You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இஸ்லாமிய வன்முறையும், கத்தோலிக்க வன்முறையும்" - ஒப்பிட்டு பேசிய போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ் கத்தோலிக்கத் திருச்சபையின் போப்பாக பொறுப்பேற்றது பல்வேறு புதிய நிகழ்வுகளின் தொடக்கமாக அமைந்தது.
தெற்கு அரைக்கோள பகுதிகளில் இருந்து வந்த முதல் போப், இவர்தான். சிரியாவில் பிறந்த போப் மூன்றாம் கிரிகோரி 741 ஆம் ஆண்டு இறந்ததிலிருந்து, ஐரோப்பியரல்லாத ஒருவர், போப் பதவியில் இருந்ததில்லை.
புனித பீட்டரின் அரியணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இயேசு சபை உறுப்பினரும் போப் பிரான்சிஸ்தான். வரலாற்று ரீதியாக , ரோமில் இயேசு சபையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டனர்.
அவருக்கு முன்னோடியாக இருந்த பதினாறாம் பெனடிக்ட், கடந்த சுமார் 600 ஆண்டுகால வரலாற்றில் தானாக முன்வந்து ஓய்வு பெற்ற முதல் போப் ஆவார்.
இதனை அடுத்து, புதிதாக தேர்ந்தெக்கப்பட உள்ள போப், வயதில் இளையவராக இருப்பார் என்று பல கத்தோலிக்கர்கள் கருதினர் .
ஆனால் அர்ஜென்டினாவின் கார்டினல் பெர்கோக்லியோவாக இருந்த இவர், 2013 ஆம் ஆண்டில் போப் ஆனபோது அவர் எழுபது வயதுகளில் இருந்தார்.
அவர் சமரசத்தை விரும்பும் ஒரு நபராக தன்னை வெளிப்படுத்தினார்.
பாலியல் விஷயங்களில் பழமைவாதக் கருத்துக்களைக் கொண்டிருப்பதால் பழமைவாதிகளையும், சமூக நீதியில் தாராளமயமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் சீர்திருத்தவாதிகளையும் கவர்ந்தார்.
அவருடைய வழக்கத்திற்கு மாறான பின்னணி, வாடிகனைப் புத்துயிர் பெறச் செய்து அதன் புனித நோக்கத்திற்குப் புத்துயிர் அளிக்கும் என்று நம்பப்பட்டது.
இவருக்கு முன்பு போப் பதவியில் இருந்த பதினாறாம் பெனடிக்ட் பழமைவாதிகளின் மத்தியில் பிரபலமாக இருந்தார்.
ஆனால் வாடிகன் அதிகாரத்துவத்திற்குள் போப் பிரான்சிஸ் மேற்கொண்ட சில சீர்திருத்த முயற்சிகள் எதிர்ப்பைச் சந்தித்தன.
வித்தியாசமானவராக இருந்தார்
போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட தருணத்திலிருந்தே, தான் விஷயங்களை வித்தியாசமாகவே செய்யப்போவதாக போப் பிரான்சிஸ் குறிப்பிட்டார்.
அவர் தனது கார்டினல்கள் என்று அழைக்கப்படும் மூத்த மதகுருமார்களை, போப் இருக்கையில் அமர்ந்து வரவேற்பதற்கு பதிலாக நின்ற படியே அவர்களை வரவேற்றார்.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி , போப் பிரான்சிஸ் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பொதுமக்கள் முன்பு தோன்றினார்.
வெள்ளை நிற உடையில், எளிமையாக இருந்தவர், 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போதகரும் விலங்குகளை நேசிப்பவருமான புனித பிரான்சிஸ் அசிசிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பிரான்சிஸ் என்னும் பெயரைத் தனக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
ஆடம்பரத்தையும், கொண்டாட்டமான நடைமுறைகளையும் விட, பணிவாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தார்.
அதற்காக, ஆடம்பரமான லிமோசின் காரில் பயணிப்பதை விட, அவர் மற்ற கார்டினல்களை அழைத்துச் செல்லும் பேருந்தில் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று விரும்பினார்.
புதிய போப், 1.2 பில்லியன் மக்களைக் கொண்ட கத்தோலிக்க சமூகத்திற்கு ஒரு தார்மீகக் குறிக்கோளை நிர்ணயித்தார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக அவர் கடைசியாக, நேற்று (ஏப்ரல் 20) ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று,செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் பொதுமக்கள் முன்பு வந்தார்.
