந்தாலும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேர பணி என்பது நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
அந்தத் தருணத்தில்தான் சர்வதேச தொழிலாளர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் விவாதிக்கப்பட்ட முதல் விஷயமே, எட்டு மணி நேர வேலை குறித்துத்தான். 1919 நவம்பர் 28ஆம் தேதி "ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அல்லது வாரத்திற்கு 48 மணி நேரம்" என்பதை தீர்மானமாக நிறைவேற்றியது சர்வதேச தொழிலாளர் அமைப்பு. ஒவ்வொரு நாடுகளாக இந்தத் தீர்மானத்திற்கு அங்கீகாரம் அளித்தன.
பிரிட்டிஷ் இந்திய அரசங்கம் 1921லேயே இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது என்றாலும், இது உடனடியாக அமலுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் இந்தியாவில் சாதாரணமாக வேலை நேரம் என்பது 12 முதல் 14 மணி நேரமாக இருந்தது. பிரிட்டிஷ் இந்திய அரசில் தொழிலாளர் துறை 1937ல் உருவாக்கப்பட்டது.
1942ல் பி.ஆர். அம்பேத்கர் இந்திய வைசிராயின் எக்ஸிக்யூட்டிவ் கவுன்சிலில் தொழிலாளர் துறைக்குப் பொறுப்பேற்றார். 1942 நவம்பர் 27ஆம் தேதி இந்திய தொழிலாளர் மாநாட்டின் ஏழாவது அமர்வு தில்லியில் கூடியபோது, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் என்பதை அவர் அங்கே முன்மொழிந்தார்.
தொழிலாளர் நலனைப் பொருத்தவரை, இது மட்டுமல்லாமல் பெண் தொழிலாளர்களுக்கான மேலும் பல சீர்திருத்தங்களையும் சலுகைகளையும் பி.ஆர். அம்பேத்கரே முன்வைத்தார். அம்பேத்கர் 1942லேயே எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தினாலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1948ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட The Industries Act மூலமாகவே இது சட்டமாக்கப்பட்டது.
1890ஆம் ஆண்டு முதலே மே தினம் மெல்ல மெல்ல உலகமெங்கும் பரவலானாலும், இந்தியாவில் முதல் முறையாக சென்னை மெரீனா கடற்கரையில்தான் மே தினம் கொண்டாடப்பட்டது. ம. சிங்காரவேலரால் துவக்கப்பட்ட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி மே தினத்தை முதன் முதலில் கொண்டியது. இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, 8 மணி நேர வேலை என்பது நனவானது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்