You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்; பிரதமர் மோதி கூறியதென்ன?
போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.
திங்கட்கிழமை, உள்ளூர் நேரப்படி காலை 07:35 மணிக்கு அவர் இறந்ததை வாடிகன் உறுதிப்படுத்தியது. போப் பிரான்சிஸ் பக்கவாதத்தாலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இதய செயலிழப்பு காரணமாகவும் உயிரிழந்தார் என்றும் வாடிகன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஹோர்ஹே மரியோ பர்கோலியோ எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது" என்று கார்டினல் ஃபாரெல் கூறுகிறார்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு "ஈஸ்டர் வாழ்த்துகள்" தெரிவிக்க செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்துள்ளது.
சக்கர நாற்காலியில் வந்த போப் பால்கனியில் இருந்தபடி, ஆரவாரம் செய்த கூட்டத்தை நோக்கி கையசைத்து, "அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துகள்" என்று கூறினார்.
ஆசிர்வாதம் வழங்கிய பிறகு, அவர் வாகனத்தில் ஏறி வாடிகன் சதுக்கத்தைச் சுற்றிவந்தார். அந்த நேரத்தில், பல முறை வாகனத்தை நிறுத்தி, குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.
"அன்பான சகோதர சகோதரிகளே, நமது புனித தந்தை பிரான்சிஸின் மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறேன்'' என கார்டினல் ஃபாரெல் தெரிவித்தார்.
''இன்று காலை 7:35 மணிக்கு (உள்ளூர் நேரம்) ரோமின் பிஷப் பிரான்சிஸ், தந்தையிடம் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது''
''நற்செய்தியின் விழுமியங்களை விசுவாசத்துடனும், தைரியத்துடனும், உலகளாவிய அன்புடனும் நமக்குக் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஏழைகளுக்கு மிகவும் ஆதரவாக வாழ அவர் நமக்கு கற்பித்தார்'' எனவும் அவர் கூறியுள்ளார்.
போப் பிரான்சிஸ், கத்தோலிக்க திருச்சபையில் பல மாற்றங்களை முன்னெடுத்தவர். அதே நேரத்தில், பாரம்பரிய நிகழ்வுகள் தொடர வேண்டும் என்று கருதும் பழமைவாதிகளிடையேவும் இவர் பிரபலமாக இருந்தார்.
உலகின் தெற்குப் பகுதியில் இருந்து வந்த முதல் போப் இவர்தான்.
இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஐந்து வார மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்து திரும்பினார்.
"போப் பிரான்சிஸ் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் கருணை, பணிவு மற்றும் ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்", என்று பதிவிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி போப் பிரான்சிஸுக்கு இரங்கல் தெரித்துள்ளார்.
மேலும் அந்த எக்ஸ் தள பதிவில், நரேந்திர மோதி, "ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்கு, அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார். அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன். இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா அமைதியைக் காணட்டும்", என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் இரங்கல்
"அமைதியில் இளைப்பாறுங்கள் போப் பிரான்சிஸ்", என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை போப் பிரான்சிஸ் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
அந்தப் பதிவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மேலானியாவை போப் பிரான்சிஸ் சந்தித்தபோது எடுத்த புகைப்படமும், துணை அதிபர் ஜே.டி. வான்ஸை போப் சந்தித்தபோது எடுத்த புகைப்படமும் இடம்பெற்றிருந்தன.
"போப் பிரான்சிஸின் மரணத்தைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன், அனைவருக்கும் நியாயமான உலகத்தை உருவாக்க அயராத முயற்சிகளை மேற்கொண்ட போப் பிரான்சிஸ் சிறந்த நீடித்த மரபை விட்டுச் சென்றுள்ளார்.
உலகமும், திருச்சபையும் சிக்கலான மற்றும் சவாலான நேரத்தை எதிர்கொண்டபோது, தனது துணிச்சலான தலைமையாலும், பணிவாலும் நிலைமையை சிறப்பாக கையாண்டார். ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்களுக்கான போப்பாக அவர் இருந்தார்.
பிரிட்டன் மக்களின் சார்பாக, முழு கத்தோலிக்க திருச்சபைக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்", என்று போப் பிரான்சிஸ் மறைவுக்கு எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் குறிப்பிட்டுள்ளார்.
