You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புழல் சிறையில் வெளிநாட்டுப் பெண் கைதிகளால் சிறைக் காவலர்களுக்கு அச்சுறுத்தலா? உண்மை என்ன?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை புழல் பெண்கள் சிறையில் இரண்டாம் நிலைக் காவலரை கொடூரமாகத் தாக்கிய புகாரில், நைஜீரியாவை சேர்ந்த பெண் கைதி மீது மூன்று பிரிவுகளில் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
"என்னை அடிப்பதைப் பார்த்து இரண்டு கைதிகள் மயக்கம் போட்டு விழுந்துவிட்டனர். வெளிநாட்டுக் கைதிகளால் சிறையில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. நாங்கள்தான் சிறைவாசி போல வாழ்கிறோம்" எனக் கூறுகிறார், புழல் பெண்கள் சிறையின் இரண்டாம் நிலைக் காவலர் சரஸ்வதி.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சிறைத் துறை நிர்வாகம் மறுத்துள்ளது.
சென்னையை அடுத்துள்ள புழலில் மத்திய சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்கள் தனிச் சிறையில் சுமார் 260க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் கைதிகள் உள்ளனர்.
பெண்கள் சிறையில் என்ன நடந்தது?
ஜூன் 12 அன்று காலை சுமார் 10.40 மணியளவில் பெண்கள் சிறையில் இரண்டாம் நிலைக் காவலர் சரஸ்வதி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
"காலையில் சிறை திறப்புக்குப் பிறகு நைஜீரியாவை சேர்ந்த மோனிகா என்ற கைதி பலமுறை வெளியில் சென்றார். 'இவ்வாறு தன்னிச்சையாகச் செல்லக் கூடாது' என சரஸ்வதி கூறியுள்ளார். அதைக் கைதி மோனிகா ஏற்கவில்லை" என புழல் காவல் நிலையத்தில் உதவி சிறை அலுவலர் நீ.தாரணி அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, நைஜீரியாவை சேர்ந்த மற்றொரு சிறைவாசி, 'மோனிகாவிடம் பேச வேண்டும்' என சரஸ்வதியிடம் கூறியதாகவும், இதைக் கவனித்த மோனிகா, அந்தக் கைதியை சந்திக்கச் செல்ல உள்ளதாகக் கூறியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இது எனக்கு இன்னொரு வழக்கு'
காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின்படி, 'கண்காணிப்பாளர் வரும் நேரம் என்பதால் அனுமதிக்க முடியாது' என சரஸ்வதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதை ஏற்க மறுத்து பெண் காவலர் மீது மோனிகா தாக்குதலை நடத்தியுள்ளார்.
மேலும், "எதிர்பாராத வகையில் கேட்டின் மீது சரஸ்வதியின் தலையை மோத வைத்து, 'உன்னைக் கொன்றுவிடுவேன். இது எனக்கு இன்னொரு வழக்காக இருக்கும். அதை எப்படி எதிர்கொள்வது என எனக்குத் தெரியும்' எனக் கூறியபடி கொலை முயற்சியில் ஈடுபட்டார்" எனக் காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் கதவைத் திறந்து மோனிகா வெளியில் சென்றுவிட்டதாக புகாரில் கூறியுள்ள நீ.தாரணி, "இந்தச் சம்பவத்தால் சரஸ்வதிக்கு தலையிலும் முகத்திலும் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. இடது பக்க நெற்றி, இடது கண் ஆகியவற்றின்கீழ் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறை மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சரஸ்வதி அனுப்பி வைக்கப்பட்டார்.
மூன்று பிரிவுகளில் வழக்கு
இந்த விவகாரத்தில் கைதி மோனிகா மீது பி.என்.எஸ் 296(b), 121(1), 109(1) ஆகிய மூன்று பிரிவுகளில் புழல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது இடங்களில் ஆபாசமான வார்த்தைகளைப் பேசுதல், அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்து கொடும் காயத்தை ஏற்படுத்துதல், கொலை முயற்சி ஆகியவற்றை இந்தப் பிரிவுகள் குறிக்கின்றன.
கைதி தாக்குதலால் படுகாயமடைந்த சரஸ்வதிக்கு, அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கண்காணிப்பாளர் வரும் நேரம் என்பதால் வெளியில் விடமுடியாது' எனக் கூறியதால் கைதி மோனிகா தன்னைத் தாக்கியதாகக் கூறினார்.
"என்னைக் கைதி ஒருவர் தாக்குவதாக வாக்கி டாக்கியில் பலமுறை கூறியும் அதை ரிசீவ் செய்யக்கூட யாரும் இல்லை. என்னை அடித்துவிட்டதாக வெளியில் சென்று மோனிகா கூறியதால்தான் மற்றவர்கள் உள்ளே வந்தனர்" எனக் கூறியுள்ளார், சரஸ்வதி.
