'குட் நைட்' திரைப்படம் ரசிகர்களை ஈர்த்ததா? தூங்க செய்ததா? - விமர்சனம்

பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் குறட்டை பிரச்னையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘குட் நைட்’. விநாயக் சந்திரசேகரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்செல் ரெபெக்கா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தவாரம் திரைக்கும் வந்துள்ள ‘குட் நைட்’ திரைப்படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. அந்தவகையில், இந்து தமிழ் திசை, இந்தப் படத்தை மனதார வரவேற்கலாம் என குறிப்பிட்டு விமர்சனத்தை வெளியிட்டு இருக்கிறது.

ஐடி-யில் பணியாற்றும் மணிகண்டனுக்கு, குறட்டை தீராத பிரச்னையாக இருக்கிறது. இதனால், காதலும் கைவிட்டுப் போகிறது. மோகனின் அக்கா கணவர் ரமேஷ் திலக், வீடுகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவியைப் பொருத்தும் வேலை பார்க்கிறார். அப்படி அவர் செல்லும் வீட்டின் மாடியில் பெற்றோரை இழந்த மீதா ரகுநாத், தனியாக வசிக்கிறார்.

ரமேஷுடன் அந்த வீட்டுக்குச் செல்லும் மோகனும் அனுவும் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

அழகான, உணர்வுபூர்வமான படம்

மோகனின் குறட்டையால் தூக்கம் இழக்கும் அனுவுக்கு உடல்நலப் பிரச்னைகள் வருகின்றன. குற்ற உணர்வால், தனது குறட்டை சரியாகும் வரை தனி அறையில் தூங்குகிறார் மோகன்.

இதையடுத்து நடக்கும் விஷயங்கள் இருவர் உறவிலும் விரிசலை ஏற்படுத்துகின்றன. இறுதியில் குறட்டைப் பிரச்னை சரியானதா? இருவருக்கும் இடையே திருமண பிரச்னை தீர்ந்ததா? நிம்மதியாகத் தொடர்ந்தார்களா என்பது மீதிக் கதை என இந்து தமிழ் திசை விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறட்டையை மையமாக வைத்து அழகான, உணர்வுபூர்வமான ‘ஃபீல்குட்’ படம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். குறட்டைதான் மையம் என்றாலும் அதைச் சுற்றி நாயகனின் குடும்பம், நாயகிக்கென தனித்துவப் பின்னணி, அழகான காதல் காட்சிகள், திருமண வாழ்வில் ஏற்படும் இயல்பான பிரச்னைகள் என திரைக்கதையை ரசிக்கும்படியாக நகர்த்திச் சென்றிருப்பதாகவும் பாராட்டியிருக்கிறது.

நாயகனின் அம்மா, அக்கா, அக்கா கணவர், நாயகியை அரவணைக்கும் தாத்தா - பாட்டியாக இருக்கும் வீட்டுஉரிமையாளர்கள் என அனைத்து கதாபாத்திரங்களும் அழகாகவும் முழுமையுடனும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. நாயகனுக்கும் அவர் அக்கா கணவருக்குமான நட்பும் கிண்டலும் கலந்த உறவு, ரசிக்க வைக்கிறது என குறிப்பிட்டுள்ள இந்து தமிழ் திசை விமர்சனத்தில், இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்துக்கு மேல் கதையைத் தேவைக்கதிகமாக நீட்டிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிகண்டனின் யதார்த்த நடிப்பு

அதேபோல், நாயகனுக்கு தனது குறட்டைப் பிரச்னை குறித்த கவலை, நாயகி மீதான கோபமாக மாறுவதும் அது இருவரையும் பிரிவுவரை இழுத்துச் செல்வதும் வலுவான காரணத்துடன் சித்திரிக்கப்படவில்லை. நாயகனுக்கு அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைகளும் திரைக்கதையை, இரண்டரை மணி நேரம் நீட்டிப்பதற்கான உத்தியாகவே பார்க்க வேண்டியுள்ளது எனவும் அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிகண்டன், கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி யதார்த்தமான நடிப்பைத் தந்திருக்கிறார். தனது பிரச்னையால் மனைவி உடல்நலம் பாதிக்கப்படுவதை உணர்ந்து அழும் காட்சிகளில் மனதைத் தொடுகிறார். அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் அதே நேரத்தில் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத நாயகியாக மீதா ரகுநாத் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்.

ரேச்செல் ரெபெக்கா, ரமேஷ்திலக், நாயகியின் வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், அவர் மனைவியாக நடித்திருப்பவர் என அனைவரும் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. பின்னணி இசையும் காட்சிகளுக்கான உணர்வைக் கச்சிதமாகக் கடத்துகிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களும் கதையின் ‘ஃபீல்குட்’ தன்மைக்குத் துணைபுரிந்திருக்கின்றன.

திரைக்கதை சார்ந்த சில குறைகள் இருந்தாலும் அதைக் கடந்து படத்தில் புன்னகை பூக்கவும் கைதட்டி சிரிக்கவும், உணர்வுபூர்வமாக ஒன்றவும் வைக்கும் தருணங்கள் ஏராளமாக உள்ளன. வாழ்வில் எதிர் கொள்ளும் சில பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுதான்ஆக வேண்டும் என்பதில்லை. அவற்றுடன் வாழப் பழகுவதும் அந்தப் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்கான வழியாக இருக்க முடியும் எனும் செய்தி பிரச்சார நெடியில்லாமல் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்காகவே ‘குட் நைட்’டை மனதார வரவேற்கலாம் என படத்திற்கு பாசிடிவ் விமர்சனத்தை இந்து தமிழ் திசை அளித்திருக்கிறது.

