அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பா, ஆஸ்திரேலியாவிலும் இந்தியர்களுக்கு எதிர்ப்பு அதிகரிப்பது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எட்வர்ட் ஜோனாதன் டேவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டன் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் ஈ.டி டேவி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
    • எழுதியவர், ஜுபைர் அகமது
    • பதவி, பிபிசி செய்தியாளர்

செப்டம்பர் 23-ஆம் நாளன்று இரு தலைவர்கள் வெவ்வேறு தளங்களில் இருந்து ஆற்றிய உரைகள், உலகளாவிய விவாதப் பொருளாக மாறின.

பிரிட்டன் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவரான எட்வர்ட் ஜோனாதன் டேவி, தீவிர வலதுசாரி தலைவர்களை "இருண்ட சக்தி" என கடுமையாக விமர்சித்தார்.

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தொடர் பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் நிகேல் ஃபரேஜ், டாமி ராபின்சன் மற்றும் கோடீஸ்வரர் ஈலோன் மஸ்க் போன்றவர்களையே அவர் குறிவைத்துப் பேசினார்.

மறுபுறம், நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எட்வர்ட் ஜோனாதன் டேவி வழங்கியதற்கு மாறான செய்தியை வழங்கினார். திறந்த எல்லைகளைக் கொண்டுள்ளதால், ஐரோப்பாவே நெருக்கடியில் ஆழ்ந்துவிட்டதாகவும், "இந்த நாடுகள் அழிவை நோக்கிச் செல்கின்றன" என்றும் எச்சரித்தார்.

இரு தலைவர்களின் அறிக்கைகளும், தாராளமயம் மற்றும் தேசியவாதம் குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை தீவிரமாக முன்னெடுத்துள்ளன.

பிரிட்டனை "டிரம்பின் அமெரிக்காவாக" மாற்றும் முயற்சியில் ஃபராஜ், மஸ்க் மற்றும் டிரம்ப் ஆகியோர் ஈடுபட்டிருப்பதாக எட்வர்ட் ஜோனாதன் டேவி கூறியுள்ளார். இவர்களைப் போன்றத் தலைவர்கள், சமூக ஊடகங்களை வெறுப்பின் மையமாக மாற்றியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விமர்சனங்களுக்கு இடையில், லண்டன் மேயர் சாதிக் கான் மீது நேரடித் தாக்குதலைத் தொடங்கிய டிரம்ப், இஸ்லாமியரான சாதிக் கான் ஷரியா சட்டத்தை திணிக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டுக்களை உடனடியாக நிராகரித்த மேயர் சாதிக் கானின் அலுவலகம் "பக்கசார்புடைய, வெறுக்கத்தக்க பேச்சு" என்று அழைத்தது.

இப்படிப்பட்ட கருத்துக்களும் அதற்கான எதிர்வினைகளும், உலகின் ஜனநாயக நாடுகளுக்கு இடையே இடம்பெயர்வு தொடர்பாக நிலவும் ஆழமான பிளவுகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சம்போட்டு காட்டுவதாக இருந்தன. இந்தப் பிரிவினையை ஐரோப்பாவின் வீதிகளில் மிகவும் தெளிவாக பார்க்கமுடிகிறது.

லண்டனில் போராட்டம் நடத்திய மக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லண்டனில், நேப்பியர் படைமுகாமுக்கு வெளியே குடியேற்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு, குடியேறிகளுக்கு எதிரான போராட்டங்கள் லண்டனில் வெடித்தன. அப்போது, கும்பல் ஒன்றிடமிருந்து தப்பி ஓடும் பெண் ஒருவரின் வீடியோ வைரலானது.

தப்பியோடும் பெண்ணின் பின்னால், முழக்கங்களை எழுப்பியபடியும், கொடிகளை அசைத்தபடியும் மக்கள் செல்வதை காணமுடிந்தது. இந்த வீடியோ, மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.

இது வெறும் கலவரம் மட்டுமல்ல, புலம்பெயர்ந்தோருக்கான முக்கியமான செய்தி என்பதை அந்த வீடியோ தெளிவுபடுத்தியது. மேலும், புலம்பெயர்ந்தோர் ஒருபோதும் பிற நாடுகளில் முழுமையாக ஒன்றிவிட முடியாது என்பதையும் குறிப்பாக உணர்த்தியது.

பிரெக்ஸிட் சமயத்தில் நடைபெற்ற பேரணிகளுக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய கூட்டம் என கருதப்படும் இந்தப் பேரணியில் சுமார் 1,50,000 பேர் கூடியிருந்தனர்.