'நாங்கள்தான் சிறைவாசி' - சிறைக் காவலர் சரஸ்வதி
"வெளிநாட்டுக் கைதிகளால் சிறையில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை" எனக் கூறும் சரஸ்வதி, "நாங்கள்தான் சிறைவாசி போல வாழ்கிறோம். அவர்கள் சுகவாசிகளாக உள்ளனர். இதை யாரிடம் சொன்னால் எங்களுக்கு விடிவுகாலம் வரும்?" எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, சிறைத்துறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விமர்சித்தார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசும்போது, "வெளிநாட்டுக் கைதிகள் செல்போன் வைத்திருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை. வெளிநாட்டுக் கைதிகளுக்கு வெளிநாட்டு உணவு வழங்கப்படுகிறது. ஆனால், மற்ற கைதிகளுக்கு அவர்களின் உறவினர்கள் கொண்டு வரும் பழங்கள், உணவுப் பொருள்களைக் கூட பிடுங்கிக் கொள்கின்றனர்" என்றார்.
இவர்களின் சுபாவத்தைப் பார்த்து மற்ற கைதிகள் அச்சப்படுவதாகக் கூறும் சரஸ்வதி, "அவர்களின் உடைமைகளைக்கூட யாரும் சோதனை செய்வதில்லை. சிறைக்குள் துணிகளைக் கட்டி கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளனர்" எனவும் தெரிவித்தார்.
"வெளிநாட்டுக் கைதிகளைத் தனியாகப் பராமரிக்க வேண்டும். இவர்களால் மற்றவர்களும் எங்கள் பேச்சைக் கேட்பதில்லை. காவலர்களைத் தகாத வார்த்தைகளில் ஆங்கிலத்தில் திட்டுகின்றனர்" எனவும் சரஸ்வதி குறிப்பிட்டார்.
வெளிநாட்டுக் கைதிகளை சிறைத்துறை உயர் அதிகாரிகள் ஊக்குவிப்பதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிறையில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக, சரஸ்வதியிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் தொடர்புகொண்டபோது, அவரிடம் இருந்து உரிய பதிலைப் பெற முடியவில்லை.
'கட்டுப்படுத்த முடியாத சூழல்'
"வெளிநாட்டுக் கைதிகளுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மாநிலம் முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைகளில் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத சூழலே நிலவுகிறது" என்கிறார், சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநரும் வழக்கறிஞருமான பா.புகழேந்தி.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் விற்பனை, கள்ள நோட்டுகள், ஆன்லைன் மோசடி எனப் பல்வேறு குற்றங்களில் வெளிநாட்டினர் கைது செய்யப்படுவதாக பா.புகழேந்தி குறிப்பிட்டார்.
"வெளிநாட்டுக் கைதிகளுக்கு சாதகமாக சிறைத் துறை நிர்வாகம் நடந்து கொள்கிறது. அவர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்குவதால் கீழ்நிலை காவலர்களை மதிக்காமல் அத்துமீறி நடந்து கொள்கின்றனர்" என்கிறார், பா.புகழேந்தி.
இதற்குத் தீர்வாக, வெளிநாட்டினரின் வழக்குகளை விரைந்து நடத்தி அவர்களை நாடு கடத்தும் வேலைகளில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
"வார்டன்கள் தாக்கப்படும் விவகாரத்தில் சிறைத் துறை தலைமை அலட்சியமாகக் கையாள்வதாக சிறைக் காவலர்கள் நினைக்கின்றனர். வெளிநாட்டுக் கைதிகளுக்குப் போதிய சலுகை கிடைப்பதால் சிறைக் காவலர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை" என்கிறார் புகழேந்தி.
'புகாரில் உண்மை இல்லை' - சிறைத்துறை விளக்கம்
புழல் பெண்கள் தனிச் சிறையின் கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரனிடம் பிபிசி தமிழ் பேசியது.
"சில கைதிகள் சில நேரங்களில் கொடூரமாக நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு சிறைத்துறை மூலம் மனநல ஆலோசனை வழங்கி வருகிறோம். அவர்களை சிறைக் காவலர்களும் சற்று கவனமாகக் கையாள வேண்டும்" எனக் கூறுகிறார்.
"சிறையில் யாருக்கும் கூடுதல் சலுகைகளை வழங்க முடியாது" எனக் கூறும் அவர், "ஒவ்வொருவருக்கும் என்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பது வெளிப்படையாகவே தெரியும். அதனால் யாருக்கும் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுவதற்கு வாய்ப்பில்லை" என்கிறார்.
"வாக்கி டாக்கியில் அழைத்தாலும் உதவிக்கு யாரும் வருவதில்லை" எனக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, "சரஸ்வதி அழைத்ததால்தான் வாயிலில் இருந்த காவலர்கள் அங்கே சென்றுள்ளனர்" எனக் கூறினார்.
வெளிநாட்டுக் கைதிகளுக்கு ஆதரவாக சிறைத்துறை நிர்வாகம் நடந்து கொள்வதாகக் கூறப்படும் புகாரில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் நிகிலா நாகேந்திரன் மறுப்பு தெரிவித்தார்.
தாக்குதலுக்கு ஆளான சரஸ்வதி ஏதோ மன அழுத்தத்தில் விமர்சித்துப் பேசிவிட்டதாகக் கூறும் அவர், "அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. மோனிகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு