You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிவதாஸ் மீனா, எஸ்.கே.பிரபாகருக்கு பதவி: ஓய்வு பெற உள்ள அதிகாரிகளுக்கு புதிய பதவி வழங்குவது சரியா?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த சிவதாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணி ஓய்வு நெருங்கும் வேளையில் புதிய பதவிகள் வழங்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தலைமைச் செயலர் மாற்றம்
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அப்போது, மத்திய அரசுப் பணியில் இருந்த சிவதாஸ் மீனா, மாநில அரசுப் பணிக்குத் திரும்பினார்.
அவரை நகராட்சி நிர்வாகத்துறையின் செயலராக தமிழக அரசு நியமித்தது. தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறையன்பு ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற்றவுடன், புதிய தலைமைச் செயலராக சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார்.
வரும் அக்டோபர் மாதத்துடன் சிவதாஸ் மீனா ஓய்வுபெற உள்ள நிலையில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, முதல்வரின் தனிச்செயலர்களில் ஒருவரான முருகானந்தம் ஐ.ஏ.எஸ்., புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான முருகானந்தம் தொழில்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நிதித்துறை என பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
டிஎன்பிஎஸ்சி-க்கு புதிய தலைவர்
கடந்த சில நாட்களாகவே, தமிழக அரசில் புதிய நியமனங்கள் அதிகரித்துள்ளன. கடந்த வாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். முன்னதாக, இவர் வருவாய் நிர்வாக ஆணையராக பதவி வகித்தார்.
இந்திய ஆட்சிப் பணிக்கு, 1989ஆம் ஆண்டில் தேர்வான எஸ்.கே.பிரபாகர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலர்களில் ஒருவராக பணியாற்றியவர். அவரின் பணி ஓய்வுக்கு 17 மாதங்கள் உள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே பதவிக்கு டி.ஜி.பி பணியில் இருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபுவைக் கொண்டு வர திமுக அரசு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், பல்வேறு கேள்விகளை எழுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
அடுத்து, தமிழ்நாடு சீருடை பணியாளர் நல வாரியத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சுனில்குமார், கடந்த 17ஆம் தேதி நியமிக்கப்பட்டார். 1988ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் இணைந்த சுனில்குமார், கடந்த 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இரண்டாம் நிலை காவலர், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர், காவல் சார் ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வை இந்த வாரியம் நடத்தி வருகிறது. இதன் தலைவராக இருந்த சீமா அகர்வால், சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவில் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
‘சமரசம் செய்யும் நிலை வரும்’
பணி ஓய்வுக்கு முன்னரே, ஒருவருக்கு புதிய பொறுப்பு வழங்குவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்கிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஆட்சிப் பணியில் சேரும்போதே எத்தனை ஆண்டுகள் வேலை பார்க்கப் போகிறோம் என்பது தெரியும். 60 வயதுக்குப் பின்னர் புதிய பணியில் சேரும்போது அரசியல்ரீதியாக சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "பணியில் இருக்கும் போதே காலியாகப் போகும் பதவிகளை எதிர்பார்த்து சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். இப்பதவிகளின் மூலம் இதர வசதிகளும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் இதுபோன்ற நியமனங்கள் குறைவுதான்.”
“சில மாநிலங்களில் ஓர் அதிகாரி ஓய்வுபெற்ற மறுநாளே புதிய பதவியை உருவாக்கிக் கொடுத்துவிடுகின்றனர். இதனால், ஆட்சிப் பணியின் மீது மதிப்பில்லாமல் போய்விடுகிறது.” என்று கூறுகிறார்.
ஆளுநர் மீதான அதிருப்தியா?
"ஓய்வு பெறப்போகும் அதிகாரிகளுக்கு சில பதவிகளை கொடுப்பதில் தவறு இல்லை. தேர்தல் ஆணைய செயலர், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் சீனியர் அதிகாரிகளின் திறமையைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இதுபோன்ற நியமனங்கள் நடக்கின்றன" என்கிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரன்.
தொடர்ந்து பேசிய பாலச்சந்திரன், "சிவதாஸ் மீனா, எஸ்.கே.பிரபாகர் ஆகியோருக்கு பணி ஓய்வுக்கு முன்னரே பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆளுநர் ஆர்.என்.ரவியின் முந்தைய செயல்பாடு காரணமாக, சட்டத்தின் வழிகளைப் பயன்படுத்தி இப்பதவிகளை மாநில அரசு நிரப்புவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்" என்றார் அவர்.
வெளிப்படைத்தன்மை அவசியம்
மேலும், “இதுபோன்ற நியமனங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம். ஒரு பணியிடத்துக்கு 10 பேர் தகுதியானவர்களாக இருந்தால் அதில் ஒருவர் பெயரை பரிசீலித்து நியமிக்கும்போது பிரச்னை வருவதற்கு வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரன்.
திமுக கூறுவது என்ன?
இது தொடர்பாக திமுகவின் அமைப்பு செயலாளரும் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி பிபிசி தமிழிடம் பேசினார்.
"நீதித்துறையில் உயர் பொறுப்பில் இருந்த ஒருவரை ஆளுநராக நியமித்துள்ளனர். சிலரை பணிக்காலம் முடிந்ததும் ராஜ்யசபா உறுப்பினராக அமர்த்தியுள்ளனர். இது குறித்து எல்லாம் யாரும் கேள்வி எழுப்புவதில்லை" என்று கூறினார்.
மேலும், "விதிமுறைகள் இருப்பதால்தான் புதிய பொறுப்புகள் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே உள்ள நடைமுறைகளின் அடிப்படைகளில்தான் பதவிகளில் நியமிக்கப்படுகின்றனர். அரசில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நியமனம் நடக்கிறது. ஜெயலலிதா ஆட்சியிலும் இதுபோல் நடந்துள்ளது" என்று அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)