இதுவொரு தனித்த சம்பவம் அல்ல. சில நாட்களுக்குப் பிறகு, ஹேக்கில் போலீஸ் வாகனத்தை கலவரக்காரர்கள் எரித்தனர், இதனால் போலீசார் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஐரோப்பிய நாடுகள், தற்போது தங்கள் எல்லைப் பகுதிகளில் மீண்டும் சோதனைகளை அறிமுகப்படுத்தியுள்ளன என்பதும், அகதிகள் தொடர்பாக கடுமையான சட்டங்களை இயற்றுகின்றன.

இதனுடன், கடல் வழியாக வருபவர்களை கடலிலேயே தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி நிலைக்குப் பிறகு இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அதன் தாக்கம் மிகப் பெரியது. அது, புள்ளிவிவரங்களை விட புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சமாக எதிரொலிக்கிறது.

வலதுசாரிகளின் அரசியலுக்கு, புலம்பெயர்ந்த மக்கள், தற்போது சுலபமான இலக்காக மாறிவிட்டனர்.

உலகளவில் 32 மில்லியனுக்கும் அதிகமான இந்திய புலம்பெயர்ந்தோர், இதுபோன்ற சம்பவங்களால் கலக்கமடைந்துள்ளனர். பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்களும் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

குடியேறிகளுக்கு எதிரான போராட்டங்கள், இந்தியர்கள், புலம்பெயர்ந்தோர், விசா கட்டண உயர்வு, டொனால்ட் டிரம்ப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

14 வருடங்களாக லண்டனில் வசித்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்ரீமோயி சக்ரவர்த்தி, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளியில், "இனவெறி கொண்ட மக்களுக்கு என்னுடைய செய்தி இதுதான். இங்கு குடியேறிய நான் கடினமாக உழைத்து அதிக வரிகளை செலுத்தியுள்ளேன். ஆனால் இப்போது பரவி வரும் வெறுப்புணர்வு மனவேதனை அளிக்கிறது, அதிர்ச்சியாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் சுகாதார சேவையான NHS-இல் மருத்துவர்களாகவும், செவிலியர்களாகவும் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர், இந்தியர்களில் பெருமளவினர் ஜெர்மனியில் பொறியாளர்களாக பணியாற்றினால், ஆம்ஸ்டர்டாமில் உணவகங்களை நடத்துகின்றனர், மிலனில் கடைகளை வைத்துள்ளனர்.

எந்த நாட்டில் வசித்தாலும், புலம்பெயர்ந்தோர் வரி செலுத்துகிறார்கள், குடும்பங்களை பராமரிக்கின்றனர், அங்குள்ளவர்களில் ஒருவராக மாறுகின்றனர். தேர்தல்களில் பங்கேற்கிறார்கள், இருப்பினும் பெரும்பாலும் அவர்கள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் "நீங்கள் எங்களில் ஒருவரல்ல" என்ற கேலி பேச்சை எதிர்கொள்கிறார்கள்.

லண்டனைச் சேர்ந்த 47 வயதான பிரிட்டிஷ் குடிமகனான நோரா ஹட்சிசன், சுகாதார நிர்வாகியாக பணிபுரிந்தவர், ஆனால் இப்போது தற்காலிக மற்றும் சாதாரண வேலைகளையே பார்த்து வருகிறார். அவருக்கு இந்தியா பிடிக்கும், இருப்பினும் பிரிட்டனில் அதிகரித்து வரும் இந்திய மக்கள் தொகை குறித்து அவருக்கு கவலைகள் இருக்கிறது.

"குறைந்த திறன் கொண்ட பல இந்தியர்கள் பிரிட்டனுக்கு வருவதாக" அவர் குற்றம் சாட்டுகிறார்.

"உங்களைப் போன்றவர்களால் எங்களுக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை. ஆனால் NHS-இல் அல்ட்ராசவுண்ட் அறிக்கைகள் அல்லது டிஜிட்டல் எக்ஸ்ரேக்களை கூட சரியாகப் படிக்கத் தெரியாத பல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிபுரிகின்றனர். இந்திய மருத்துவமனைகள் கூட அத்தகையவர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை" என்று ஊடகங்களிடம் பேசும்போது அவர் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த மக்கள்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் எத்தியோப்பிய அகதி ஹதுஷ் கெபட்டுக்கு பிரிட்டன் நீதிமன்றம் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்துள்ளது

குற்றம் மற்றும் பிம்பம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று நோரா கூறுகிறார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளில் பலர் இந்தியர்கள் எனக் கூறும் அவர், பிற நாடுகளிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள் என்கிறார்.

