சென்னை: திருடு போன ரூ.23 கோடி வைரக்கல்லை மீட்டு போலியை கொடுத்ததா போலீஸ்? இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
இன்றைய (17/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
நட்சத்திர ஓட்டலில் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட ரூ.23 கோடி வைரக் கல்லுக்கு பதிலாக, போலீஸார் போலி வைரத்தை கொடுத்துவிட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாபாரி புகார் அளித்துள்ளதாக தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், " சென்னை அண்ணாநகர் 17-வது தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (70). பிரபல வைர வியாபாரியான இவர் பழமையான வைரக்கல் ஒன்றை நண்பரான மற்றொரு வியாபாரியிடம் பெற்று வைத்திருந்தார். அந்த வைரக்கல்லை ரூ.23 கோடிக்கு விற்பதற்கு 4 முகவர்களிடம் பேரம் பேசினார்.
வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து வைரக்கல்லை வாங்குவதற்கு வந்திருந்த 4 முகவர்களும் திடீரென கொள்ளையர்களாக மாறி வைர வியாபாரி சந்திரசேகரை தாக்கி, ஓர் அறையில் கட்டிப்போட்டுவிட்டு வைரக்கல்லை கொள்ளையடித்து தப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக வடபழனி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
வைரக்கல்லை கொள்ளையடித்த பரமக்குடியை சேர்ந்த அருண் பாண்டியராஜன், சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்த ஜான் லாயிட், வளசரவாக்கத்தை சேர்ந்த விஜய், திருவேற்காட்டையை சேர்ந்த ரத்தீஷ் ஆகிய 4 பேரும் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களிடமிருந்து வைரக்கல் மீட்கப்பட்டது.
இந்நிலையில் வைர வியாபாரி சந்திரசேகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், ``கொள்ளையர்களிடமிருந்து போலீஸார் மீட்டுத் தந்த வைரக்கல் உண்மையானது இல்லை; அது போலியானது" என்று புகார் அளித்துள்ளார். வைரக்கல்லை மீட்ட வடபழனி போலீஸார் கூறும்போது, ``கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட வைரக்கல்லை நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டோம். சந்திரசேகர் கொடுத்துள்ள புகாரில் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை'' என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், சந்திரசேகர் சொல்வது உண்மையா அல்லது பொய்யா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சந்திரசேகருக்கு இந்த வைரக்கல்லை கொடுத்தது மதுரையை சேர்ந்த அவரது நண்பர். அவரிடம் விசாரித்தால் உண்மை தெரியும் என்பதால் அவரிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆப்கனில் தாலிபன் அரசை நெருங்கும் இந்தியா - பாகிஸ்தானுக்கு நெருக்கடி தர புதிய வியூகமா?
- இந்தியாவின் பிரம்மாஸ்திரம் பிரம்மோஸ் - எப்படி உருவானது? என்னவெல்லாம் செய்ய முடியும்?
- ஆளுநர் விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாதிக்குமா குடியரசுத் தலைவரின் கேள்வி?
- தங்கம் விலை உயர்வு எவ்வளவு நாள் நீடிக்கும்? இப்போது முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

மத்திய அமைச்சராகி கூண்டுக்கிளியாக விரும்பவில்லை : அண்ணாமலை

பட மூலாதாரம், X/@annamalai_k
மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று கூண்டுக்கிளியாக இருக்க விருப்பமில்லை, தற்போது வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாக தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், " திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்த அண்ணாமலை, செய்தியாளர்களிடம் பேசும் போது, "இப்போது புத்தகங்கள் படிப்பதற்கும் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவதற்கும் நேரம் கிடைத்துள்ளது. தற்போது வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். தமிழகத்தில் மாற்றம் வேண்டுமென்று நினைக்கிறேன். மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்கிறீர்கள். என்னை ஏன் கூண்டுக்குள் அடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. நான் சாமானிய மனிதராக இருப்பதையே ஒரு பவராக பார்க்கிறேன். எனக்கு பவரெல்லாம் தேவையில்லை. நான் சுதந்திரமாக இருக்கிறேன்.
நான் கூறிய கூண்டுக்கிளி விவகாரத்தை விவாதமாக்க வேண்டாம். நான் எனக்காகப் பேசுகிறேன். நீங்கள் உங்களுக்காகக் கேட்கிறீர்கள். நான் கூண்டுக்கிளி என்று சொன்னதை மற்ற அமைச்சர்களுடன் ஏன்? ஒப்பிட்டுச் சுட்டிக்காட்டுகிறீர்கள். நான் தற்போது தந்தையாகவும் மகனாகவும் இருக்க விரும்புகிறேன். என்னை ஏன் அடைத்து வைக்கப் பார்க்கிறீர்கள் என்றுதான் தெரிவித்தேன்" என்றார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் அமலாக்கத்துறை விசாரணை

