ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வர என்ன காரணம்? (காணொளி)
ஏ ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக முடிவு செய்துள்ளனர். திருமண வாழ்வில் 29 ஆண்டுகள் இணைந்து பயணித்த அவர்கள் இந்த முடிவை கூட்டாக அறிவித்துள்ளனர். உணர்வு ரீதியான சில அழுத்தங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்களின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானும் தனது எக்ஸ் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
"நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி முகமை தகவலின்படி, விவாகரத்து முடிவை சாய்ரா பானு முதலில் வெளியிட, பின்னர் இருவர் தரப்பிலும் கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சாய்ரா பானு - ஏ.ஆர்.ரஹ்மான் திருமணம் 1995-ஆம் ஆண்டு நடந்தது. அவர்களுக்கு கதீஜா, ரஹிமா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
ஏ.ஆர். அமீன், தனது இன்ஸ்டா வலைதள பக்கத்தில் "இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
திலீப்குமார் என்ற இயற்பெயர் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் தனது 23-வது வயதில் 1989-ஆம் அண்டு இஸ்லாமைத் தழுவினார். தன்னைப் பொருத்தவரை இஸ்லாம் என்பது எளிய வாழ்க்கை மற்றும் மனித நேயம் என்று அவர் கூறினார்.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அளித்த ஒரு நேர்காணலில், "இஸ்லாம் என்பது ஒரு பெருங்கடல். அதில் 70-க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. அன்பை போதிக்கும் சூஃபி தத்துவத்தை நான் பின்பற்றுகிறேன்." என்று தெரிவித்தார்.
57 வயதான ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர், 2 கிராமி மற்றும் ஒரு கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் உள்பட தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



