காணொளி: சீனா பல ஆண்டு காலம் வளர்த்தெடுத்த உறவை, சில மணிநேரங்களில் மாற்றிய டிரம்ப்
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு இரவு சோதனையில் கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான், சீனாவின் மூத்த தூதர்களுடனான சந்திப்பில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை "ஒரு மூத்த சகோதரர்" என்றும், "உலகிற்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியை வழங்கும் தலைவர்" என்றும் அவர் புகழ்ந்து கொண்டிருந்தார்.
எண்ணெய் வளம் மிக்க வெனிசுவேலாவில் சீனா பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது.
தென் அமெரிக்காவில் சீனாவின் நெருங்கிய கூட்டாளிகளில் வெனிசுவேலாவும் ஒன்று. எனவே, வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் சீனாவை எந்தளவு பாதிக்கக்கூடும்? இந்த காணொளியில் பார்க்கலாம்.
ஒரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கு எதிராக அமெரிக்கா எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையை உலக நாடுகளுடன் சேர்ந்து சீனாவும் கண்டித்தது.
அமெரிக்கா ஒரு "உலக நீதிபதியை " போல செயல்படுவதாக சீனா குற்றஞ்சாட்டியது. அமெரிக்கா – சீனா இடையிலான யார் வல்லரசு என்ற போட்டி முற்றிலும் எதிர்பாராத புதிய திசையில் திரும்பியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் பெய்ஜிங் மிகவும் கவனமாக திட்டமிட்டு வருகிறது.
வெனிசுவேலா எண்ணெய் வளங்களை குறிவைத்து டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் , அமெரிக்காவின் நோக்கங்கள் குறித்து சீனாவுக்கிருந்த ஆழ்ந்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியிருக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமையன்று என்பிசி ஊடகத்துக்கு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அளித்த பேட்டியில் ,
"இது மேற்கு அரைக்கோளம். இங்கு தான் நாங்கள் வாழ்கிறோம். அமெரிக்காவின் எதிரிகளுக்கோ, போட்டியாளர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ இந்த மேற்கு அரைக்கோளம் ஒரு செயல்பாட்டுத் தளமாக இருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்று தெரிவித்தார்.
இதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேறுங்கள் என சீனாவிற்கான செய்தியை அமெரிக்கா சொல்லி இருக்கிறது. ஆனால் சீனா இதனை கேட்க வாய்ப்பில்லை அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கக்கூடும்.
சீனா - வெனிசுவேலா உறவு
2000 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில், ரயில்வே, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்க வெனிசுவேலாவிற்கு சீனா 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வழங்கியது.
இதற்குப் பதிலாக, அதன் செழிப்பான பொருளாதாரத்திற்குத் தேவையான எண்ணெயை சீனா வெனிசுவேலாவிடமிருந்து பெற்றுக்கொண்டது.
கடந்த ஆண்டில் மட்டும் வெனிசுவேலாவின் 80% எண்ணெய் சீனாவிற்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், இது சீனாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் வெறும் 4% மட்டுமேயாகும் .
'தி சீனா-குளோபல் சவுத்' திட்டத்தின் முதன்மை ஆசிரியர் எரிக் ஓலண்டர் இந்த விவகாரம் குறித்து பேசும்போது, சிஎன்பிசி மற்றும் சினோபெக் போன்ற சீன நிறுவனங்கள் அங்குள்ள மிகப்பெரிய முதலீட்டாளர்கள். அமெரிக்காவின் வழிகாட்டுதலின் பேரில் அந்தச் சொத்துக்கள் வெனிசுவேலாவால் தேசியமயமாக்கப்படலாம் அல்லது அங்கிருக்கும் குழப்பமான சூழலில் அவை ஓரங்கட்டப்படலாம் என்ற அபாயம் உள்ளது." என்கிறார்.
தென் அமெரிக்கா முழுவதும் உள்ள பிற நாடுகள், "தேவையில்லாமல் அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்துவிடுவோமோ" என்ற அச்சத்தில் பெரிய சீன முதலீடுகளைப் பற்றி கவலைப்படத் தொடங்குவதுதான் சீனாவிற்கான உண்மையான கவலை" என்றும் ஓலண்டர் கூறுகிறார்.
தென் அமெரிக்கா பிராந்தியம் சீனாவிற்கு உணவு, எரிசக்தி மற்றும் இயற்கை வளங்களின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இப்பிராந்தியத்துடனான இருவழி வர்த்தகம் இப்போது அரை டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
பனாமா கால்வாய் தொடர்பான அனைத்து சீனத் துறைமுகப் பங்குகள் மற்றும் முதலீடுகளை பனாமா அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்கா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
இது "நிச்சயமாக சீனாவிற்கு கவலை அளிக்கும் விஷயம்" என்றும் அவர் கூறுகிறார்.
தைவான் - வெனிசுவேலா ஒப்பீடு
தன்னாட்சி பெற்ற தீவான தைவானை சீனாவில் இருந்து பிரிந்து சென்ற மாகாணமாகக் பெய்ஜிங் கருதுகிறது. தைவான் ஒரு நாள் சீனாவுடன் "மீண்டும் இணைக்கப்படும்" என்று ஷி ஜின்பிங் உறுதிபட கூறியுள்ளார்.
தைவான் ஒரு நாள் சீனாவுடன் "மீண்டும் இணைக்கப்படும்" என்று ஷி ஜின்பிங் உறுதி அளித்துள்ளார், மேலும் இதை அடைவதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியதையும் அவர் நிராகரிக்கவில்லை.
இதனால் சீன சமூக ஊடகங்களில் உள்ள சில தேசியவாதிகள் ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள்.
"அமெரிக்காவால் வெனிசுவேலாவில் தன்னிச்சையாகச் செயல்பட முடியுமென்றால், தைவான் அதிபரைக் கைது செய்வதிலிருந்து சீனாவைத் தடுப்பது எது?"என்பது தான் அந்தக் கேள்வி.
முதலாவதாக, இந்த இரண்டு சூழல்களையும் சீனா ஒன்றாகப் பார்க்காது.
ஏனெனில் அது தைவானைத் தனது உள்நாட்டு விஷயமாகக் கருதுகிறதே தவிர, சர்வதேச ஒழுங்குமுறைக்கு உட்பட்ட ஒன்றாகக் கருதவில்லை.
ஆனால் அதைவிட முக்கியமானது, ஷி ஜின்பிங் அந்தத் தீவின் மீது படையெடுக்கத் தீர்மானித்தால், அது அமெரிக்கா ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக இருக்காது என்கிறார் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலைச் (CFR) சேர்ந்த டேவிட் சாக்ஸ்.
"ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான இழப்போடு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை" சீனாவிடம் கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அந்த நாள் வரும் வரை, தைவான் மக்களைத் தனது பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வரும் நோக்கத்தோடு, அவர்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் உத்தியையே சீனா தொடரும். வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் இந்த நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. என்கிறார் டேவிட் சாக்ஸ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



