ஆஸ்திரேலியா: சிட்னி படகுப் போட்டியில் வரலாறு படைத்த பூனை

    • எழுதியவர், டிஃப்பனி டர்ன்புல் மூலம்
    • பதவி, பிபிசி செய்தி, சிட்னி

செவ்வாயன்று நடைபெற்ற சிட்னி முதல் ஹோபார்ட் வரையிலான பாய்மரப் படகுப் போட்டியின் தொடக்க முனையில் நின்று கொண்டிருந்த ஆலி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

காரணம் ஆலி ஒரு பூனை.

கடந்த 1945இல் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையில் இந்தப் போட்டி தொடங்கியதில் இருந்து, அதன் வண்ணமயமான போட்டியாளர்கள் பலரும் கவனம் ஈர்த்துள்ளனர். அதில் ஊடக பிரபலம் ரூபர்ட் முர்டோக் தொடங்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவானான மைக்கேல் கிளார்க் மற்றும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் சர் எட்வர்ட் ஹீத் வரை அடங்குவர்.

ஆனால், இந்த கடுமையான படகுப் போட்டியில் பூனைகள் பங்கேற்றதாக வரலாறு எதுவும் இல்லை. புறாக்கள்கூட ஒரு காலத்தில் கரைக்குத் தகவல்களை அனுப்பவும், கடல் கிளாசிக்கின்போது தளங்களை அலங்கரிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பூனைகள்?

கிடையாது.

நாங்கள் முன்மாதிரிகளாக இருக்க முயலவில்லை என்று கூறும் ஆலியின் உரிமையாளர் பாப் வில்லியம்ஸ், சில்ஃப் VI கப்பலில் உள்ள பொருட்களின் ஒரு பகுதிதான் இந்தப் பூனை. மேலும் படகுப் போட்டியின் போது அவனை விட்டுச் செல்வது என்ற கேள்விக்கே இடமில்லை என்கிறார் அவர்.

"நான் நிறைய பைத்தியக்காரத்தனமான விஷயங்களைச் செய்திருக்கிறேன். ஆனால் அவற்றில் இது ஒன்றல்ல" என்று பந்தயத்தைத் தொடங்குவதற்கு முன் பிபிசியிடம் தெரிவித்தார் வில்லியம்ஸ்.

போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தாலும், அவர்களும் இந்தக் குழுவில்தான் உள்ளனர்.

ஆஸ்திரேலியா பாய்மரப் படகு சங்கத்தின் கூற்றுப்படி, இதுபோன்ற போட்டிகளில் விலங்குகள் தடை என்ற விதிகள் இல்லை. மேலும், கப்பல் பயணங்களில் பூனைகளுக்கு நீண்ட வரலாறு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"ரோலக்ஸ் சிட்னி ஹோபார்ட் பாய்மர படகுப் போட்டியின் சிறந்த விஷயங்களில், அதில் பங்கேற்கும் அற்புதமான நபர்கள் மற்றும் படகுகளின் பன்முகத்தன்மையும் ஒன்று," என்கிறார் கொமடோர் ஆர்தர் லேன்.

பலரின் கவனமும் 24 பேர் குழு கொண்ட வேகமாக சீறிப்பாயும் பெரிய பாய்மரப் படகுகளின் மீது இருக்கும்போது, பாக்ஸிங் டே பந்தயத்தில் பங்கேற்கும் 1960இல் உருவாக்கப்பட்ட 12 மீட்டர் (40அடி) சில்ஃப் படகு, சிறிய படகுகள் கொண்ட இருவர் பிரிவில் போட்டியிடும்.

“இதை நாங்கள் இரு கைகள் மற்றும் நான்கு பாதங்கள் கொண்ட பிரிவு என நகைச்சுவையாகச் சொல்வோம்” என்று வில்லியம்ஸ் கூறினார்.

பல தசாப்தங்களாக சிட்னியில் இருந்து ஹோபார்ட் வரையிலான ஆறு பந்தயங்களில் சில்ஃப் பங்கேற்றிருந்தாலும், அதனுடன் பந்தயத்தில் போட்டியிடுவது வில்லியம்ஸுக்கு இதுவே முதல் முறை. இருப்பினும், அவருக்கும் ஆலிக்கும் கடலில் அனுபவம் அதிகம்.

