You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி20 கிரிக்கெட் போட்டியில் 10 ரன்களில் சுருண்ட அணி: இரண்டே பந்துகளில் எதிரணி வெற்றி
டி20 கிரிக்கெட் போட்டிகளில் உலகளவில் ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஓர் அணி வெறும் 10 ரன்களிலேயே முற்றிலுமாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்துள்ளது.
இது ஏதோ தெருக்களில் விளையாடும் இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டி அல்ல. ஒருபுறம் ஸ்பெயின் அணி விளையாடியது. அதற்கு எதிராக ஐல் ஆஃப் மேன் அணி விளையாடியது.
இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையே இருக்கும் ஒரு குட்டித் தீவுதான் ஐல் ஆஃப் மேன். ஆடவருக்கான சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ரன்களோடு ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை ஐல் ஆஃப் மேன் அணி படைத்துள்ளது.
இந்த அணி, ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்து 6 டி20 கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடியது.
இதில் 4 ஆட்டங்களை வென்று ஸ்பெயின் அணி ஏற்கெனவே தொடரைத் தன்வசப்படுத்தியிருந்தது. தொடரின் இரண்டாவது ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கடைசி போட்டி நடந்தது.
ஐல் ஆஃப் மேன் அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் 2004ஆம் ஆண்டு இணைந்தது. 2017 முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இணை உறுப்பினராக உள்ளது. இந்த அணி டி20 உலகக் கோப்பைக்கான ஐரோப்பிய துணை பிராந்திய தகுதிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்பெயினுக்கு எதிராக ஐல் ஆஃப் மேன் அணி விளையாடிய 6 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரின் கடைசி ஆட்டத்தில் அதன் செயல்திறன் மிகவும் மோசமாக இருந்தது.
முதலில் பேட்டிங் செய்த ஐல் ஆஃப் மேன் அணியின் பேட்ஸ்மேன்களை வெறும் 10 ரன்களில் மொத்தமாகச் சுருட்டியது ஸ்பெயின் அணி. டி20 வரலாற்றில் இதுவே மிகக் குறைந்த ஸ்கோர் கணக்கு.
இதற்கு முன்பு, குறைந்தபட்ச ஸ்கோர் கணக்கை சிட்னி தண்டர்ஸ் என்ற அணி எடுத்திருந்தது. 2022ஆம் ஆண்டு, அடிலெய்ட் ஸ்டிரைக்கர்களுக்கு எதிரான போட்டியில் சிட்னி தண்டர்ஸ் வெறும் 15 ரன்களையே எடுத்தது.
அதற்கு முன்பாக இந்த மோசமான ரெக்கார்ட் துருக்கி அணியின் பெயரில் இருந்தது. 2019ஆம் ஆண்டில், துருக்கி அணி செக் குடியரசுக்கு எதிராக 21 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இரண்டே பந்துகளில் வெற்றி பெற்ற ஸ்பெயின்
கார்டஜினா நகரில் ஸ்பெயின், ஐல் ஆஃப் மேன் ஆகிய இரு அணிகளும் கடந்த ஞாயிறு அன்று மோதின. முதலில் பேட் செய்த ஐல் ஆஃப் மேன், 8.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதிகபட்சமாக ஜோசஃப் பர்ரோஸ் 4 ரன்களை எடுத்தார். ஜார்ஜ் பர்ரோஸ், லூக் வார்ட், ஜேக்கப் பட்லர் ஆகியோர் தலா 2 ரன்களை எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே டக் அவுட் ஆனார்கள்.
ஸ்பெயின் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்களான அதிஃப் மஹ்மூத், முகமது கம்ரான் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதில் முகமது கம்ரானின் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும். அவர் வீசிய 3வது ஓவரில் இரண்டு ரன்களை எடுத்திருந்த லூக் வார்ட் விக்கெட்டை எடுத்ததோடு, ஹார்ட்மேன், எட்வர்ட் பியர்ட் ஆகியோரை டக் அவுட்டும் செய்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார்.
இதைத் தொடர்ந்து 11 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ஸ்பெயின் அணி, இரண்டே பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மூலம் வெற்றியை மிக எளிதாகக் கைப்பற்றியது.
ஸ்பெயினின் இன்னிங்ஸில் வீசப்பட்ட முதல் பந்து நோ பால் ஆனது. அதைத் தொடர்ந்து வீசப்பட்ட இரண்டு பந்துகளில், அவைஸ் அகமது இரண்டு சிக்சர்களை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன்மூலம் ஸ்பெயின் அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
“பாடம் கற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்”
போட்டிக்குப் பிறகு ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பேசிய ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் கோர் ரட்ஜர்ஸ், தனது வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு போட்டியைப் பார்த்ததில்லை எனக் கூறினார்.
கம்ரான், மஹ்மூத் பந்துவீச்சைப் பாராட்டினார்.
“கம்ரான், மஹ்மூத் இருவரும் நன்றாக ஆடுகிறார்கள்” எனக் கூறிய ரட்ஜர்ஸ், ஐல் ஆஃப் மேன் அணி தங்களுடைய கூட்டு முயற்சியை அதிகப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினார்.
மேலும், அவர்கள் இந்தத் தோல்வியால் ஏமாற்றமடைய மாட்டார்கள் என்றும் இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள் என்றும் தான் நம்புவதாக ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் ரட்ஜர்ஸ் தெரிவித்தார்.
இந்தத் தொடரில் ஞாயிறு அன்று நடந்த கடைசி போட்டிக்கு முந்தைய போட்டியில் ஐல் ஆஃப் மேன் அணி சிறப்பாக விளையாடியது. அதில், 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்களை எடுத்தது. ஸ்பெயின் அந்தப் போட்டியில் ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் 45 பந்து மீதமிருந்த நிலையில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்