காணொளி: இரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேலுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா?
இரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்கள் வளைகுடா நாடுகளின் தலைநகரங்கள் மற்றும் நகரங்களை தாக்கியுள்ளன. அவை விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு மட்டுமல்லாமல் பிராந்திய மோதல்களிலிருந்து பாதுகாப்பான, அமைதியான இடங்களாக கவனமாக கட்டமைத்த பிம்பத்திற்கும் பலத்த அடியை ஏற்படுத்தியுள்ளன.
அதைவிட முக்கியமாக, இந்த தாக்குதல்கள் இரானின் அண்டை நாடுகளை கடினமான தேர்வை எதிர்கொள்ள செய்கின்றன. ஒன்று திருப்பித் தாக்குவது, ஆனால் அது இஸ்ரேலின் போரில் இணைந்ததாக பார்க்கப்படும் அபாயம் உள்ளது. இரண்டாவது, தங்கள் நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளானாலும் எதையும் செய்யாமல் இருப்பது.
அமெரிக்கா–இரான் இடையே ஓமன் முன்னெடுத்த மறைமுக பேச்சுவார்த்தை உட்பட தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், முதல் தாக்குதல்களுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பே ஒரு விஷயம் தெளிவாக இருந்தது. இரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலில் தாக்குதல் தவிர்க்க முடியாதது என்பதே அது.
தெஹ்ரானை முதல் ஏவுகணை தாக்கியதுமே, அதனால் ஏற்படும் ஒரு தாக்கம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக இருந்தது.
வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு அமைப்பு அங்கிருக்கும் முக்கிய அமெரிக்க ராணுவ தளங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. கத்தாரில் உள்ள அல் உதெய்த் தளம், பஹ்ரைனில் உள்ள ஐந்தாவது கடற்படை பிரிவு, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியாவில் உள்ள விமானப்படை தளங்கள் இதில் அடங்கும். பாதுகாப்பு கவசமாக திட்டமிடப்பட்ட இந்த கட்டமைப்பு, தாக்குதலுக்கான முக்கிய இலக்காகவும் மாறக்கூடும். கடந்த சில நாட்களில் நாம் பார்த்தது போல.
இரான் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் வளைகுடா நாடுகள், தற்போது எதிர்கொள்ளும் கேள்வி தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதா அல்லது கொடுக்காமல் இருப்பதா?
இரானுக்கு எதிராக வளைகுடா நாடுகள் தாக்குதல் நடத்தினால், அது அவர்களின் சொந்த மக்களாலும் பிராந்தியத்தின் பிற நாடுகளாலும் இஸ்ரேலுடன் சேர்ந்து சண்டையிடுவதாக கருதப்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக காஸா விவகாரம் பொதுமக்களின் உணர்வுகளை அதிகம் பாதித்திருக்கும் இந்த சமயத்தில்…
"ஏற்கனவே அக்டோபர் 7-க்கு பிறகு வளைகுடா நாடுகளின் பிம்பம் பாதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது பஹ்ரைன் போன்ற சில நாடுகள் இஸ்ரேலுடன் ராஜிய உறவுகளை வைத்திருந்தாலும், காஸாவில் நடைபெறும் பெரிய அளவிலான கொலைகளை நிறுத்துவதற்கோ அல்லது அங்கு உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்கோ இஸ்ரேலுக்கு தீவிர அழுத்தம் கொடுக்கவில்லை. இப்போது இந்த நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து இரானுக்கு எதிரான போரில் ஈடுபட்டால், அது நீண்டகால பிரச்னைகளை உருவாக்கும்" என்கிறார் இரான் திட்ட இயக்குநர் (சர்வதேச நெருக்கடி குழு) அலி வயேஸ்.
இதனால் தான் சமீபத்திய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் கூட்டத்தில் வளைகுடா தலைவர்கள், அவர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் முழுமையாக தற்காப்புக்காக மட்டுமே இருக்கும் என்றும், இஸ்ரேலின் போரில் பங்கேற்பதாக இருக்காது என்றும் வலியுறுத்தினர்.
ஆனால் விமான நிலையங்கள், அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் முக்கிய இடங்கள் தாக்குதலுக்குள்ளாகும் போது அமைதியாக இருப்பதற்கும் அந்த நாடுகள் விலை கொடுக்க வேண்டி இருக்கும்.
வளைகுடா நாடுகளுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பு உள்ளது. Unified Military Command எனப்படும் இந்த அமைப்பு முன்பு Peninsula Shield Force என அழைக்கப்பட்டது. பொதுவான அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்க உருவாக்கப்பட்ட இந்த அமைப்பை இரானுக்கு எதிரான தாக்குதலுக்கு பயன்படுத்துவது கூட்டமைப்பில் பிரிவை ஏற்படுத்துவதாகவும், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தவிர்க்க விரும்பும் போரை விரிவுபடுத்துவதாகவும் அமையலாம்.
"இரண்டு சாத்தியமான காரணங்கள் வளைகுடா நாடுகளை தற்காப்பு நிலைப்பாட்டிலிருந்து தாக்குதல் நிலைக்கு மாறச்செய்யலாம். முதலில், பெருமளவு உயிரிழப்புகள் நிகழும் சம்பவம். இதுவரை இரான் பெரும்பாலும் இந்த நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துகள் மற்றும் பணியாளர்களை மட்டுமே குறிவைத்துள்ளது. அது மாறினால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பக்கம் சேர்ந்து போரில் ஈடுபட வேண்டிய அழுத்தம் வளைகுடா தலைவர்கள் மீது உருவாகும்" என்கிறார் அலி வயேஸ்.
"இரண்டாவதாக, இரான் திட்டமிட்டு எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்தால் நிலைமை மாறும். இதுவரை ஆங்காங்கே சில தாக்குதல்கள் நடந்துள்ளன, ஆனால் அவை எதுவும் அந்த நாடுகளின் எரிசக்தி உற்பத்தியை முடக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதாக தெரியவில்லை. ஒருவேளை அது நடந்தால், அது போரின் போக்கையே மாற்றக்கூடிய முக்கிய காரணியாக அமையும்."
இதற்கு பதிலாக வளைகுடா நாடுகள் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. ரேடார் தரவுகளை பகிர்வது, ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்துவது, வான்வெளி கட்டுப்பாட்டை ஒருங்கிணைப்பது , நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட அமெரிக்கா–வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் முன்னெச்சரிக்கை போன்றவை இதில் அடங்கும். தற்போதைக்கு இது கூட்டுப்பாதுகாப்பே தவிர, கூட்டுப்பதிலடி அல்ல.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் அவசர கூட்டங்கள், ஆதரவு அறிக்கைகள் என ஒருங்கிணைந்த ராஜீய முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர். 2025ஆம் ஆண்டு இரான் கத்தாரில் உள்ள ஒரு தளத்தை தாக்கியபோது இந்த அமைப்பு இதே போன்ற முறைகளை பயன்படுத்தியது.
ஆனால் வளைகுடா நகரங்களுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி மிகவும் தீவிரமாக உள்ளது. இந்த நாடுகள் தங்களை உலகளாவிய வர்த்தகம் மற்றும் பயணத்திற்கான பாதுகாப்பான, நம்பகமான மையங்களாக உருவாக்கியிருந்தன. தற்போது வெடிப்பினாலும், ஏவுகணை தாக்குதல்களால் அந்த பிம்பம் அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளது.
வளைகுடா நாடுகள் இந்தப் போரிலிருந்து விலகி இருக்கத் தீவிரமாக முயற்சி செய்கின்றன. ஆனால், அவர்களின் கட்டுப்பாடுக்கும் பாதிப்புக்கும் இடையிலான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது.
"வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை, அவை இந்த முயற்சியில் இணைந்து 92 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அண்டை நாடான இரானை வலுவிழந்த நாடாக மாற்றினால், அது தீவிரவாதம், அகதிகள் மற்றும் நிலையற்ற தன்மை போன்ற விளைவுகளை தான் ஏற்படுத்தும். அது அவர்களுக்கு விரும்பத்தகாத செயல்முறையாக இருக்கும்." என்கிறார் இரான் திட்ட இயக்குநர் (சர்வதேச நெருக்கடி குழு) அலி வயேஸ்.
"மறுபுறம், தங்களுக்கு எதிராக இவ்வளவு தாக்குதலை நடத்திய இஸ்லாமியக் குடியரசுடன் அண்டை நாடக வாழ வேண்டிய நிலையும் அவர்களுக்கு மிக சிரமமான முடிவாக இருக்கும்."
"எனவே, வளைகுடா நாடுகளுக்கு இதில் எந்தப் பக்கமும் சாதகமான சூழல் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளனர்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