இதற்கு முன்னதாக அவர் பைலேட்ரல் நிமோனியா என்ற நோயால் பல வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏரஸ் நகரில் 1936 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி அன்று ஐந்து குழந்தைகளில் மூத்தவராக போப் பிரான்சிஸ் பிறந்தார். அவரது இயற்பெயர் ஹோர்ஹே மரியோ பர்கோலியோ ஆகும்.
அவரது பெற்றோர் பாசிசத்தின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க தங்கள் சொந்த நாடான இத்தாலியை விட்டு வெளியேறினர்.
ஹோர்ஹே, டேங்கோ நடனத்தை நேசித்தார். அவரது உள்ளூர் கால்பந்து கிளப்பான சான் லோரென்சோவின் ஆதரவாளராகவும் இருந்தார் .
ஆரம்பகால மற்றும் கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டதற்கு பிறகு, நுரையீரலின் ஒரு பகுதியை அகற்ற அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவரது வாழ்நாள் முழுவதும் அவருக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் நிலை இருந்தது.
தனது முதுமை காலத்தில் அவர், வலது முழங்கால் வலியால் அவதிப்பட்டார். அதை அவர் "உடல் ரீதியான அவமானம்" என்று விவரித்தார்.
தனது இளம் வயதில், வேதியியலாளராக பட்டம் பெறுவதற்கு முன்பு, ஒரு இரவு விடுதியில் பவுன்சராகவும், துப்புரவாளராகவும் அவர் பணியாற்றினார்.
ஒரு உள்ளூர் தொழிற்சாலையில், அர்ஜென்டினாவின் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக பிரசாரம் செய்த எஸ்தர் பாலேஸ்ட்ரினோவுடன் அவர் நெருக்கமாகப் பணியாற்றினார். எஸ்தர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பின்னர் ஹோர்ஹே மரியோ பர்கோலியோ, ஒரு இயேசு சபை குருவானர் (ஜெஸ்யூட்). தத்துவம் படித்தார். இலக்கியம் மற்றும் உளவியலைக் கற்பித்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு பாதிரியாராக நியமிக்கப்பட்ட அவர், விரைவாக பதவி உயர்வு பெற்று, 1973 ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவில் இயேசு சபையின் மாகாணத் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார்.
குற்றச்சாட்டுகள்
அர்ஜென்டினாவின் மிருகத்தனமான ராணுவ ஆட்சியின் தளபதிகளை, அவர் போதுமான அளவு எதிர்க்கத் தவறிவிட்டதாக சிலர் கருதினர்.
1976 முதல் 1983 ஆம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை செய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன காலகட்டத்தில், அர்ஜெண்டினாவின் 'அசுத்தப் போரின்' போது இரண்டு பாதிரியார்களை அந்த ராணுவம் கடத்தியதில் இவருக்கும் பங்கும் உண்டு என்று குற்றம் சாட்டப்பட்டது.
இரண்டு பாதிரியார்களும் சித்திரவதை செய்யப்பட்டனர். ஆனால் இறுதியில் உயிருடன், அதிகமான மயக்க நிலையில், அரை நிர்வாணமாக அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
ஏழைகள் வாழும் பகுதிகளில் அவர்கள் செய்த பணி, திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டது என்பதை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கத் தவறியதாக ஹோர்ஹே மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இது உண்மையென்றால், அது அவர்களை மரணப்படைக்கு கைவிட்டதாக அர்த்தமாகும். அவர் அதை திட்டவட்டமாக மறுத்தார், அவர்கள் விடுவிக்கப்பட ரகசியமாக பணியாற்றியதாகக் கூறினார்.
இந்த நிகழ்வுகளின் போது அவருக்கு 36 வயது மட்டுமே. மிகவும் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவரைக் கூட நிலைகுலையச் செய்திருக்கக்கூடிய ஒரு பெரிய குழப்பமான சூழ்நிலையில் அவர் சிக்கிக்கொண்டார். இருந்தபோதிலும், அந்த இக்கட்டான நிலையிலும் அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த பலருக்கு உறுதுணையாக இருந்தார்.
அவருக்கு சக இயேசு சபை மதகுருமார்களுடன் அவருக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஹோர்ஹேவுக்கு விடுதலை இறையியலில் ஆர்வம் இல்லை என்று அவர்கள் நம்பினர். அது கிறிஸ்தவ சிந்தனை மற்றும் மார்க்சிய சமூகவியலின் கலவையாகும். மாறாக, அவர் மென்மையான வழிபாட்டு முறையின் ஆதரவை விரும்பினார்.
