இஸ்ரேல் - இரான் இடையே போர் மேகம் - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? காணொளி

காணொளிக் குறிப்பு, இஸ்ரேலின் நட்பு நாடுகள் இரானின் இந்த தாக்குதலை கண்டித்துள்ளன
இஸ்ரேல் - இரான் இடையே போர் மேகம் - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? காணொளி

இஸ்ரேல் மீது சரமாரியான ஏவுகணை தாக்குதலை இரான் தொடுத்துள்ளது. மொத்தம் 180 பேலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸ், ஹெஸ்பொலா தலைவர்களின் படுகொலைக்கான பதில் இது கூறியுள்ள இரான், தங்களுக்கு எதிராக மேற்கொண்டு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

மறுபுறம், ‘இரான் பெரிய தவறை செய்துவிட்டது என்றும் அதற்கான விலையை கொடுக்கும்’ என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் நட்பு நாடுகளும் இரானின் இந்த தாக்குதலை கண்டித்துள்ளன.

ஹெஸ்பொலாவை குறிவைப்பதாகக் கூறி, லெபனானில் கடந்த இருவாரங்களாக இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில், ஹெஸ்பொலா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஹசன் நஸ்ரல்லாவின் கொலைக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனேயி சூளுரைத்திருந்தார். ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் இரான் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில்தான், செவ்வாய்க்கிழமை இரவில் தொடர் ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் மீது இரான் தொடுத்துள்ளது. நடப்பாண்டில் இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது நிகழ்வாகும். சிரியாவில் இரானிய துணை தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறி கடந்த ஏப்ரல் மாதமும் இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

“முதன் முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தியதாகவும் இவற்றில் 90 சதவீதம் தங்களின் இலக்குகளை தாக்கியதாகவும்” இரானிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் என்பவை ஒலியை விட வேகமாக பயணிக்கும் திறன் பெற்றவை.

செவ்வாயன்று நடத்தப்பட்ட தாக்குதலில், 180 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இரான் பயன்படுத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. சில இடங்களில் சேதம் ஏற்பட்டதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். இஸ்ரேலின் மத்திய பகுதியிலும் தெற்கு பகுதியிலும் சில பாதிப்புகள் ஏற்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, கடந்த வெள்ளிக்கிழமை ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டதற்கும், பாலத்தீன, லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நியாயமான உரிமைகளின் அடிப்படையிலும் இரான் மற்றும் பிராந்தியத்திற்கான அமைதி மற்றும் பாதுகாப்பின் நோக்கத்துடன், சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்புக்கு ஒரு தீர்க்கமான பதில் கொடுக்கப்பட்டது. இரானின் நலன்களையும் குடிமக்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.”

இரான் போர்க் குணமிக்க நாடு அல்ல, ஆனால், எந்த அச்சுறுத்தலுக்கு எதிராகவும் இரான் உறுதியாக இருக்கும் என்பது நெதன்யாகுவுக்கு தெரியட்டும். இது எங்களின் வலிமையின் ஒரு பகுதி மட்டுமே. இரானுடம் மோதலில் ஈடுபட வேண்டாம்” என கூறியுள்ளார்.

மறுபுறம், இரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆற்றிய உரையில், இரான் இன்றைய இரவு மிகப்பெரிய தவறு செய்துவிட்டது, அதற்கான விலையை கொடுக்கும் என்றும் எங்களை தாக்குபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை தாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)