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான வில்லியம்ஸ், தனது வாழ்நாளில் பெரும்பாலும் படகில் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார். அதில் பெரும்பகுதி பூனையையே தனது வழித்துணையாக அழைத்துச் சென்றுள்ளார் அவர்.

தற்போது பத்து வயதாகும் ஆலி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம்ஸுடன் இணைந்துள்ளது. அதற்குப் பின் மிக விரைவிலேயே கடலில் பயணிக்கவும் கற்றுக் கொண்டுள்ளது.

"ஆரம்பத்தில் ஆலி கொஞ்சம் தடுமாறியது. அதற்கு கடல் ஒவ்வாமை ஏற்பட்டது. ஆனால் விரைவிலேயே பழகிவிட்டது. தற்போது தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறது," என்று கூறுகிறார் வில்லியம்ஸ்.

இந்தப் பூனை பொதுவாக கத்தி கொண்டிருப்பது அல்லது காக்பிட்டில் படுத்து உறங்கும் வேலைகளை மட்டுமே செய்து கொண்டிருக்கும்.

“இது மிகவும் உணர்திறன் மிக்கது. எப்போதெல்லாம் அது கோபமடைகிறதோ அப்போதெல்லாம் மறைவாக ஓரிடத்தைத் தேடி அங்கு சௌகரியமான இடத்தில் படுத்துக்கொள்ளும்.”

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் 630 நாட்டிக்கல் மைல் என்பது கடுமையானதாக, மிகவும் மோசமான நிலையில் இருந்தது. 1998 பந்தயத்தின்போது ஏற்பட்ட கடும் புயலால் ஐந்து படகுகள் மூழ்கிவிட்டன. ஆறு மாலுமிகளும்கூட இறந்துவிட்டனர்.

இந்த ஆண்டு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, கடுமையான காற்று மற்றும் ஒருவேளை ஆலங்கட்டி மழை ஏற்படலாம் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். நல்ல வேளை நான் இன்னும் இந்தக் கடலில் பூனையை இழக்கவில்லை என்று கிண்டலாக கூறினார் வில்லியம்ஸ்.

சட்டென்று தீவிரமாகப் பேசிய அவர், தான் எந்த அவசர நிலைக்கும் தயாராக இருப்பதாகவும் உறுதியாகக் கூறினார்.

"வழக்கமாக பூனைக்காக, ஒரு துண்டு அல்லது கைக்கு அடக்கமான தடிமனான கயிறு போன்றவை கையில் இருக்கும். எனவே அதைப் பிடித்து அவற்றால் கப்பலில் ஏறி விட முடியும்.”

ஆலிக்கு லைஃப் ஜாக்கெட் இல்லை. ஏனெனில் அது அதை அணியாது "அது ஒரு ஹௌடினி. அதற்குப் பிடிக்காத எதிலிருந்தும், அது தப்பித்து விடும்," என்று கூறுகிறார் வில்லியம்ஸ்.

பூனைகள் தண்ணீரை வெறுத்தாலும், ஆலியால் நீந்த முடியும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஒருமுறை நாய் ஒன்றைத் தவிர்ப்பதற்காக அதைக் கடலுக்குள் தள்ளிவிட்டார்.

சில்ஃபும் அதை ஓட்டுபவர்களும் எச்சரிக்கையுடன் விளையாடி, ஒப்பீட்டளவில் மெதுவான வேகத்திலேயே ஹோபார்ட்டுக்கு பயணிக்கிறார்கள்.

இதுவரை நிகழ்த்தப்பட்ட அதிவேக சாதனைகளிலேயே, 2017ஆம் ஆண்டு 33 மணிநேரத்தில் இலக்கை அடைந்ததே அதிவேக சாதனையாகும். இருப்பினும், இது வேகத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட பெரிய, நவீன பாய்மரப் படகு மூலம் நிகழ்த்தப்பட்டதாகும்.

"சில்ஃப் ஒரு பழைய மற்றும் மெதுவான படகு. அதன் இலக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்குச் சரியான நேரத்தில் ஹோபார்ட் செல்வதே ஆகும்."

அங்கு அவர்கள் திருவிழா நாளை ரம் குடித்துக் கொண்டாடுவார்கள், ஆலிக்கு கொஞ்சம் பாலும் கிடைக்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)