பிரிட்டனின் Essex-இல் புலம்பெயர்ந்தோர் தொடர்பான பதற்றங்கள் அதிகளவில் உள்ளன. ஒரு காலத்தில் சாதாரண தங்குமிடமாக இருந்த பெல் ஹோட்டல், பல மாதங்களாக போராட்டங்களின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது.

"அவர்களைத் திருப்பி அனுப்புங்கள்" என்ற முழக்கங்களை இங்குள்ளவர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

பிரிட்டனுக்கு வந்து சேர்ந்த எட்டு நாட்களில் எத்தியோப்பிய அகதி ஹதுஷ் கெபாடு என்பவர் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டபோது, புலம்பெயர்ந்தோர் மீதான மக்களின் சீற்றம் மேலும் அதிகரித்தது.

நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது. தான் நிரபராதி என்றும் ஒரு நல்ல கிறிஸ்தவர் என்றும் ஹதுஷ் கெபாடு கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குடியேற்ற எதிர்ப்பாளர்கள் இந்த சம்பவத்தை தங்கள் வாதத்தின் அடிப்படையாகப் பயன்படுத்துகின்றனர்.

பிரிட்டனில் தற்போது 32,000 அகதிகள் ஹோட்டல்களில் வசிக்கின்றனர், இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 51,000 ஆக இருந்தது. எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், உண்மையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.

ஆன்லைனில் அழகான அறைகள் மற்றும் குளியலறைகளைக் காட்டும் புகைப்படங்களைக் கொண்ட இந்த ஹோட்டல்கள் இப்போது அகதிகளுக்கான தங்குமிடங்களாக மாறிவிட்டன.

இங்கு குழப்பமான சூழ்நிலையே நிலவுகிறது என்பதும், பல அகதிகள் சட்டவிரோத தொழிலாளர்களுடன் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களில் பலர் கிக் தொழிலாளர்களாக (Gig Employees), டெலிவரி பாய்களாக வேலை செய்கிறார்கள்.

தற்போது ஒரு ஹோட்டலில் தங்கியுள்ள காதிர், எந்த சட்டங்களையும் மீறாமல் வேலை செய்ய விரும்புவதாகக் கூறுகிறார்.

இதற்கு நேர்மாறாக, வாரத்திற்கு 9.95 பவுண்டுகள் மட்டுமே சம்பாதிக்கும் சிலர், நாளொன்றுக்கு 20 பவுண்டுகள் ஊதியத்தில்கு சட்டத்துக்கு புறம்பாக பல ஷிப்டுகளில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மனித கடத்தல்காரர்களிடமிருந்து கடன் வாங்கி, இங்கு வந்து வேலை செய்வதால் இது நிகழ்கிறது.

இதுபோன்ற போராட்டக் கதைகள் பெரும்பாலும் செய்திகளில் இடம்பெறுவதில்லை. கெபட்டு போன்ற சம்பவங்கள் மட்டுமே முக்கியச் செய்திகளில் இடம்பிடிக்கின்றன, இது முழு அமைப்பும் தோல்வியடைந்துவிட்டது என்ற கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

(பிபிசியின் புலனாய்வு அறிக்கையில் இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.)

குடியேறிகளுக்கு எதிரான போராட்டங்கள், இந்தியர்கள், புலம்பெயர்ந்தோர், விசா கட்டண உயர்வு, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Chetan Singh

எதிர்ப்புக் குரல்கள்

இதுபோன்ற சம்பவங்களின் தாக்கம் பிரிட்டனுக்கு வெளியேயும் உணரப்படுகிறது.

"ஒரு புலம்பெயர்ந்தவராக, எனது இருப்பை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்பது மிகுந்த சோர்வளிக்கிறது," என்று ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வம்சாவளி எம்.பி. மிஷேல் ஆனந்த ராஜா கூறுகிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை இரண்டு முறை பிரதமராகத் தேர்ந்தெடுத்த நாடான அயர்லாந்தில், சமீபத்திய தாக்குதல்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் குறிவைக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவில், ஒரு காலத்தில் இந்திய குடியேறிகளை பாராட்டிய பவுலின் ஹான்சன், தற்போது வெளிநாட்டு குடியேறிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் எனக் கோரும் குழுக்களுடன் நிற்கிறார்.