எளிய ரசனைகள் கொண்டவர்
1992 ஆம் ஆண்டு பியூனஸ் ஏரஸின் துணை பிஷப்பாக நியமிக்கப்பட்டு பின்னர் அவர் பேராயர் ஆனார்.
போப் இரண்டாம் ஜான் பால் அவரை, 2001 ஆம் ஆண்டு கார்டினலாக ஆக்கினார். மேலும் அவர் திருச்சபையின் சிவில் சேவையான கியூரியாவில் பதவிகளை ஏற்றுக்கொண்டார்.
ஒரு மூத்த மதகுருவின் பல பண்புகளைத் தவிர்த்து, எளிய ரசனைகள் கொண்ட மனிதராகவே அவர் வாழ்ந்தார். அவர் வழக்கமாக விமானங்களில் சாதாரண வகுப்பில்தான் பயணம் செய்வார். அவரது பதவியினைக் குறிக்கும் சிவப்பு மற்றும் ஊதா நிற ஆடைகளை விட - ஒரு பாதிரியாரின் கருப்பு நிற அங்கியை அணிய விரும்பினார்.
தனது பிரசங்கங்களில், சமூகத்தில் அனைவரையும் அரவணைத்துச் செல்ல அழைப்பு விடுத்தார் மற்றும் சமூகத்தில் ஏழைகள் மீது கவனம் செலுத்தத் தவறிய அரசாங்கங்களை விமர்சித்தார்.
"உலகின் மிகவும் சமத்துவமற்ற பகுதியில் நாம் வாழ்கிறோம், இந்த ஏற்றத்தாழ்வு மிக வேகமாக வளர்ந்தும் வருகிறது ஆனால் இது துயரத்தைக் குறைந்த அளவே நீக்கியுள்ளது", என்று அவர் கூறியுள்ளார்.
போப்பாக, கிழக்கு ஆர்த்தடாக்ஸ் திருச்சபையுடனான ஆயிரம் ஆண்டுகால பிளவை சரிப்படுத்த அவர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இதன் அடையாளமாக, 1054ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பிளவுக்குப் பிறகு முதன்முறையாக கான்ஸ்டான்டினோபிளின் முதுபெரும் தந்தை (Patriarch), ரோம் நகரின் புதிய ஆயராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொண்டார்.
பிரான்சிஸ் ஆங்கிலிகன்கள், லூத்தரன்கள் மற்றும் மெதடிஸ்டு பிரிவுகளுடன் இணைந்து பணியாற்றினார். மேலும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீன அதிபர்களை அமைதிக்காகத் தன்னுடன் இணைந்து பிரார்த்தனை செய்யும்படி அவர் அழைப்பு விடுத்தார்.
இஸ்லாமிய போராளிகளின் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்லாம் மதத்தை வன்முறையுடன் அடையாளம் காண்பது சரியல்ல என்று அவர் கூறினார். "நான் இஸ்லாமிய வன்முறையைப் பற்றிப் பேசினால், கத்தோலிக்க வன்முறையையும் பற்றிப் பேச வேண்டும்," என்று அவர் அறிவித்தார்.
அவர் அரசியல்ரீதியாக அர்ஜென்டினா அரசாங்கத்தின் ஃபாக்லாந்து தீவுகள் மீதான உரிமையை ஆதரித்தார்.
மேலும், அவர் ஸ்பானிஷ் பேசும் லத்தீன் அமெரிக்கராக இருந்ததால், அமெரிக்க அரசாங்கம் கியூபாவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லுறவை ஏற்படுத்த முயன்றபோது, ஒரு முக்கியமான மத்தியஸ்தராக பணியாற்றினார். ஐரோப்பாவை சேர்ந்த ஒரு போப் இவ்வளவு முக்கியமான ராஜதந்திரப் பாத்திரத்தை வகிப்பதை கற்பனை செய்வது கடினம்.
பாரம்பரியவாதி
திருச்சபையின் பல போதனைகளில், போப் பிரான்சிஸ் ஒரு பழமைவாதியாகவே தெரிந்தார்.
