ரோஹித்துக்கு இணையாக சிறந்த தொடக்க வீரராக ஜொலித்த ஷிகர் தவண் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

“ 2005 சேலஞ்சர்ஸ் கோப்பையில் இருவருமே ரன்கள் குவித்துள்ளோம். இந்திய அணியில் என்னை வெளிப்படுத்திக் கொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், ஷிகர் வாழ்க்கையில் ஏராளமான ஏற்ற, இறக்கங்கள் வந்தன. இருப்பினும் பேட்டிங்கில் அவரின் நிலைத்தன்மை மாறவில்லை. வீரேந்திர சேவாக், கம்பீர், சச்சின் போன்று தொடக்க வீரராக ஜொலிப்பது சற்று கடினம்தான். இறுதியாக தவணுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவர் நிச்சயம் பெரிய தொடக்க ஆட்டக்காரராக வருவார் என நம்புகிறேன்”

ஷிகர் தவண் குறித்து இவ்வாறு நம்பிக்கை மிகுந்த வார்த்தைகளை பேசியது கூல்கேப்டன் மகேந்திர சிங் தோனிதான். தோனியின் வார்த்தைகளுக்கு ஏற்ப ஷிகர் தவண், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி ரசிகர்களால் “மிஸ்டர் ஐசிசி”, “கப்பார் சிங்” என பாராட்டப்பட்டார்.

இந்திய அணியில் ஒரு தசாப்தமாக கோலோச்சிய பேட்டர் ஷிகர் தவணுக்கு, கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக 2022, டிசம்பரில் சிட்டகாங்கில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் தவண் இந்திய அணியில் விளையாடினார். இதன்பின் இந்திய அணியில் சேர்க்கப்படாத நிலையில், அவர் திடீரென ஓய்வை அறிவித்துள்ளார்.

சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் தவண் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒரு தசாப்தமாக கோலோச்சியவர்

இந்திய அணிக்குள் 2010ம் ஆண்டு முதல் ஒரு தசாப்த ஆண்டுகளுக்கு ஷிகர் தவண் தொடக்க பேட்டராக சிறப்பாக ஆடினார். ஷிகர் தவண் தனியாளாக களத்தில் நின்று பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றித் தேடித் தந்துள்ளார்.

குறிப்பாக 2013ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு ஷிகர் தவணின் பேட்டிங் முக்கியக் காரணமாக இருந்தது. அந்தத் தொடரில் தவண் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

2 தங்க பேட் வென்றவர்

2015ம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன் சேர்த்த பேட்டராக ஷிகர் தவண் ஜொலித்தார். 2013, 2017ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அதிக ரன் சேர்த்த பேட்டருக்கு வழங்கப்படும் தங்க பேட் விருதையும் ஷிகர் தவண் பெற்றார். இருமுறை தொடர்ச்சியாக தங்க பேட் பெற்ற ஒரே வீரரும் ஷிகர் தவண் மட்டும்தான்.

உள்நாட்டு தொடர்களில் திறமையை நிரூபித்து இந்திய அணிக்குள் ஷிகர் தவண் இடம் பிடித்தார். அணியில் தனக்குரிய இடத்தைப் பிடித்த தொடக்கத்தில் சற்று தடுமாறிய தவண், பின்னர் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராகக் களமிறங்கி உலக அணிகளுக்கு மிரட்டலாக இருந்தார்.

சச்சின், கங்குலிக்கு அடுத்தபடியாக...

சச்சின் - கங்குலிக்கு ஜோடிக்கு அடுத்தார்போல் இந்திய அணியில் வெற்றிகரமான தொடக்க ஜோடியாக ரோஹித் சர்மா - ஷிகர் தவண் ஜொலித்தனர். இருவரும் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கி 115 இன்னிங்ஸ்களில் 5148 ரன்களைக் குவித்துள்ளனர். 18 சத பார்ட்னர்ஷிப்களையும் இருவரும் விளாசியுள்ளனர், உலக கிரிக்கெட்டில் அதிகமான பார்ட்னர்ஷிப் வைத்த 4வது ஜோடி என்ற பெருமையையும் இருவரும் பெற்றனர்.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் சேவாக் - கம்பீர் சகாப்தம் முடிந்தவுடன் ரோஹித் - தவண் சகாப்தம் தொடங்கியது. சேவாக், சச்சின், கம்பீருக்கு அடுத்தார்போல் அடுத்த சிறந்த தொடக்க ஜோடியை இந்திய அணி தேடிய நிலையில் ரோஹித் - தவண் ஜோடி அதனை பூர்த்தி செய்தது.

சவாலான அறிமுகம்

ஷிகர் தவணின் சர்வதேச அறிமுகமே சவாலாக இருந்தது. டெஸ்ட்(2013) மற்றும் ஒருநாள் போட்டியில்(2010) வலிமை மிகுந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தவண் அறிமுகமானார். இதில் 2013ம் ஆண்டு மொஹாலியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 85 பந்துகளில் சதம் அடித்து, 44 ஆண்டுகளாக குண்டப்பா விஸ்வநாத் வைத்திருந்த சாதனையை தவண் முறியடித்தார். அந்த போட்டியில் தவண் 187 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்த அறிமுக டெஸ்ட்தான் தவணின் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

தவிர்க்க முடியாத வீரர்

அதன்பின் இந்திய அணியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தவிர்க்க முடியாத வீரராக தவண் இருந்தார். குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2014 ஆசியக் கோப்பை, 2015 ஐசிசி உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2018 ஆசியக் கோப்பை ஆகியவற்றில் தவணின் பேட்டிங் மிரட்டலாக இருந்தது.

இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தவண் 7 சதங்கள் உள்பட 2,315 ரன்களும், 167 ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள்,39 அரைசதங்கள் உள்பட 6,793 ரன்களும் குவித்துள்ளார். 68 டி20 போட்டிகளில் பங்கேற்ற தவண், 11 அரைசதங்கள் உள்பட 1759 ரன்களையும் சேர்த்துள்ளார்.

2010ம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமான தவண், 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து, 40 ரன்கள் சராசரி, 90க்கும் அதிகமாக ஸ்ட்ரைக் ரேட் வைத்த உலகின் 8 பேட்டர்களில் தவணும் ஒருவர்.

ஷிகர் தவணின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2013ம் ஆண்டுதான் உச்சமாக இருந்தது. 2013ம் ஆண்டில் 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தவண் 5 சதங்கள் உள்பட 1,162 ரன்கள் குவித்து, 50 ரன்கள் சராசரியும் 97 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். அதிலும் 5 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் உள்பட 363 ரன்களை தவண் குவித்தார்.

அது மட்டுமல்ல, டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்பாக சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற பெருமையும் தவணையே சேரும். 2021ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்பாகவே தவண் சதம் அடித்து சாதனை படைத்தார்.

இளமை வாழ்க்கை

டெல்லியில் 1985ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி பஞ்சாபி குடும்பத்தில் ஷிகர் தவண் பிறந்தார். இவரின் பெற்றோர் சுனைனா மற்றும் பால் தவண். டெல்லியில் உள்ள புனித மார்க் சீனியர் மேல்நிலைப் பள்ளியில் தவண் பள்ளிப்படிப்பை முடித்தார். தனது 12 வயதில் தவண் கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கினார்.

மூத்த பயிற்சியாளர் தாரக் சின்ஹா தலைமையில் தவணுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டது. தாரக் சின்ஹா 12 சர்வதேச கிரிக்கெட் வீரர்களை தனது பயிற்சியில் உருவாக்கியவர் என்பதால் அவரிடம் தவண் சேர்க்கப்பட்டார். தொடக்கத்தில் தவணின் உடல்வாகு, திறமையைப் பார்த்து விக்கெட் கீப்பராக பயிற்சி அளிக்கப்பட்டது. அவரும் விக்கெட் கீப்பராகவே பயிற்சி எடுத்து, பின்னர் முழுநேர பேட்டராக மாறினார்.

பேட்டிங் ஸ்டைல்

டெல்லியிலிருந்து இந்திய அணிக்குள் வந்த முக்கியமான பேட்டர்களில் ஷிகர் தவண் முக்கியமானவர். இடது கை பேட்டரான தவண், பேட் செய்யும் விதமே அலாதியானது. பேட்டை தூக்கி, முதுகை நிமிர்த்தி நின்றுதான் தவண் எந்த பந்தையும் எதிர்கொள்வார்.

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் லேன்ஸ் க்ளூஸ்னர் ஸ்டைலில் பேட்டை ஸ்டெம்புக்கு உயரே தூக்கிவைத்து தவண் பேட்டிங் செய்யும் பாணியை கடைசிவரை கடைபிடித்தார். இதனால் பவுன்ஸர் பந்துகளையும், கவர் ட்ரைவ் ஷாட்களையும் எளிதாக தவணால் ஆட முடிந்தது.

கிரிக்கெட் வாழ்க்கை

16 வயதுக்குட்பட்டோருக்கான அணி, 19வயதுக்குட்பட்டோருக்கான அணிகளில் இடம் பெற்று கிரிக்கெட் விளையாடி படிப்படியாக ஷிகர் தவண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். டெல்லி அணிக்காக கூச் பிகார் கோப்பை, விஜய் மெர்சன்ட் கோப்பை ஆகியவற்றில் தவணின் சதங்கள் அவரை திரும்பிப் பார்க்கச் செய்தன.

2004ம் ஆண்டு 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் ஷிகர் தவண் இந்திய அணியில் அதிக ரன் சேர்த்த பேட்டராக திகழ்ந்தார். இந்தத் தொடரில் தவண் 505 ரன்களைக் குவித்தார்.

2004ம் ஆண்டு முதல் டெல்லி அணிக்காக முதல் தரப் போட்டிகளிலும், ரஞ்சி சீசனிலும் ஷிகர் தவண் ஆடத் தொடங்கினார். ரஞ்சி சீசனில் அறிமுகப் போட்டியில் 49 ரன்கள் அடித்த தவண் அந்த சீசனில் 6 போட்டிகளில் 461 ரன்கள் குவித்தார். 122 முதல் தரப் போட்டிகளில் ஆடிய தவண் 25 சதங்கள், 29 அரைசதங்கள் உள்பட 8499 ரன்களையும், 302 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 30 சதங்கள், 67 அரைசதங்கள் உள்பட 12074ரன்களையும் சேர்த்துள்ளார்.

2007-08ம் ஆண்டு ரஞ்சி சீசனில் டெல்லி அணி சாம்பியன் பட்டம் வென்றதில் ஷிகர் தவணின் பேட்டிங் முக்கியப் பங்காற்றியது. அந்த சீசனில் மட்டும் தவண் 8 போட்டிகளில் 570 ரன்கள் குவித்திருந்தார். உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தனது பேட்டிங் ஃபார்மை நிரூபித்து இந்திய அணிக்குள் தவண் இடம் பெற்றார்.

இந்திய அணியில் இடம் பெற்ற நிலையிலும், எப்போதெல்லாம் தனது பேட்டிங் ஃபார்மில் தொய்வு ஏற்படுகிறதோ அப்போது தன்னை அணியிலிருந்து விடுவித்து, உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி தனது ஃபார்மை மெருகேற்றுவதை தவண் வழக்கமாக வைத்திருந்தார்.

இந்திய அணிக்குள் அறிமுகம்

உள்நாட்டுப் போட்டிகளில் ஷிகர் தவணின் ஆட்டத்தைப் பார்த்து 2010ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் விளையாட தவணுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விசாகப்பட்டிணத்தில் களமிறங்கிய தவண், பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. அதைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணித்த இந்திய அணியிலும் தவண் இடம் பெற்றாலும், அதிலும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.

2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் ஷிகர் தவணின் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது. சேவாக், முரளி விஜய், தவண் மூவரும் இந்திய அணியில் டெஸ்ட் தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் சேவாக் மோசமாக ஆடவே, மொஹாலியில் நடந்த 3வது டெஸ்டில் விளையாட தவணுக்கு வாய்ப்புக் கிடைத்து அறிமுகமானார். முதல் போட்டியிலேயே தவண் 85 பந்துகளில் சதம் அடித்தார். அந்த ஆட்டத்தில் அவர் 187 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டிக்குப் பின் இந்திய அணியில் தவிர்க்க முடியாத பேட்டராக தவண் உருவெடுத்தார். அவ்வப்போது சில போட்டிகளில் ஃபார்மின்றி தவண் தவித்தாலும் தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இந்திய அணியில் தனக்குரிய இடத்தை தவண் தக்கவைத்தார். 2017ம் ஆண்டு சாம்பியன்ஷ் டிராபி, 2017ம் ஆண்டு இலங்கை பயணம், 2018 தென் ஆப்பிரிக்கத் தொடர் ஆகியவற்றில் தவணின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது.

2018, பிப்ரவரி10ம் தேதி தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக தனது 100-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய தவண் சதம் அடித்தார். 100-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பேட்டராகவும் தவண் திகழ்ந்தார். 2018 ஆஸ்திரேலியத் தொடர், 2019 ஐசிசி உலகக் கோப்பை ஆகியவற்றிலும் தவணின் பேட்டிங் சிறப்பாக அமைந்தது.

ஐபிஎல் வாழ்க்கை

ஐபிஎல் டி20 தொடரில் 2008 முதல் டெல்லி டேர்டெவில்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 5 அணிகளில் இடம் பெற்று தவண் விளையாடினார்.

இதில் 2013 முதல் 2018ம் ஆண்டுவரை சன்ரைசர்ஸ் அணிக்காக தவண் ஆடினார். 2019 முதல் 2021வரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்காகவும், 2022 முதல் 2024 வரை பஞ்சாப் அணிக்காகவும் தவண் விளையாடினார். 2018ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்காக கேப்டனாக இருந்த தவண், இறுதிப்போட்டிவரை அணியை அழைத்துச் சென்றார். பைனலில் சன்ரைசர்ஸ் அணி சிஎஸ்கே அணியிடம் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் வரலாற்றிலேயே தொடர்ந்து 2 போட்டிகளில் சதம் அடித்த முதல் பேட்டர் ஷிகர் தவண் மட்டும்தான். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் அதிகமான ரன் குவித்த பேட்டர்கள் வரிசையில் விராட் கோலிக்கு அடுத்தார்போல், தவண் 222 போட்டிகளில் 6,769 ரன்கள் குவி்த்துள்ளார்.

சறுக்கிய தனிப்பட்ட வாழ்க்கை

ஷிகர் தவணின் கிரிக்கெட் வாழ்க்கை ஏற்ற, இறக்கங்கள் நிறைந்ததாக சில நேரங்களில் போராட்டம் நிறைந்ததாக இருந்தது. ஆனால், அனைத்தையும் முறியடித்து, இந்திய அணிக்குள் வெற்றிகரமான பேட்டராக வலம் வந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி அடைந்தார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆயிஷா முகர்ஜியுடன் ஷிகர் தவணுக்கு அறிமுகம் கிடைத்தது. முகர்ஜியை தவணுடன் அறிமுகம் செய்து வைத்தவர் ஹர்பஜன் சிங். தன்னைவிட 12வயது மூத்தவரான முகர்ஜியுடன் தவண் காதல் வயப்பட்டு அவரையே 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். முகர்ஜிக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் இருந்தபோதிலும் அவர்களை தன் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்தினார்.

முகர்ஜி, தவண் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் 2021ம் ஆண்டு முறைப்படி இருவரும் பிரிந்து 2023ம் ஆண்டு விவாகரத்துப் பெற்றனர். ஆனால், தனது மகனை பார்க்கவோ, பேசவோ ஆயிஷா அனுமதிக்க மறுக்கிறார் என்று தவண் சமூக வலைத்தளங்களில் வருத்தம் வேதனை தெரிவித்தார். இந்த காரணத்தால் தவண் விவாகரத்தும் பெற்றார். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சறுக்கல்தான் தவணின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரிவை ஏற்படுத்தியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)