சென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தம்பியை கொல்வதாக மிரட்டிய நபர் - பாட்டியால் ஒரே ஆண்டில் கிடைத்த நீதி

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

சென்னையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 43 வயதான நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதில் சிறுமியின் பாட்டிக்கு பிரதான பங்கு உள்ளதாகக் கூறுகிறார், அரசு சிறப்பு வழக்கறிஞர் அனிதா.

வழக்குப் பதிவான ஓராண்டில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. போக்சோ வழக்குகளில் முன்னுதாரண வழக்காக இது இருப்பதாகக் கூறுகின்றனர், குழந்தைகள் நல ஆர்வலர்கள்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது? ஒரே ஆண்டில் நீதிமன்ற தீர்ப்பு வந்தது எப்படி? குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைத்ததன் பின்னணியில் சிறுமியின் பாட்டி செய்தது என்ன?

சிறுமிக்கு நடந்தது என்ன?

சென்னை பாரிமுனை பகுதியில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் நடந்த சம்பவம் இது.

பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை அவருக்கு நன்கு அறிமுகமான சையது இப்ராஹிம் என்ற நபர் தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமி வசிக்கும் வீட்டிலிருந்து சற்று தொலைவில் தனது தாயார் வசிக்கும் வீட்டுக்கு சிறுமியை சையது இப்ராஹிம் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை வீட்டுக்குள் வருமாறு இப்ராஹிம் அழைத்துள்ளார். சிறுமி மறுக்கவே அவரை வீட்டுக்குள் தள்ளி தாடையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் சிறுமி மயக்கமடைந்ததாக நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிறகு கண் விழித்த சிறுமி தனக்கு ஏதோ நடந்திருப்பதை அறிந்து அங்கிருந்து தடுமாறி தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

"சிறுமி வசிக்கும் குடியிருப்புக்கு அருகில் இப்ராஹிம் குடும்பம் வசித்து வருகிறது. சம்பவத்துக்குப் பிறகு சிறுமி நடந்து வருவதை இப்ராஹிம் கவனித்துள்ளார். நடந்த சம்பவத்தை உன் அம்மாவிடமோ, என் மனைவிடமோ சொன்னால் உன் தம்பியைக் கொன்றுவிடுவேன்" என மிரட்டியதாக நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

"இப்ராஹிமின் மகளுக்கும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான். இருவரும் ஒன்றாக பள்ளிக்குச் சென்று வந்துள்ளனர். சம்பவம் நடந்த நாளில், நான் உனக்கு அப்பா மாதிரி எனக் கூறி சிறுமியை கூட்டிச் சென்றுள்ளார்" என்கிறார் இந்த வழக்கில் வாதாடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் அனிதா.

சிறுமியின் தந்தை சிறு வயதிலேயே பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் ஒரு நபரை சிறுமியின் தாயார் மறுமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறார்.

பாட்டி கொடுத்த தைரியம்

தனது தம்பியைக் கொன்றுவிடுவதாக இப்ராஹிம் மிரட்டியதால் சிறுமியும் அவரது தாயும் பயந்து போய் அமைதியாக இருந்துள்ளதாகக் கூறுகிறார் அரசு வழக்கறிஞர் அனிதா.

இதுதொடர்பாக சையது இப்ராஹிமிடம் நியாயம் கேட்கச் சென்ற சிறுமியின் தாயாருக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்ததால் தாயும் மகளும் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

மேற்கொண்டு பேசிய அனிதா, "பல நாட்களாக சிறுமி தூக்கத்தில் எழுந்து, 'தம்பியை கொன்றுவிடுவார்களா?' எனக் கேட்டு அழுதுள்ளார். தன் மகளுக்கு நேர்ந்த துன்பத்தால் சிறுமியின் தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்" என்றார்.

''சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்து (அக்டோபர்) தனது மகளின் உடல்நலனை விசாரிப்பதற்காக சிறுமியின் பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனது பேத்திக்கு நடந்த சம்பவம், அவருக்குத் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சையது இப்ராஹிமை அவரது வீட்டில் சந்தித்து சண்டை போட்டுள்ளார். அப்போது பாட்டியை சையது மிரட்டியுள்ளார். இதன் பிறகும் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையம் செல்வதற்கு அஞ்சியுள்ளனர். ஆனால், அவரது பாட்டிதான் தனது மகளுக்கு தைரியம் கொடுத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வைத்தார்" என்கிறார் அரசு வழக்கறிஞர் அனிதா.

சட்டப் பிரிவை மாற்றிய நீதிபதி

சிறுமியின் தாயார் புகார் கொடுத்த பிறகு குற்றம் சுமத்தப்பட்ட நபர் மீது 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் போக்சோ சட்டப்பிரிவு 8-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின்படி ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்.

"இது குழந்தைகளைத் தவறாக தொடுவதற்காகப் போடப்படும் சட்டப் பிரிவு" எனக் கூறிய அனிதா, இந்த வழக்கில் கைதான இப்ராஹிமின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, 'சிறுமியிடம் பேச வேண்டும்' என நீதிபதி கூறியதாகத் தெரிவித்தார்.