உலக மக்களுக்கு போப்பின் இறுதி செய்தி
மறைந்த போப் பிரான்சிஸ் ஈஸ்டர் தினத்தையொட்டி வெளியிட்ட அறிக்கையே உலக மக்களுக்கான அவரது கடைசி செய்தியாக அமைந்தது. ஈஸ்டர் ஞாயிறன்று போப்பின் அறிக்கையை அவரது உதவியாளர் ஒருவர் வாசித்தார்.
அந்த செய்தியில்,"மத சுதந்திரம், சிந்தனைக்கான சுதந்திரம், கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் இன்றி அமைதி இல்லை" என போப் தெரிவித்திருந்தார்.
காஸா மக்களையும், குறிப்பாக அங்கு வாழும் கிறிஸ்தவ மக்களையும் குறிப்பிட்ட அவர், அங்கு நிகழும் மோதல்கள் மரணத்தையும், அழிவையும் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் இந்த போர் "மோசமான மனிதாபிமான சூழ்நிலையை" உருவாக்குகிறது. உலகளாவிய யூத எதிர்ப்புவாதம் வளர்ந்து வருவது "கவலைக்குரியது" என்றும் அவர் கூறினார்.
"உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மோதல்களில் கொலை செய்வதற்கான தாகம் எவ்வளவு அதிகமாக உள்ளது" என்று அவர் கூறினார்.
"அனைத்து இஸ்ரேலிய மற்றும் பாலத்தீன மக்களுக்காக எனது அன்பை வெளிப்படுத்துகிறேன். போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுங்கள், பணயக்கைதிகளை விடுவியுங்கள். அமைதியான எதிர்காலத்தை விரும்பும் மக்களுக்கு உதவுங்கள்." எனவும் போப் கூறியுள்ளார்.
யுக்ரேன் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் "நீடித்த அமைதியை அடைவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும்" எனவும் போப்பின் இறுதி அறிக்கை கூறுகிறது.
பவுன்சராக பணியாற்றிய போப்
பியூனஸ் அயர்ஸில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக உயர்ந்தவர் போப் பிரான்சிஸ். அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 1936 டிசம்பர் 17ம் தேதி போப் பிரான்சிஸ் பிறந்தார். பாசிசத்தின் பிடியில் இருந்து தப்பிக்க இத்தாலியில் இருந்து வெளியேறிய போப் பிரான்சிஸ், 5 குழந்தைகள் கொண்ட குடும்பத்தின் மூத்த மகன் ஆவார்.
சான் லொரெஞ்சோ நகரின் உள்ளூர் கால்பந்து க்ளப்பின் ஆதரவாளராக இருந்த போப் பிரான்சிஸ், டாங்கே நடனத்திலும் விருப்பம் கொண்டவர்.
இளம் வயதிலேயே கடுமையான நிமோனியா தாக்குதலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் நுரையீரலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டியிருந்தது. இதனால் அவர், தனது வாழ்நாள் முழுவதும் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்ற நிலையும் ஏற்பட்டது.
வயதுமூப்பின் காரணமாக தனது வலது காலில் ஏற்பட்ட மூட்டுவலியால் மிகவும் பாதிக்கப்பட்டார். இந்த பிரச்சனையை போப், 'உடல்ரீதியிலான அவமானம்' என்று குறிப்பிட்டார்.
வேதியியலில் பட்டம் பெறும்வரை, போப் பிரான்சிஸ் பவுன்சராகவும், தரையை சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டார்.
உள்ளுர் தொழிற்சாலை ஒன்றில் எஸ்தர் பலெஸ்ட்ரினோவுடன் பணியாற்றிவர் போப் பிரான்சிஸ். எஸ்தர் பலெஸ்ட்ரினோ, அர்ஜெண்டினாவின் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர் என்பதால் கடும் சித்திரைவதைக்கு உள்ளானவர், இறுதியில் அவரது சடலம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினரான போப் பிரான்சிஸ், தத்துவயியல் பயின்றவர் என்பதும் இலக்கியம் மற்றும் மனோதத்துவத்தை பயிற்றுவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, துரிதமாக பதவி உயர்வு பெற்ற போப் பிரான்சிஸ், 1973 இல் அர்ஜென்டினா மாகாணத்தின் மேலதிகாரியானார்.
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு