கடலில் தவறி விழுந்து தனியாக 26 மணிநேரம் தத்தளித்து உயிருடன் மீண்ட மீனவர் - காணொளி
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் எனும் கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சிவமுருகன்.
செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி, கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, நண்பர்கள் மற்றும் சகோதரர் என 16 பேருடன் ஒரு விசைப் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற சிவமுருகன், கடலில் தவறி விழுந்து, தத்தளித்து, 26 மணி நேரத்துக்கு பிறகே மீட்கப்பட்டார்.
"சிவமுருகன் காணாமல் போனது குறித்த தகவல் கிடைத்தவுடன், 'குளச்சல் மரைன் போலீஸ்' சார்பாக அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கூத்தன்குழி கிராம மீனவர்கள் சிலர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, அவரை மீட்டு, செப்டம்பர் 22 அதிகாலை கரைக்கு அழைத்துவந்தனர். பின்னர் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன" என 'குளச்சல் மரைன் போலீஸ்' அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தான் உயிர் பிழைத்த அனுபவத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார் சிவமுருகன்.
"என் கண் முன்னே, ஒரு கடல் மைல் தொலைவில் ( சுமார் 1.8 கிமீ) சில படகுகள் என்னைத் தேடிக்கொண்டிருந்தன. தொண்டைக்குள் கடல் நீர் சென்று, புண்ணாகி இருந்தது, உதவிகேட்டு கத்த முடியவில்லை. அமாவாசை இரவில், கடல் நீரிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு நான் தவிப்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை. சில மணி நேரத்தில் அந்த படகுகள் கரைக்கு திரும்பிச் சென்றன. நான் அங்கேயே மிதந்து கொண்டிருந்தேன்" என பிபிசி தமிழிடம் அன்று நடந்ததை விவரித்தார் சிவமுருகன்.
"அந்த இரவில் சுற்றி எந்த வெளிச்சமும் இல்லாத அந்த நடுக்கடலில் மிதந்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் இருந்த ஒரே எண்ணம், எப்படியாவது கரைக்கு சென்றுவிட வேண்டும், உயிர் இங்கேயே போய்விட்டால், குடும்பம் என்னவாகுமென்று கவலை. நீரில் எளிதாக மிதக்கும் வகையில், எடையைக் குறைக்க அணிந்திருந்த டி-ஷர்டை கழற்றி எறிந்தேன். அப்போது தான் உடலெங்கும் ஏதோ ஒன்று கடிக்கத் தொடங்கியது" என்று கூறிய அவர் தொடர்ந்து பேசினார்.
"புழுக்களைப் போன்ற ஜெல்லி மீன்கள் அவை. உடலில் ஒட்டிக்கொள்ளும், கொஞ்சம் விட்டால் தோலில் துளை போட்டு விடும் என ஊரில் சிலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்தேன். தொடர்ந்து கை, கால்களை அசைத்து மிதந்து கொண்டே இருந்ததால், உடல் சோர்வடையத் தொடங்கியது. சில சமயங்களில் நீரில் மூழ்கினாலும், தன்னிச்சையாக நீச்சல் அடித்து மேலே வந்துவிடுவேன். மறுநாள் காலை (செப்டம்பர் 21) சூரியனைக் கண்டதும், எப்படியும் நீந்தி கரையை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்தது." என்கிறார்.
கரையைத் தேடி நீந்தத் தொடங்கிய அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. எந்தத் திசையில் நீந்தினாலும் கடல் அலைகள் மற்றும் காற்று அவரை வேறு திசையில் தள்ளியது. பிடிப்பதற்கு ஒரு கட்டை கூட கண்ணில் தென்படாத நிலையில், அலைகளால் அங்குமிங்கும் வீசப்பட்ட அவர், நீந்தும் முயற்சியைக் கைவிட்டார்.
"எப்படி நீந்தினாலும் ஒரே இடத்தில் தான் இருக்கிறேன் என்று தோன்றியது. பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. குளிரில் கால்கள் மரத்துப் போயிருந்தன. சூரிய அஸ்தமனம் முடிந்து, இருள் சூழத் தொடங்கியதுபோது, உடலில் இருந்த தெம்பும், மன தைரியமும் மொத்தமாக போயிருந்தது. தென்கடலில் காணாமல் போன யாரும் பிழைக்க மாட்டார்கள் என ஏன் சொல்கிறார்கள் எனப் புரிந்தது. அப்போது எனக்கு தெரியாத ஒன்று, ஊருக்குள் நான் இறந்துவிட்டேன் என அறிவித்திருந்தார்கள், என் உடலாவது கிடைக்காதா என குடும்பத்தினர் அழுது கொண்டிருந்தார்கள் என்பது" என்றார்.
முழு விவரம் காணொளியில்....
(தற்கொலை எண்ணங்கள், மன சோர்வு உள்ளிட்டவை இருந்தால் தமிழக அரசின் 104 என்ற இலவச உதவி எண்ணை அழைத்து ஆலோசனைகளும், உதவியும் பெறலாம்
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



