You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டெர்லைட்: துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க திமுக அரசு மறுப்பது ஏன்?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்திய, அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு திமுக அரசு மறுப்பதால் சர்ச்சை உருவாகியுள்ளது.
2018-ஆம் ஆண்டு நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அன்றைய அதிமுக அரசின் மீது வலுவான எதிர்ப்பலைகளை உருவாக்கியது.
திமுகவும் அதனை தனக்கு சாதகமாக்கி, ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தது. அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் முன்வைத்து அதிமுகவை கடுமையாக சாடியது.
இருப்பினும், காவல் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் திமுக தலைமையிலான அரசு குழப்பமான நிலைப்பாட்டை எடுத்திருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்னோலின் தாயார் தொடுத்த வழக்கு
2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையினால் ஏற்பட்ட தீவிர சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் உடல்நல பாதிப்புகளையும் கண்டித்து, ஆலையை மூட வலியுறுத்தி நீண்ட போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தின் நூறாவது நாளில் (மே 22ம் தேதி) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது நிகழ்த்தப்பட்ட கடும் வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் குண்டுகள் பாய்ந்தும், ஒருவர் கூட்ட நெரிசலில் நெஞ்சில் மிதிப்பட்டும் உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் சிலரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் துப்பாக்கி குண்டுகள் மிக அருகிலிருந்து சுடப்பட்டதும், சிலருக்கு தலையில் சுடப்பட்டதும் தெரிய வந்தது. இந்தப்போராட்டத்தில் கலந்து கொண்ட 18வயது ஸ்னோலினின் என்ற பெண்ணின் தலையின் பின் பகுதியில் நுழைந்த குண்டு வாய்வழியாக வெளியே வந்ததை பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.
இந்த சம்பவத்துக்கு காரணமான காவல் அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் தாய் வனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.மேலும் அவர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.1 கோடியாக உயர்த்தி தரவும்,அரசு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அதனால் கிரிமினல் நடவடிக்கை கோரும் மனுவை தள்ளுபடி செய்ய கேட்டுக்கொண்டார். தமிழக அரசின் இந்த நிலைப்பாடு, துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
அருணா ஜெகதீசன் அறிக்கை சொல்வது
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலேயே நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது.
-துப்பாக்கிச்சூட்டுக்கான காரணங்கள், சூழல்கள் குறித்து கண்டறிதல்,
-சூழலுக்கு ஏற்ப தேவையான படைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டனவா, துப்பாக்கிச்சூட்டின் போது எல்லா விதிகளும் பின்பற்றப்பட்டனவா என கண்டறிதல்
-காவல் அதிகாரிகள் தரப்பில் அதிக பலம் பயன்படுத்தப்பட்டனவா, அப்படி இருந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை கூறுதல்
-இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் பரிந்துரைத்தல்
ஆகிய நான்கு நோக்கங்களை விசாரித்த ஆணையம் தனது இறுதி அறிக்கையை 2022 ஜூன் 6 அன்று அரசிடம் வழங்கியது.
அருணா ஜெகதீசன் அறிக்கை காவல் அதிகாரிகள் தேவையானதை விட அதிகமான பலத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று கண்டறிந்து கூறியது.
இந்த சம்பவத்துக்கு காரணமாக 17 காவல் அதிகாரிகளை பட்டியலிட்ட அருணா ஜெகதீசன் ஆணையம், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கையும் கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
மாவட்ட ஆட்சியர், மூன்று தாசில்தார்களை இந்த சம்பவத்துக்கு காரணமாக கண்டறிந்தது. அப்போதைய தென்மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ் மற்றும் டிஐ ஜி கபில்குமார் சி ஆகிய ஐ பி எஸ் அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், துணை கண்காணிப்பாளர் லிங்க திருமாறன், ஆய்வாளர்கள் திருமலை, ஹரிஹரன், பார்த்திபன் உள்ளிட்டோர் அருணா ஜெகதீசன் ஆணையத்தால் பட்டியிலிடப்பட்டிருந்தனர்.
மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் கொடுக்க பரிந்துரைத்தது.
'எல்லா பரிந்துரைகளையும் ஏற்பதற்கில்லை' - தமிழ்நாடு அரசு
அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளை முழுவதுமாக ஏற்கவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக அரசு.
காவல் அதிகாரிகள் தேவைக்கு அதிகமான பலத்தை அதிகமாக பயன்படுத்தினர் என்பதையும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் ஏற்கும்போதிலும், கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் ரூ.50 லட்சம் என்ற நிவாரணத் தொகையாக தரவேண்டும் என்பதையும் ஏற்பதற்கில்லை என வாதிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறும்போது "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், தீவிர காயமடைந்த 40 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், லேசாக காயமடைந்த 64 பேருக்கு தலா ரூ.1.5 லட்சமும் வழங்கப்பட்டன. உயிரிழந்த 18வயது ஸ்னோலினின் சகோதரன் ஜான்ராஜ் உட்பட 21 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மேலும் “சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகள் தவிர சம்பந்தப்பட்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்டு காவல் கட்டுப்பாட்டில் இருந்த 93 பேருக்கு தலா ஒரு லட்சம் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதியான பாரத்ராஜ், போராட்டத்தில் பங்கேற்றதற்காக காவலர்களால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். அந்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி உயிரிழந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கு 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேற்படிப்பு மேற்கொள்ள தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது” என தமிழக அரசு தான் எடுத்த நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் பட்டியலிட்டுள்ளது.