"பிரச்னை புலம்பெயர்ந்தோர் அல்லது தொழிலாளர்கள் இல்லை" என்று டென்மார்க்கைச் சேர்ந்த எழுத்தாளர் தபிஷ் கைர் கூறுகிறார்.

"பில்லியன் கணக்கான டாலர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதே உண்மையான பிரச்னை ஆகும், இது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களைப் பாதிக்கிறது. இந்த பிரச்னையை 1980களிலேயே கவனித்திருக்க வேண்டும், ஆனால் அந்தப் பிரச்னையை கவனிப்பதற்குப் பதிலாக ஊக்குவித்தார்கள்."

சூர்ய குமார் யாதவ், ரிஷி சுனக் மற்றும் ஜோஸ் பட்லர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் (நடுவில்) இந்திய கிரிக்கெட் வீரர் சூர்ய குமார் யாதவ் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லருடன்

இந்தியர்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

இந்திய குடியேறிகள் கல்வி மற்றும் தொழிலில் முன்னேற்றமடைந்துள்ளனர், வேறு எந்த சமூகத்துடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் மிக உயர்ந்த சராசரி வருமானத்துடன் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டனின் பிரதமரானார் என்றால், கனடாவில் ஏராளமான இந்திய மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளனர்.

அனைத்தும் இயல்பாக இருக்கும் நல்ல காலங்களில் பரவலாகப் பாராட்டப்படும் அவர்கள், கடினமான காலங்களில், பொறாமையும் வெறுப்பையும் எதிர்கொள்கின்றனர், ஆனால் இது ஒன்றும் புதிதல்ல.

இந்தியர்களின் வருகை பெரும்பாலும் பதற்றத்தை அதிகரிக்கிறது.

இந்திய பண்டிகைக் காலங்களில் டிராஃபல்கர் சதுக்கம் மற்றும் டைம்ஸ் சதுக்கம் ஆகியவை அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்திய உணவு ஒவ்வொரு முக்கிய தெருவிலும் சுலபமாகக் கிடைக்கிறது. பாலிவுட் நடிகர்களும், இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களும் உலகளவில் புகழ்பெற்றவர்களாக இருக்கின்றனர்.

நல்ல காலங்களில், வெற்றியின் அடையாளமாகக் கருதப்படும் இவை அனைத்துமே, கடினமான காலங்களில் சர்ச்சைக்கு காரணமாகின்றன.

"நல்லிணக்கத்தின் சின்னங்களாக இருப்பவையே, பதற்றமான காலத்தில் பிரிவிற்கான காரணங்களாக, நினைவூட்டல்களாக மாறுகின்றன" என நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

டிரம்பின் புதிய அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Michael M. Santiago/Getty Images

படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஐரோப்பாவின் தெருக்களில் போராட்டங்கள் மூலம் குடியேறிகள் மீதான வெறுப்பு தெரியும் என்றால், அமெரிக்காவில் அது அதன் தலைவர்களின் கொள்கைகளிலும் உரைகளிலும் எதிரொலிக்கிறது.

டிரம்பின் வருகை "அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறியின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்தது" என லோவி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு இந்திய நிபுணர் கூறினார்.

இந்திய வம்சாவளி அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர், துணை அதிபர் வேட்பாளரின் மனைவி இந்திய வம்சாவளியினராக இருந்ததால் ஆன்லைனில் இனவெறி தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளார் என்பது நிலைமையின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சமீபத்தில் H-1B விசா கட்டணத்தை $1,500 இலிருந்து $100,000 (சுமார் ரூ. 88 லட்சம்) ஆக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இது இந்தியாவிற்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும், ஏனெனில் அமெரிக்காவின் H-1B விசா பெறுபவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியர்களே. அமெரிக்காவின் சிறிய மற்றும் தொடக்க நிறுவனங்கள், இவ்வளவு அதிக விலை கொடுத்து இந்தியர்களை பணியமர்த்த முடியாது.

எனவே, இனிமேல் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியர்களை பணியமர்த்துவதைத் தவிர்ப்பார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன் விளைவாக, இந்திய பொறியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியாவிலேயே தங்க நேரிடும் அல்லது வேறு நாடுகளில் வேலை தேட நேரிடும்.

இருப்பினும், அமெரிக்காவிற்கு இந்திய மற்றும் சீன மாணவர்கள் தேவை என்பதே உண்மை.