மான்சிக்னர் ஓஸ்வால்டோ மஸ்டோ போப் பிரான்சிஸ் பற்றி கூறுகையில் வர் கருணைக்கொலை, மரண தண்டனை, கருக்கலைப்பு, வாழ்வதற்கான உரிமை, மனித உரிமைகள் மற்றும் குருமார்களின் பிரம்மச்சரியம் போன்ற விஷயங்களில் போப் ஜான் பால் II ஐப் போலவே சமரசமில்லாமல் இருந்தார் என்றார்.
பாலின ஈடுபாட்டை பொருட்படுத்தாமல் மக்களை திருச்சபை வரவேற்க வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால் ஓரின சேர்க்கையாளர்கள் குழந்தைகளை தத்தெடுப்பது, குழந்தைகளுக்கு எதிரான ஒரு வகையான பாகுபாடு என்று வலியுறுத்தினார்.
போப் பிரான்சிஸ் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சில வகையான சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுவதை ஆதரித்தார். ஆனால், அதை "திருமணம்" என்று அழைக்க அவர் விரும்பவில்லை. ஏனென்றால், அப்படி அழைப்பது "கடவுளின் திட்டத்தை அழிக்கும் முயற்சி" என்று அவர் கூறினார்.
2013 ஆம் ஆண்டு அவர் போப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட சில நாட்களிலே, அவர் ரோமில் கருக்கலைப்பு எதிர்ப்பு அணிவகுப்பில் பங்கேற்றார். மேலும் கருத்தரித்த தருணத்திலிருந்து" பிறக்காத குழந்தையின் உரிமைகளையும் அவர் கோரினார்.
அவர் மகப்பேறு மருத்துவர்களை தங்கள் மனசாட்சியைத் தட்டி எழுப்பும்படி அழைப்பு விடுத்தார். மேலும், அயர்லாந்து கருக்கலைப்பு குறித்த வாக்கெடுப்பை நடத்தியபோது, அங்குள்ள மக்கள் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கெஞ்சும் வகையில் அவர் ஒரு செய்தியை அனுப்பினார்.
பெண்களை பாதிரியாராக்குவதை அவர் எதிர்த்தார்.
மேலும், நோயைத் தவிர்க்க கருத்தடை பயன்படுத்தப்படலாம் என்பதை அவர் முதலில் ஏற்றுக்கொண்டதாகத் தோன்றினாலும், இந்த விஷயத்தில் பால் VI இன் போதனையை அவர் பாராட்டினார் - இது பெண்களை ஆண் திருப்திக்கான கருவிகளாகக் குறைக்கக்கூடும் என்று எச்சரித்தது.
2015 ஆம் ஆண்டில், போப் பிரான்சிஸ் பிலிப்பைன்ஸில் பார்வையாளர்களிடம், கருத்தடை என்பது "குழந்தைகளைப் பறிப்பதன் மூலம் குடும்பத்தை அழிப்பதாகும்" என்று அவர் கூறினார். குழந்தைகள் இல்லாதது அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர் கருதவில்லை. ஆனால் வேண்டுமென்றே அவர்களைத் தவிர்க்கும் முடிவே அக்குழந்தைகளுக்கு அதிக சேதத்தை விளைவிப்பதாகத் தோன்றியது என்று அவர் கருதினார்.
குழந்தை துஷ்பிரயோகத்தை சமாளித்தல்
இருப்பினும், போப்பாக அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால் இரண்டு முனைகளில் வந்தது: குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தை சரிவர கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றும் மதத்தை பலவீனப்படுத்துகிறார் என்று கருதிய பழமைவாதிகளின் எதிர்ப்பு.
குறிப்பாக போப் பிரான்சிஸ் விவாகரத்து பெற்ற மற்றும் மறுமணம் செய்த கத்தோலிக்கர்கள் நற்கருணை பெறுவதற்கு அனுமதி அளித்த முடிவைப் பற்றி அவர்கள் மிகவும் கவலைப்பட்டனர்.
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவிற்கான முன்னாள் அப்போஸ்தலிக் நன்சியோவான பேராயர் கார்லோ மரியா விகானோ, 11 பக்க போர் அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னாள் கார்டினல் தாமஸ் மெக்காரிக்கின் நடத்தை குறித்து வாடிகனுக்கு செய்யப்பட்ட தொடர் எச்சரிக்கைகளை விவரிக்கும் கடிதத்தை அவர் வெளியிட்டார்.
