இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் கடன் கிடைத்தது ஏன்?
கடந்த வாரத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் அளவிலான கடன் கொடுக்க ஒப்புதல் அளித்தது.
கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வழங்கப்படும் இந்த கடனை பாகிஸ்தானுக்கு வழங்க இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தது.
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான ராணுவ மோதல்களால் பதற்றம் நிலவிய சூழலில் இந்தக் கடன் அறிவிக்கப்பட்டது.
தொடர்ச்சியான பொருளாதார மீட்சிக்கு வழிவகுத்த வலுவான திட்டங்களை அமல்படுத்துவதை பாகிஸ்தான் நிரூபித்ததாக கூறிய சர்வதேச நாணய நிதியம், இந்தியாவின் எதிர்ப்புகளையும் மீறி, ஏழு பில்லியன் கடனின் இரண்டாவது தவணையை அங்கீகரித்தது.
"காலநிலை பாதிப்புகள் மற்றும் இயற்கை பேரழிவுகள்" ஏற்படுத்திய தாக்கத்தினால் சீரழிந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பாகிஸ்தான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்த நிதி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறிய சர்வதேச நாணய நிதியம், எதிர்காலத்தில் சுமார் 1.4 பில்லியன் டாலர் நிதியை வழங்கவிருப்பதாகவும் கூறியது.
சர்வதேச நாணய நிதியத்தின் இந்த முடிவு குறித்து கவலை தெரிவித்த இந்தியா, இரண்டு காரணங்களை மேற்கோள் காட்டி தனது எதிர்ப்பை கடுமையான வார்த்தைகளில் வெளிப்படுத்தியது.
சீர்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் பாகிஸ்தானின் "மோசமான கடந்த கால பதிவை" கருத்தில் கொண்டு, இத்தகைய கடனுதவிகளின் "செயல்திறன்" குறித்து இந்தியா கேள்வி எழுப்பியது.
சர்வதேச நாணய நிதியம் வழங்கும் பணம் "அரசால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு" பயன்படுத்தப்படுவதாக இந்தியா கூறுகிறது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.
மேலும், சர்வதேச நாணய நிதியம், தன்னையும் தனது நன்கொடையாளர்களையும் "நற்பெயர் சார்ந்த அபாயங்களுக்கு" ஆளாக்கி வருவதாகவும், "உலகளாவிய மதிப்புகளை தீவிரமாக கருத்தில் கொள்ளவில்லை" எனவும் இந்தியா தெரிவித்தது.
இந்தியாவின் நிலைப்பாடு குறித்த பிபிசியின் கேள்விகளுக்கு சர்வதேச நாணய நிதியம் பதிலளிக்கவில்லை.
முழு விவரம் காணொளியில்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