அமெரிக்க மாணவர்கள் பொறியியலைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவு, அதே நேரத்தில் இந்திய மற்றும் சீன மாணவர்களே, அமெரிக்க ஆய்வகங்களில் பணிபுரிபவர்களாகவும், சிலிக்கான் பள்ளத்தாக்கை தொடர்ந்து இயங்க வைப்பவர்களாகவும் உள்ளனர். எனவே, டிரம்பின் நடவடிக்கை அமெரிக்காவையே பலவீனப்படுத்துவதாக இருக்கிறது.

இருப்பினும், போராட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அண்மையில், உள்ளூர் இளைஞர் ஒருவர் வலதுசாரி ஆதரவாளர் சார்லி கிர்க் என்பவரை கொலை செய்தார்.

இந்த சம்பவத்திற்கு முன்னர் சமூக ஊடகங்களில் பதிவிட்ட சார்லி கிர்க், "இந்தியாவிற்கு இனிமேல் அமெரிக்கா விசா வழங்கக்கூடாது. இந்தியர்கள்தான் பெரும்பாலான அமெரிக்க தொழிலாளர்களை இடம்பெயரச் செய்துள்ளனர். அவர்கள் நமக்கு போதும், இனி தேவையில்லை" என பொருள்படும் வகையில் எழுதியிருந்தார்.

கனடாவில் ஐடி நிறுவனம் ஒன்றில் மூத்த மேலாளராக பணிபுரியும் சௌரப் சர்மா, "நான் கனடாவில் இருக்கிறேன், ஆனால் என் நண்பர்களும் சக ஊழியர்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் நிலைமையைப் பற்றிய அச்சம் எப்போதும் இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றி நிச்சயமற்றவர்களாக இருக்கிறார்கள். இடம் பெயர்வது தொடர்பான பயத்துடன் எப்போதுமே வாழ்வது எளிதல்ல" என்று அவர் சொல்கிறார்.

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சான் பிரான்சிஸ்கோவில் நடந்த எமர்ஜ் காலாவில் உரையாற்றும் அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ்

பங்களிப்பும் களங்கமும்

இந்திய புலம்பெயர்ந்தோர் முற்றிலும் குறைபாடற்றவர்கள் என்று சொல்வது நியாயமற்றது. அவர்களிடையே விசா மோசடி, சுரண்டல் மற்றும் அரசியல் அத்துமீறல்களும் பரவலாக உள்ளன.

ஆனால் கோடிக்கணக்கான இந்திய புலம்பெயர்ந்தோரையும் இந்த அடிப்படையில் மதிப்பிடுவது சரியல்ல. இந்தியர்கள் தங்கள் வாழ்க்கை முறை மற்றும் வேலை மூலம் பல நாடுகளை அடிப்படையிலிருந்தே மாற்றி முன்னேற்றியுள்ளனர்.

பிரிட்டனில் ரிஷி சுனக், அமெரிக்காவில் கமலா ஹாரிஸ், நோபல் மற்றும் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர்கள், மருத்துவமனைகள், ஐடி நிறுவனங்கள் என வம்சாவளி இந்தியர்களின் பங்களிப்புகள் எல்லா இடங்களிலும் தெளிவாகத் தெரிகிறது.

டென்மார்க்கைச் சேர்ந்த எழுத்தாளர் தபிஷ் கைர், "மேற்கத்திய நாடுகளுக்கும், வளர்ந்துவரும் உலகின் பிற பகுதிகளுக்கும் இடையே ஒரு சுவர் கட்டப்பட்டு வருகிறது. இந்தியா மேற்கத்திய நாடுகளை நம்பியிருக்கக்கூடாது, பிற நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். நாம் மேற்கத்திய நாடுகளின் ஒரு பகுதியாக இல்லை, ஆனால் 'உலகின் பிற பகுதிகளின்' ஒரு பகுதியாக இருக்கிறோம், இந்தியா அங்கு முன்னிலை வகிக்க முடியும்" என்கிறார்.

ஆஸ்திரேலியா, செனட்டர் பவுலின் ஹான்சன்

பட மூலாதாரம், Pauline Hanson

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில், ஒரு காலத்தில் இந்திய குடியேறிகளைப் பாராட்டிய செனட்டர் பவுலின் ஹான்சன், இப்போது அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கோரும் குழுக்களுடன் நிற்கிறார்

கடினமாகி வரும் பாதை

இந்திய குடியேறிகளின் நிலைமை கடினமாகி வருகிறது. ஐரோப்பாவில் குடியேறிகளுக்கு எதிரான பேரணிகள் இனவெறியை வெளிப்படுத்துவதாக மாறி வருகின்றன. ஆஸ்திரேலியாவில், அரசியல்வாதிகளே குடியேறிகளுக்கு எதிராகப் பேசும் நிலைமை வந்துவிட்டது.