தாமஸ் மெக்காரிக், பெரியவர்கள் மற்றும் சிறார்களைத் தாக்கும் தொடர் துஷ்பிரயோகம் செய்பவர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
"தாமஸ் மிகவும் ஊழல் நிறைந்தவர் என்று போப் பிரான்சிஸுக்கு தெரிந்தும் அவரை "நம்பிக்கைக்குரிய ஆலோசகராக" வைத்திருந்தார். இதற்குத் தீர்வு என்னவென்றால், போப் பிரான்சிஸ் பதவி விலக வேண்டும்", என்று பேராயர் விகானோ அப்போது கூறியிருந்தார்.
"இந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் சியத்தை மறைத்து பொய்யின் அடிப்படையில் செயல்படுகின்றன. மேலும் முழு திருச்சபையையும் கழுத்தை நெரிக்கின்றன" என்று பேராயர் கூறினார்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை திருச்சபையையே மூழ்கடிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. வாடிகனின் விசாரணைக்குப் பிறகு, மெக்காரிக் இறுதியில் தாமஸ் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
கோவிட் தொற்றுநோய் காலத்தில், வைரஸ் பரவுவதைத் தடுக்க, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தனது வழக்கமான வருகைகளை பிரான்சிஸ் ரத்து செய்தார். மேலும் கோவிட் தடுப்பூசி போடுவது ஒரு உலகளாவிய கடமை என்றும் அவர் அறிவித்தார்.
2022 ஆம் ஆண்டில், 95 வயதில் முன்னாள் போப் பெனடிக்ட் இறந்த பிறகு, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தனது முன்னோடியை அடக்கம் செய்த முதல் போப், இவர் ஆனார்.
அப்போது, அவருக்கு சொந்த உடல்நலப் பிரச்னைகள் இருந்தன. இதனால் அவர் பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உலகளாவிய அமைதி மற்றும் மதங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகளைத் தொடர பிரான்சிஸ் உறுதியாக இருந்தார்.
2023 ஆம் ஆண்டில், அவர் தெற்கு சூடானுக்கு யாத்திரை மேற்கொண்டு, மோதலை முடிவுக்குக் கொண்டுவர அந்நாட்டின் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
யுக்ரேனில் "அபத்தமான மற்றும் கொடூரமான போரை" முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இருப்பினும், ரஷ்யா தனது படையெடுப்பிற்கு யுக்ரேனே காரணம் என்று கூறும் பொய்யான பிரச்சாரத்தை அவர் ஏற்றுக்கொண்டது போல் தோன்றியதால் யுக்ரேன் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஒரு வருடம் கழித்து, அவர் நான்கு நாடுகள், இரண்டு கண்டங்கள் கொண்ட ஒரு லட்சிய பயணத்தைத் தொடங்கினார்; இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தங்கினார்.
சமீபத்தில் அவர், தனது உடல்நலக் குறைபாட்டால் சிரமப்பட்டார். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பைலேட்டரல் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு ஐந்து வாரங்கள் மருத்துவமனையில் கழித்தார்.
போப் பிரான்சிஸ் ஐரோப்பிய நாடுகளைச் சாராத 140க்கும் மேற்பட்ட கார்டினல்களை நியமித்தார். மேலும் அவர் பெற்றதை விட, மிகவும் உலகளாவிய கண்ணோட்டமுள்ள ஒரு தேவாலயத்தை அடுத்த போப்புக்கு வழங்கியுள்ளார்.
அவர் ஆடம்பரமில்லாத போப்பாக இருந்தார். உதாரணத்திற்கு, சிஸ்டைன் தேவாலயத்துடன் கூடிய வாடிகனின் அப்போஸ்தலிக்க அரண்மனையில் வசிக்காமல், அருகிலுள்ள நவீன கட்டிடத்தில் (இரண்டாம் போப் ஜான் பால் விருந்தினர் இல்லமாக கட்டியது) வசிக்கத் தேர்வு செய்தார்.
அவர் கத்தோலிக்க அமைப்பையே மாற்றியமைக்க முடியும் என்று நம்பினார். உள்நாட்டு மோதல்களைக் குறைத்து, ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, திருச்சபையை மக்களுக்குத் திருப்பி அளிப்பதன் மூலம் திருச்சபையின் வரலாற்றுப் பணியை மேம்படுத்த விரும்பினார்.
"காயம்பட்ட திருச்சபை தெருக்களில் இறங்கிச் செல்வதற்கும், நோயுற்று ஒதுங்கியிருக்கும் திருச்சபைக்கும் இடையே நான் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால், நான் முதலாவதைத்தான் தேர்ந்தெடுப்பேன்", என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.