சிறுமியை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி நேரில் அழைத்துப் பேசினார். அப்போது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதை உறுதி செய்து, மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதன் பின்னரே இந்த வழக்கில் சட்டப் பிரிவுகள் மாற்றப்பட்டதாகக் கூறுகிறார் அனிதா.

மருத்துவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், போக்சோ பிரிவு 6-இன் கீழ் வழக்கு மாற்றப்பட்டது. "அதன்படி ஆயுள் தண்டனை கிடைக்கும்'' என்றார் அவர்.

படிப்பை தொடர்ந்த மாணவி

அதேநேரம், காவல் நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்ததால் சிறுமியின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி நீதிபதியிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் எடுத்துக் கூறியதும், 'அதே பள்ளியில் சிறுமி படிக்க வேண்டும். காவல் துறை அதிகாரிகளிடம் நான் கூறியதாகப் பேசுங்கள்' என நீதிபதி கூறினார் என்கிறார் அரசு வழக்கறிஞர்

இதையடுத்து, தற்போது அதே பள்ளியில் சிறுமி படித்து வருகிறார். "மிக நன்றாகப் படிக்கக் கூடிய மாணவி அவர். இந்தச் சம்பவத்தால் அவருக்கு ஓர் ஆண்டு படிப்பு வீணாகிவிட்டது" எனக் கூறுகிறார் அனிதா.

''கடந்த பத்து மாதங்களில் பல்வேறு சவால்களை இந்த வழக்கு சந்தித்துள்ளது. குற்றம் நடந்த நேரத்தில் சிறுமி மயக்கமாகிவிட்டதால் சையது இப்ராஹிமை தொடர்புபடுத்தும் நேரடிகள் சாட்சிகள் எதுவும் இல்லை. தன்னுடைய தரப்பை நியாயப்படுத்துவதற்கு ஏழு சாட்சிகளை சையது இப்ராஹிம் கொண்டு வந்தார். அவர்களின் சாட்சிகளில் முரண்பாடு உள்ளதை அரசுத் தரப்பு நிரூபித்தது" எனக் கூறுகிறார் அனிதா.

தண்டனை விவரம்

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நீதிபதி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அளித்த தீர்ப்பில், 'குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் 30 ஆயிரம் ரூபாய் அபராதம்' விதிப்பதாக அறிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 10 லட்ச ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கவும் நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார். "கைதான நாளில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் சிறையில்தான் இருந்தார். இந்த வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது" என்கிறார் அரசு வழக்கறிஞர் அனிதா.

சிறுமி வழக்கில் பாட்டியின் தைரியத்தால் இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்ததாகக் கூறிய அனிதா, "தற்போது அந்தப் பாட்டியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை விசாரணைக்கு அழைக்கவில்லை" என்றார்.

'எந்த விவரமும் வெளிவராது'

மேலும், "குழந்தைகளுக்கு முதலில் தன்னம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்களில் முதல் அடி, குழந்தைக்குத்தான் விழுகிறது. சில பெற்றோர், குடும்ப மானம் போய்விடும் என அஞ்சுகின்றனர். போக்சோ வழக்குகளில் குழந்தைகள் தொடர்பான எந்த விவரங்களும் வெளியில் செல்லாது. இத்தகைய வழக்குகளில் அனைத்துத் தகவல்களையும் மிக ரகசியமாகவே கையாள்கிறோம். ஆவணங்களில் சிறுமியின் பெயர், பெற்றோர் பெயர் என அனைத்தும் மறைக்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான சட்ட உதவியும் மனநல ஆலோசனையும் உடனுக்குடன் கிடைக்கிறது" எனக் கூறினார் அனிதா

'அறிமுகமான நபர்களால்தான் பிரச்னை'

இந்தியாவில் குழந்தைகளுக்கு நேரும் பாதிப்புகள் தொடர்பாக 2007ஆம் ஆண்டு மத்திய அரசு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

அதுகுறித்துப் பேசிய குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் அரசு, "13 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான நபர்கள், பாலியல் தொல்லை தருவது தெரிய வந்தது" எனக் கூறுகிறார்.

இதே விவரங்கள், 2022-ஆம் ஆண்டு தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

"ஒரே நாளில் இது நடப்பதில்லை" எனக் கூறும் அவர், "குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுப்பதில் தொடங்கிப் பல்வேறு நிலைகளில் அவர்களிடம் அத்துமீறுகின்றனர்," என்றார்.

சென்னை சிறுமி வழக்கில் பாட்டியின் தைரியத்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை வரவேற்றுப் பேசிய தேவநேயன் அரசு, "தன்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட துன்பம், வேறு குழந்தைக்கு நடக்கக்கூடாது என்ற எண்ணம் பாராட்டப்பட வேண்டியது" என்றார்.

மேலும், சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குவதிலும் சமூகரீதியான கட்டுப்பாடுகளை உடைப்பதிலும் இந்த வழக்கு உதாரணமாக உள்ளதாக தேவநேயன் அரசு தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)