துறை ரீதியிலான நடவடிக்கைகள் போதுமா?
தவறு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளே போதும் என்ற நிலைப்பாட்டை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
“சிபிஐ இந்த விவகாரத்தில் இரண்டு ஆண்டுகள் விசாரணை செய்து ஒரே ஒரு காவலர் அதுவும் கீழ் நிலையில் உள்ள திருமலை என்ற டிஎஸ்பி மீது மட்டும் தான் குற்றம் சுமத்தியுள்ளது” என்கிறார் ஹென்றி திபேன்.
ஸ்னோலின் குடும்பத்தின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ரஜினி துறை ரீதியான நடவடிக்கைகள் கண் துடைப்பு மட்டுமே என்றார். “ஆணையத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சைலேஷ் குமார் யாதவ் ஐ பி எஸ், வழக்கமான பதவி உயர்வு பெற்றுள்ளார். இது எப்படி சாத்தியம்? யாரை ஏமாற்றுகிறார்கள்?” என்கிறார்.
தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில், “சிபிஐ எல்லா காவல் அதிகாரிகளையும் விசாரித்தது. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் வகையிலான அம்சங்களை சிபிஐ கண்டறியவில்லை (மேற்குறிப்பிட்ட நபர்கள் தவிர) . எக்ஸ்கியுடி மேஜிஸ்திரேட் உத்தரவின் படி தான் காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். எனவே அந்த வகையில் காவலர்களின் நடவடிக்கைகளை சிபிஐ ஏற்கெனவே நியாயப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு கிரிமினல் மற்றும் விதிமீறல் பார்வையிலிருந்து விலக்கு அளித்துள்ளது” என்று கூறுகிறது.
"தவறு செய்த அதிகாரிகள் மீது எப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும்? பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் கேட்கவில்லை, சட்டரீதியான நியாயம் கிடைக்க வேண்டுமல்லவா? " என்று பிபிசி தமிழிடம் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஸ்னோலின் தாயார் வனிதா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
‘‘கிரிமினல் நடவடிக்கை எடுக்க சிபிஐ பரிந்துரைக்கவில்லை என்று கூறுகிறார்கள். சிபிஐ என்பது யார்? அவர்கள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நிற்பவர்கள். போராடிய மக்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது சிபிஐ என்பது நினைவிருக்கட்டும். இதுவரை அரசால் அமைக்கப்பட்ட ஆணையங்கள் எல்லாமே அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. இந்த ஆணையம் உண்மையை கூறியதால் அதை ஏற்க மறுக்கிறார்கள். குண்டடிபட்டு தான் இறந்தார் ஸ்னோலின் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. இதை அரசு உட்பட யாரும் மறுக்கவில்லையே. இன்னும் வேறு என்ன வேண்டும்?" என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினி.
அதிகாரிகளை பாதுகாக்கிறதா அரசு?
தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை எடுத்த ஐந்து மாதங்களில் மூடிவிட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்ரி திபேன்.
அரசாங்கம் அதிகாரிகளையே நம்பியிருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார் அவர். ,"இந்த வழக்கை விசாரித்த சிபிஐ இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் ஒரே ஒரு காவலரை மட்டும் தான் குற்றம் புரிந்ததாக அடையாளம் கண்டது. அவரும் கீழ் நிலையில் உள்ள காவலர்தான். இந்த அரசு, அதிகாரிகளையே நம்பியிருப்பது துர்திருஷ்டவசமானது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை பாதுகாக்கிறது." என்றார்.
ஒரு முறை வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது கூட தெரியாமல், அறிக்கை இனிமே வெளி வரும் என்று கடந்த மாதம் நீதிமன்றத்தில் கூறியதை சுட்டிக்காட்டுகிறார் அவர்.
தவறு செய்த அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தமிழ்நாடு அரசாங்கம் கூறுகிறது.“தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்நிலையில், இது குறித்து மேலும் விசாரிக்க 2023ம் ஆண்டு மே மாதம் முதல் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் அறிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என்றும் கூறியது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐ பி எஸ் அதிகாரிகள் மீதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.
ஆனால், இந்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று விமர்சிக்கும் ஹென்றி திபேன், "2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போதும்,2021 ன் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போதும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம் என்று திமுக கூறியது. அந்த நடவடிக்கை எங்கே என்று தான் கேட்கிறோம்." என கேள்வியெழுப்பினார்.
‘‘13 உயிர்கள் பறி போகின. கடந்த ஆறு ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடல்லை. இனிமேலும் திறக்க விடமாட்டார் கடவுள். என் மகளை இழந்து நான் படும் வேதனை எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்" என்கிறார் ஸ்னோலின் தாயார் வனிதா.
இது குறித்து அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘இந்த விவகாரத்தில் தேவையான துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிலைப்பாடு அரசுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது’’ என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)