You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அரசியல் தலைமையே காரணம்' - பாகிஸ்தானுடனான மோதலில் சில விமானங்களை இழந்ததாக ராணுவ அதிகாரி பேச்சு
கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல் குறித்து மீண்டும் தற்போது விவாதம் எழுந்துள்ளது. இந்தோனீசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள இந்திய தூதரகம் தான், தற்போது இந்த விவாதம் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்ததற்கு காரணம்.
இந்திய தூதரகத்தில் பணிபுரியும் ராணுவ அதிகாரி (Defence Attache) ஒருவர் பாகிஸ்தானில் இந்தியாவின் 'சிந்தூர் ஆபரேஷன்' நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிடிஐ செய்தி முகமையின்படி, ஜகார்தாவில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் ஆரம்பக்கட்டத்தில் "இந்திய விமானப் படை விமானங்களை இழந்தன என்றும் அரசியல் தலைமையிடம் இருந்து சில தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும்," கூறியதாக தகவல் வெளியானது.
அதன்பின், அவருடைய நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக, இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவாதம் தொடங்கியது எங்கே?
ஜகார்தாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் கடற்படை அதிகாரி கேப்டன் ஷிவ் குமார் பேசியதாக வீடியோ ஒன்று வெளியான நிலையில், இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை விவாதம் எழுந்தது.
ஜகார்தாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் 'இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போர் மற்றும் விமானப் படையில் இந்தோனீசியாவின் முன்னறிவிப்பு உத்திகள்' எனும் தலைப்பில் ஜூன் 10 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் அவர் கலந்துகொண்டார்.
இந்த கருத்தரங்கில் அவர் உரையாற்றுகையில், "அரசியல் தலைமை" உத்தரவிட்ட சில "கட்டுப்பாடுகள்" காரணமாக, ஆரம்ப கட்டத்தில் இந்திய விமானப்படையால் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்க முடியவில்லை என்று கூறியதாக தகவல் வெளியானது.
பிடிஐ செய்தி முகமையின்படி, "நாங்கள் சில விமானங்களை இழந்தோம், ராணுவ நிலைகள் அல்லது அவர்களின் (பாகிஸ்தானின்) வான் பாதுகாப்பு அமைப்புகளை தாக்க வேண்டாம் என, அரசியல் தலைமை கூறியதால் ஏற்பட்ட தடைகள் காரணமாக இது நிகழ்ந்தது." என அவர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
"ஆனால், விமானங்களை இழந்த பின் நாங்கள் எங்கள் உத்தியை மாற்றிக்கொண்டு, ராணுவ நிலைகளை நோக்கி முன்னேறினோம். பின், நாங்கள் எதிரியின் வான் பாதுகாப்பை அழித்தோம். அதனால்தான், தரை வாயிலாக தாக்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் பிuமோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி எங்களால் தாக்க முடிந்தது."
காங்கிரஸ் எழுப்பிய கேள்விகள்
இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் விவாதமும் எழுந்துள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் ராணுவ அதிகாரியின் கருத்து குறித்து ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது. விமானங்களை இழந்தது தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ள காங்கிரஸ், நாட்டை 'தவறாக வழிநடத்துவதாக' குற்றம் சாட்டியுள்ளது.
அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோதிக்கு மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளது காங்கிரஸ்.
அதில், முதல் கேள்வியாக, "எதிர்க்கட்சிகள் உண்மையை அறிந்துகொள்ளும் விதமாக பிரதமர் தன்னுடைய தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுப்பது ஏன்?' என காங்கிரஸ் கேட்டுள்ளது.
அடுத்ததாக, "இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் சிறப்பு அமர்வை நடத்துவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ஏன்" என கேள்வி எழுப்பியுள்ளது.
மூன்றாவது கேள்வியாக, "பிரதமர் மோதி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் நாட்டிடமிருந்து எதை மறைக்கின்றனர்?" என கேள்வியெழ்ப்பியுள்ளது.
ஒரு மாதத்துக்கு முன்பு சிங்கப்பூரில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌஹான், பாகிஸ்தானுடனான சமீபத்திய ராணுவ மோதல்களில், விமானத்தை இழந்த பின்னர், மேம்பட்ட உத்தியுடன் பாகிஸ்தான் பிரதேசத்துக்கு உள்ளே சென்று இந்தியா தாக்குதல் நடத்தியது.
எனினும், எத்தனை விமானங்கள், எந்த விதமான விமானங்களை இந்தியா இழந்தது என்ற தகவலை அனில் சௌஹான் கூறவில்லை.
இந்திய தூதரகம் கூறியது என்ன?
இந்த முழு சம்பவம் தொடர்பாக ஜகார்தாவில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மற்ற அண்டை நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் அரசியல் தலைவர்களின் கீழ் மட்டுமே செயல்படுகின்றன என்ற வாதத்தை அந்த அதிகாரி மேற்கோள் காட்டியதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
"ஒரு கருத்தரங்கில் ராணுவ அதிகாரி பேசியது தொடர்பாக சில செய்திகளை ஊடகங்களில் பார்த்தோம். அவரது அறிக்கை சூழலுக்கு மாறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் ஊடக செய்திகளில் அவரது வார்த்தைகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன" என்றும் தூதரகம் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
"இந்திய ஆயுதப்படைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தரவுகளின் கீழ் செயல்படுகின்றன, இது நமது சில அண்டை நாடுகளிலிருந்து வேறுபட்டது என்பதை அவருடைய உரை எடுத்துக்காட்டுகிறது."
"பயங்கரவாத மறைவிடங்களை குறிவைப்பதே ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் என்றும், இந்தியா எடுத்த நடவடிக்கை பதற்றங்களை அதிகரிக்கப் போவதில்லை என்றும் அந்த கருத்தரங்கில் விளக்கப்பட்டது."
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, மே 7 அன்று பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்தியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது, அதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிடப்பட்டது.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு, தீவிரவாதிகளின் மறைவிடங்களை மட்டுமே தாக்கியதாகவும், நிலைமையை மேலும் மோசமாக்க விரும்பவில்லை என்றும் இந்தியா பாகிஸ்தானிடம் தெரிவித்தது.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ மோதல் தொடங்கியது, இது மே 10 வரை நீடித்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு