You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை விமான சாகசத்தை காணச் சென்ற 5 பேர் உயிரிழப்பா? தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
சென்னையில் ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்றவர்களில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
விமான சாகச நிகழ்ச்சிக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று அதிமுகவும் பாஜகவும் குற்றம்சாட்டியுள்ளன. ஆனால், தமிழ்நாடு அரசு அவற்றை மறுத்துள்ளது. கூட்டத்தில் யாரும் மரணமடையவில்லையென்றும் எந்த ஒரு மரணமும் நெரிசலாலோ, மோசமான ஏற்பாடுகளாலோ நடக்கவில்லையென்றும் கூறியுள்ளது.
இந்த வேளையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் ட்வீட் அரசியல் அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது.
விமான சாகச நிகழ்ச்சி முடிந்ததும் போக்குவரத்து நெரிசல்
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட லட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டனர்.
இந்த நிகழ்ச்சி பிற்பகல் ஒரு மணிக்கு முடிவுக்கு வந்தபோது, கடற்கரையில் குவிந்திருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றனர். இதனால், அந்த பகுதியில் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெரினாவை ஒட்டியுள்ள காமராஜர் சாலைக்கு இணையாகச் செல்லும் அண்ணா சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
5 பேர் உயிரிழப்பா?
இந்த நெரிசலில் சிக்கியும் வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் ஏற்பட்ட நீரிழப்பினாலும் சுமார் 200 பேர் வரை மயக்கமடைந்ததாகவும், 90க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
திருவொற்றியூரை சேர்ந்த 34 வயதான கார்த்திகேயன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பும் போது INS அடையாறு அருகே நெஞ்சை பிடித்துக்கொண்டு, வாந்தி எடுத்து மயக்கமடைந்தார், ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார், ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என்று ஊடக செய்திகள் கூறுகின்றன.
இதேபோல, சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஜான் பாபு, பெருங்களத்தூரை சேர்ந்த 48 வயதான சீனிவாசன், தினேஷ் ஆகியோரும் மயக்கமடைந்து பிறகு உயிரிழந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. ஆந்திராவைச் சேர்ந்த இதுவரை அடையாளம் காணப்படாத ஒருவரும் உயிரிழந்துவிட்டதாக அந்த செய்திகள் கூறுகின்றன.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், விமான சாகச நிகழ்ச்சிக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தமிழ்நாடு அரசு மறுப்பு
தமிழ்நாடு அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒரு முறையும் பின்னர் துறை அளவில் பல முறையும் நடத்தப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்களும் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
இது மட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக நாற்பது ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கூட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை - தமிழ்நாடு அரசு
இது தொடர்பாக அரசு அனுப்பிய சிறு தகவல் குறிப்பில், விமானக் காட்சியைப் பார்க்க வந்தவர்கள் யாரும் ராயப்பேட்டை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வரவில்லையென்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் இரண்டு பேர் வேறு சில உடல்நலப் பிரச்னைகளால் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது உடல்நலம் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் யாரும் மரணமடையவில்லையென்றும் எந்த ஒரு மரணமும் நெரிசலாலோ, மோசமான ஏற்பாடுகளாலோ நடக்கவில்லையென்றும் அந்தத் தகவல் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கவனம் ஈர்த்த கனிமொழி பதிவு
தமிழ்நாடு அரசு இவ்வாறாக பதிலளித்திருந்த நிலையில், மாநிலத்தில் ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தகவல் கவனம் ஈர்ப்பதாக அமைந்துள்ளது. "விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது." என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்ததே அதற்குக் காரணம்.
ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை எனக் குற்றச்சாட்டு
மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையென நிகழ்ச்சிக்குச் சென்றவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். காலை 11 மணிக்குத் துவங்கவிருந்த நிகழ்ச்சிக்காக, காலை எட்டரை மணியில் இருந்தே பொதுமக்கள் கடற்கரையில் கூட ஆரம்பித்தனர்.
காலை எட்டு மணியிலிருந்தே செங்கல்பட்டு - கடற்கரை, திருவள்ளூர்- சென்ட்ரல், வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை ஆகிய வழித்தடங்களில் உள்ள உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்கவே மிகப் பெரிய வரிசை நின்றது. இதனால், பலர் இந்த நிகழ்ச்சிக்குச் செல்லும் திட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்பினர்.
சென்னை மெட்ரோ ரயிலின் இரு வழித்தடங்களிலும் கடுமையான கூட்டம் இருந்தது. டிக்கெட் கவுன்டர்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால், கியூஆர் கோடைப் பயன்படுத்தி டிக்கெட் எடுக்க பலரும் ஒரே நேரத்தில் முயன்றதால், சிறிது நேரம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. மெட்ரோ ரயிலைப் பொறுத்தவரை வண்ணாரப்பேட்டை - ஏஜிடிஎம்எஸ் வழித்தடத்தில் மூன்றரை நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. இருந்தபோதும் கூட்டம் குறையவில்லை.
காலை பத்து மணியளவில் பல லட்சம் பேர் கடற்கரையில் குவிந்தனர். இருந்தபோதும் இவர்களுக்கென போதுமான குடிநீர், கழிப்பட வசதிகள் செய்துதரப்படவில்லையென நிகழ்ச்சியைக் காணவந்த பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
பிற்பகல் ஒரு மணியளவில் சாகசம் நிறைவடைந்த போது கடற்கரையில் கூடியிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேற முயற்சித்தனர். இதனால், காமராஜர் சாலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
கடற்கரையை ஒட்டிய பறக்கும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், திருமயிலை, வேளச்சேரி ரயில் நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் குவிந்தனர். பறக்கும் ரயிலைப் பொருத்தவரை, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி வழித்தடத்தில் விடுமுறை நாள்களுக்கான நேர அட்டவணைப்படியே அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் என்ற எண்ணிக்கையிலேயே ரயில்கள் இயக்கப்பட்டதால் ரயில் நிலையங்களில் கூடியிருந்தவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)