அமெரிக்காவில் விசா கட்டணங்கள் மிக அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தியர்களிடம் அரசியல் அதிகாரம் இருந்தபோதிலும், இந்தியாவுடனான கனடாவின் பதற்றங்கள் பாதுகாப்பின்மையை மேலும் அதிகரிக்கின்றன.

இந்தியாவில் இருப்பவர்களுக்கு, வெளிநாட்டில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக தோன்றலாம், ஆனால் உண்மை என்னவென்றால், பயமும் பாதுகாப்பின்மையும் நிறைந்த சூழலில் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது.

இங்கே சொந்தம் என்ற உணர்வு ஆழமாகத் இருந்தாலும், அது உடையக்கூடியது மற்றும் திடீரென்று மாறக்கூடியது.

 குடியேற்றக் கொள்கை, இந்திய குடியேறிகளின் வாழ்க்கை

பட மூலாதாரம், SAUL LOEB/AFP via Getty Images

படக்குறிப்பு, உலகம் முழுவதும் மாறிவரும் குடியேற்றக் கொள்கைகளால் இந்திய குடியேறிகளின் வாழ்க்கை கடினமாகி வருகிறது

உலகளாவிய கேள்விகள்

இப்போது புலம்பெயர்ந்தோர் மட்டுமல்ல உலகமே எதிர்கொள்ளும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இடம்பெயர்வு குறித்த நேர்மையான விவாதத்தை, வெளிநாட்டினர் அதிகமான அளவில் வாழும் நாடுகள் நடத்துமா? என்பதுதான்.

அவை, புலம்பெயர்ந்தோரின் முழு சமூகத்தையும் குறை கூறுவதைத் தவிர்க்குமா? அவர்கள் தங்களுடைய சொந்த மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளை நிர்வகிப்பவர்களையும், அவற்றில் பணிபுரிவர்களையும் பாதுகாப்பார்களா?

சர்வதேச அளவில் இந்திய புலம்பெயர்ந்தோர் உலகின் பல இடங்களிலும் அதிக அளவில் வசிக்கும் நிலையில் இந்தியா, அவர்களுக்காக குரல் கொடுக்க முடியுமா? புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வெறுப்பினால் அவர்களுக்கு எதிராக செய்யப்படும் குற்றங்களின்போது அவர்களுக்கு ஆதரவை வழங்குவது மட்டும் போதாது. உலகளாவிய விவாதங்களில் வெளிப்படையாகவும் தைரியமாகவும் ஈடுபட வேண்டும்.

புலம்பெயர் சமூகம் தங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்று சில இந்தியர்கள் நம்புகிறார்கள், ஏனெனில் வெற்றி அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் கொடுக்கிறது, அவையே கேள்விகளையும் எழுப்புகிறது.

மேலும், இந்திய அரசாங்கம் அதிகாரத்திற்காகவும் செல்வாக்கிற்காகவும் புலம்பெயர்ந்தோரை ஊக்குவிக்கிறது என்று இந்த இந்தியர்கள் கூறுகிறார்கள். ஆனால் புலம்பெயர்ந்தோரை நேரடியாகப் பாதிக்கும் கொள்கைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான எதிர்மறை மனப்பான்மைகளுக்கு எதிராகப் பேசுவதில்லை.

இந்திய குடியேறிகளின் வாழ்க்கை வெளிநாடுகளில் கடினமானதாக மாறி வருகிறது.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா, சிட்னி மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கு என நிலைமை எல்லா இடங்களிலும் மாறி வருகிறது. இனி, இது ஒரு வெற்றிக் கதை மட்டுமல்ல, உயிர்வாழ்வு மற்றும் கண்ணியத்திற்கான போராட்டமாகவும் இருக்கும்.

இந்தியாவின் முன் உள்ள மாபெரும் கேள்வி என்னவென்றால், அது தனது புலம்பெயர்ந்தோரை வெறுப்பு மனப்பான்மையிலிருந்து பாதுகாக்க குரல் எழுப்புமா? அல்லது அவர்கள் உருவாக்கிய உலகம் மென்மேலும் அவர்களுக்கு பாதுகாப்பற்றதாக மாறுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்குமா?

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு