You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தஞ்சை: பள்ளி வளாகத்துக்குள் கொல்லப்பட்ட ஆசிரியை - பணிப் பாதுகாப்பு சட்டம் கோரும் ஆசிரியர்கள்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தஞ்சையில் அரசுப் பள்ளி வளாகத்துக்குள் ஆசிரியை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதன்குமார் என்ற இளைஞரை புதன்கிழமையன்று போலீஸ் கைது செய்துள்ளது.
ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது? போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது என்ன?
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த ரமணி என்பவர், அருகில் உள்ள மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியராக ரமணிக்கு வேலை கிடைத்துள்ளது. புதன்கிழமையன்று (நவம்பர் 20) வழக்கம்போல ஆசிரியை ரமணி பள்ளிக்குச் சென்றுள்ளார்.
காலை சுமார் 10.30 மணியளவில் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் இருந்த ரமணியை, மதன்குமார் என்ற நபர் சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் தான் கொண்டு வந்திருந்த கத்தியால், ஆசிரியை ரமணியை மதன்குமார் குத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் மதன்குமாரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.
பள்ளியில் படுகாயத்துடன் விழுந்து கிடந்த ஆசிரியை ரமணியை ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
என்ன நடந்தது?
ஆசிரியை ரமணிக்கும் மதன்குமாருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்தக் கொலை நடந்ததாக, தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பள்ளி வளாகத்துக்குள் ஆய்வு நடத்திய பின் பேசிய டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக், அனைவருக்கும் தெரிந்த நபராக இருந்ததால் மதன்குமார் பள்ளிக்குள் வந்துள்ளார். காவலாளியும் அப்போது இல்லை. ஆசிரியர்களின் ஓய்வு அறையில் வைத்து இந்தக் கொலை நடந்ததாக அவர் கூறினார்.
கொலை தொடர்பாக, சேதுபாவா சத்திரம் போலீஸார் நடத்திய விசாரணையில் சில விவரங்கள் வெளிவந்துள்ளன. பத்தாம் வகுப்பு வரையில் படித்துள்ள மதன்குமார், சிங்கப்பூரில் சில ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார்.
சொந்த ஊருக்குத் திரும்பியதும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்கிறது காவல்துறை.
"கருத்து வேறுபாடு தான் காரணம்"
"ரமணியை திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோரிடம் மதன்குமார் பெண் கேட்டுள்ளனர். ஏதோ ஒரு காரணத்தால் மதன்குமாரை ஆசிரியை ரமணிக்கு பிடிக்காமல் போய்விட்டது. இதனால் மனஅழுத்தத்தில் மதன்குமார் இருந்துள்ளார்" என்கிறார், சேதுபாவா சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் துரைராஜ்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர்,'' இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது தான் கொலைக்குப் பிரதான காரணமாக இருந்துள்ளது" என்கிறார்.
ஆசிரியை ரமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஆசிரியையின் சொந்தப் பிரச்னையாக இருந்தாலும் பள்ளிக்குள் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டதை ஏற்க முடியாது" என்றார்.
மாணவியின் உடலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அஞ்சலி செலுத்திய போது ஆசிரியை ரமணியின் உறவினர்கள் கொந்தளிப்பில் இருந்துள்ளனர். "பள்ளிக்குள் இதுபோன்று நடந்தால் எங்க பிள்ளைகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?" என அமைச்சரிடம் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசுவதற்கு ஆசிரியை ரமணியின் உறவினர்கள் மறுத்துவிட்டனர்.
ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு
அதேநேரம், இந்த சம்பவம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன், "பள்ளி வளாகத்துக்குள் வெளி நபர்கள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து ஆசிரியரை முன்னாள் மாணவர்கள் தாக்கியுள்ளனர்" என்கிறார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தினந்தோறும் ஒரு தாக்குதல் சம்பவம் நடப்பதாக கூறும் அன்பழகன், "ஆசிரியர்களின் நலனுக்கு பணிப் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வரக் கோரி தொடர்ந்து போராடி வருகிறோம்" என்கிறார்.
"ஒவ்வொரு பள்ளிக்கும் பாதுகாப்புக்காக ஒரு காவலரை நியமிக்க வேண்டும். பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த வேண்டும்" என்கிறார் அன்பழகன்.
இதே கருத்தைப் பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் வலியுறுத்தியுள்ளன. இதற்குப் பதில் அளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அரசுப் பணியாளர்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கு சட்டத்துறையில் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)