பட மூலாதாரம், தி டைம்ஸ் ஆப் இந்தியா
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரான ஐ ஏ எஸ் அதிகாரி எஸ் விசாகனிடம் அமலாக்கத்துறை குறித்து நேற்று விசாரணை நடத்தியதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "சந்தேகப்படும்படியான நிதி முறைகேடுகள் குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரை நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு கூட்டிச் சென்று அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சோதனைகள் நடத்தப்பட்டன.
விசாகனுக்கு இரண்டு முறை சம்மன் அளித்தும் அவர் நேரில் ஆஜராகவில்லை என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலை ஆறு மணிக்கு தொடங்கிய சோதனைகள் சென்னையில் பத்து வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை குழுவினர் பெசண்ட் நகர், சூளைமேடு, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் சில தொழிலதிபர்களின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களிலும் சோதனை நடத்தினர். தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவருக்கும் நடைபெற்று வரும் விசாரணைக்கும் என்ன சம்பந்தம் என்பதை அமலாக்கத்துறையினர் தெரிவிக்கவில்லை.
மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் சோதனை நடத்தப்பட்டது. மதுபான தயாரிப்பாளர்களிடமிருந்து பெறப்படும் பாட்டில்களுக்கான அதிக விலை மூலம் சட்டவிரோத முறையில் பணம் ஈட்டப்பட்டு ரூ.1000 கோடி அளவில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என சந்தேகப்படுவதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இந்த சோதனைகள் சட்டவிரோதமானவை என்று டாஸ்மாக் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 5730 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர் - தமிழக அரசு

பட மூலாதாரம், தினமணி
இந்த ஆண்டு 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "முதல்கட்டமாக சென்ற 402 போ் சென்னையிலிருந்து புறப்பட்டனர். அவர்களை வழியனுப்பும் நிகழ்வு சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சா் சா.மு.நாசா் செய்தியாளா்களிடம் பேசும் போது, இந்த ஆண்டு தமிழகத்தைச் சோ்ந்த 5,730 போ் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனா். இதில், 5,407 போ் சென்னை விமான நிலையத்தில் இருந்தும் மீதமுள்ள 323 போ் வெளிமாநிலங்களில் இருந்தும் செல்கின்றனா். மே 30-ம் தேதி வரை ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில், 200 பேருக்கு ஒருவா் என்ற விகிதத்தில் ஒரு வழிகாட்டி நியமிக்கப்பட்டுள்ளனா். அரசு ஒவ்வொரு நபருக்கும் ரூ.25,000 மானியமாக வழங்குகிறது. இதற்காக நிகழாண்டு மட்டும் ரூ.14, 21,75,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவா் பி.அப்துல் சமது, வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினரும், தென் மண்டல ஹஜ் கமிட்டி உறுப்பினருமான அசன் மௌலானா, சிறுபான்மையினா் நலத்துறையின் முதன்மைச் செயலா் விஜயராஜ்குமாா், நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக வஃக்ப் வாரிய தலைவருமான நவாஸ் கனி, சிறுபான்மையினா் நலவாரிய துணைத் தலைவா் இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை : உள்ளாட்சி மன்றங்களில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க ஆலோசனை

பட மூலாதாரம், Suresh Premachandran
இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு இடமளிக்காமல் தவிர்க்க, தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் சந்தித்து கலந்துரையாடின என்று வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், " உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி வடக்கு, கிழக்கில் 35 சபைகளில் முதல்நிலை பெற்றுள்ள நிலையில், அச்சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு தார்மீக அடிப்படையில் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒத்துழைக்கவேண்டுமென கட்சியின் அரசியல்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து ஆராயும் சந்திப்பு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையில் வெள்ளிக்கிழமை யாழ். கந்தரோடைரையில் அமைந்துள்ள சித்தார்த்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வேந்தன் ஆகியோரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் செல்வராஜா கஜேந்திரன், காண்டீபன் மற்றும் தீபன் திலிஷன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகள், இணைந்து பயணிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும், இருப்பினும் தமது இரு கட்சிகளும் இணையும் பட்சத்தில் ஒருசில உள்ளுராட்சி சபைகளில் மாத்திரமே ஆட்சி அமைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினர்.
அதேவேளை வட, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்க் கட்சிகளே ஆட்சி அமைக்க வேண்டும் எனவும், அச்சபைகள் குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் வசம் செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் இச்சந்திப்பின்போது இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