மலையாள படங்களைப் போன்ற உணர்வுப்பூர்வ படம்

டைம்ஸ் ஆஃப் இந்தியா, குட் நைட் படத்தின் குறட்டை சத்தம் கொண்டாடும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டு விமர்சனம் வெளியிட்டுள்ளது. மலையாள திரைப்படங்கள் அளவிற்கு உணர்வுப்பூர்வமான கதைகளை தமிழ் சினிமா அணுகுவதில்லை என்றாலும், அரிதாக சில படங்கள் வந்து இதயங்களை நிறைக்கும். ‘குட் நைட்’ நிச்சயம் அப்படியான ஒரு படமாக இருக்கிறது எனவும் பதிவிடப்பட்டுள்ளது.

அழகான தருணங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக இணைத்து அழுத்தமான ஒரு படைப்பாக இயக்குநர் படத்தை மாற்றியிருக்கிறார் என தெரிவித்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நிலைநிறுத்தியுள்ளதாகவும் பாராட்டியுள்ளது.

நாயகன், நாயகியின் ஆரம்ப காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டு உள்ளதாகவும், அப்படியான காட்சிகள் பார்வையாளர்களின் முகத்தில் புன்னகையை தவழச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா, எளிமையான திருப்பங்களுடன் ஒரு சிறந்த ஃபீல் குட் திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணம் எனவும் தெரிவித்துள்ளது.

குறட்டை விடும் பழக்கத்தைக் கொண்ட நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஐ.டி. இளைஞனின் பிரச்னைதான் படத்தின் கதை என ஒரு வரியில் சொன்னாலும், அதை சுவாரசியமான திரைக்கதை, துணை கதாபாத்திரங்கள், பொருத்தமான நட்சத்திர தேர்வு, தினசரி வாழ்க்கையில் கடந்து போகும் சில பல பிரச்னைகள் என ஒரு யதார்த்தமான குடும்பத்தையும் சில மனிதர்களையும் நம் கண் முன் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார் குட் நைட் படத்தின் இயக்குநர் என தினமலர் தனது விமர்சனத்தில் பாராட்டியிருக்கிறது.

நாயகன், நாயகி கதாபாத்திரங்கள் மட்டுமின்றி மற்ற துணை நடிகர்கள் கதாபாத்திரங்களையும் நம் மனதில் இடம் பிடிக்கும்படி உருவாக்கியிருக்கிறார்கள். மணிகண்டன் அம்மா, அக்கா ரேச்செல் ரெபெக்கா, மாமா ரமேஷ் திலக், மீதா வீட்டு உரிமையாளர் பாலாஜி சக்திவேல், அவரது மனைவி என ஒவ்வொருவரும் அவர்களது கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

ரசிகர்களை தூங்கவிடாத குட் நைட்

ஷான் ரோல்டனின் இசையில் முழுமையான பாடல்களாக இல்லாமல் சிறு சிறு பாடல்களாக வந்து போகின்றன. மூன்று வீடுகள், சென்னை தெருக்கள் என படத்தின் கதைக்களங்களை உள்ளது உள்ளபடியே பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேதுமாதவன்.

இடைவேளை வரை படம் மிகவும் சுவாரஸ்யமாக நகர்கிறது. திரைக்கதை, ஆங்காங்கே ‘ஒன் லைன்’ வசனங்களின் நகைச்சுவையில் மிளிர்கிறது. இடைவேளைக்குப் பின், குறட்டைப் பிரச்சினையைச் மணிகண்டன் மேற்கொள்ளும் சிகிச்சை முறைகள் படத்தின் சுவாரஸ்யத்தையும் வேகத்தையும் குறைத்து விடுகின்றன. அதே சமயம், கிளைமாக்ஸ்க்கு அரை மணி நேரம் முன்பாகவே மீண்டும் டாப் கியரில் செல்வதாக தினமலர் விமர்சனத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வாழ்வியலை பதிவு செய்யும் இயக்குநர்கள் பட்டியலில் குட் நைட் இயக்குநர் விநாயக் சந்திரசேகரனும் இடம்பெறுவார் என குறிப்பிட்டுள்ள தினமலர், அவர் இதுமாதிரியான படங்களை தொடர்ந்து எடுக்க வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ரசிகர்களை தூங்க விடாத ‘குட் நைட்’ என தினமணி விமர்சனம் வெளியிட்டிருக்கிறது. மேலும், குறட்டை என்பது பெரும்பாலும் அனைத்துக் குடும்பங்களிலும் எதிர்கொள்ளும் ஒரு சிக்கல். நம் அண்ணன், தங்கை, அப்பா, உறவுக்காரர்கள் என யாராவது ஒருவர் குறட்டை பழக்கமுடையவராக இருக்கலாம். அப்படிப்பட்ட, இந்த குறட்டையை வைத்து ஒரு திரைப்படம் இயக்கினால் எப்படி இருக்கும்? அதிலும் அதை நகைச்சுவையாகவும், உணர்வுபூர்வமாகவும் வழங்கினால்?... இம்மாதிரியான கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக வந்திருக்கிறது ‘குட்நைட்’ எனவும் தினமணி விமர்சனத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: