You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒயின் தயாரிப்பில் இந்தியாவால் ஏன் உலக அங்கீகாரம் பெற முடியாது தெரியுமா?
- எழுதியவர், பிரதி குப்தா, பென் மோரிஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
ஒயின் அருந்தும் பழக்கம் இல்லாத மற்றும் திராட்சை சாகுபடிக்கு உகந்த சூழல் இல்லாத நாட்டில் ஒயின் தொழில் வளர்ச்சியடைய என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் சிலர், திராட்சை சாகுபடி காலத்தை மாற்றுவது, திராட்சைக்குப் பதிலாக கிவிப் பழத்தைப் பயன்படுத்துவது மற்றும் ஒயினை டின்களில் நிரப்பி விற்பனை செய்வது உட்பட பல தீர்வுகளை இதற்கு உருவாக்கியுள்ளனர்.
"1997ஆம் ஆண்டு நாங்கள் ஒயின் தயாரிக்கத் தொடங்கியபோது, இங்கு யாருக்கும் ஒயினைப் பற்றி அதிகம் தெரியாது" என்கிறார் சூலா வினியார்ட்ஸ் நிறுவனர் ராஜீவ் சமந்த்.
“இந்தியாவில் மதுக்கடைகள் ஒயின்ஷாப் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது நம் நாட்டில் ஒயினை மதுவாக பலர் கருதுகிறார்கள்” என்றும் அவர் கூறுகிறார்.
இது வெறும் அடையாள பிரச்னை மட்டுமல்ல. சுலா ஒயினை மக்களிடம் கொண்டு சேர்க்க அவர் பல தடைகளை கடக்க வேண்டியிருந்தது.
திராட்சையிலிருந்து ஒயின் தயாரிப்பதற்கான அரசு உரிமம் பெற ராஜீவ் சமந்திற்கு இரண்டு வருடங்கள் ஆனது. அதன் பிறகு மது பிரியர்களை அவர் கவர வேண்டியிருந்தது. உண்மையில், அந்தக் காலகட்டத்தில் மக்கள் ஒயின் மீது பெரிய ஆர்வம் காட்டவில்லை.
இந்திய காலநிலை
வானிலையும் ஒயின் தயாரிப்புக்கு இடையூறாக இருந்தது. சுலா நிறுவனத்தின் பிரதான உற்பத்தி மையம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அமைந்துள்ளது. இது புவியியல் ரீதியாக வெப்ப மண்டலப் பகுதி. இங்கு மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் வெப்பநிலை 40 டிகிரி சென்டிகிரேட் வரை இருக்கும்.
"காலநிலை எப்போதும் சவாலாகவே உள்ளது. அந்த சவால் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்" என்கிறார் ராஜீவ் சமந்த்.
உலகின் மற்ற ஒயின் தயாரிக்கும் பகுதிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பருவகாலத்தில் திராட்சைகளை இவர்கள் வளர்க்கத் தொடங்கினர். அதாவது குளிர்கால தொடக்கத்தில் திராட்சை பயிரிடப்பட்டு, குளிர்கால முடிவில் அறுவடை செய்யப்படும்.
இந்தச் சிக்கலை தீர்க்க தொழில்நுட்பமும் ஓரளவிற்கு உதவியது. துருப்பிடிக்காத எஃகு கலன்களில் ஒயினை குளிரூட்டுவதற்கான முயற்சியை இந்தியாவில் முதன்முறையாக எடுத்தது இவர்கள்தான்.
"ஒரு நல்ல வெப்பமண்டல ஒயின் தயாரிக்க, அதை உறைந்த வெப்பநிலையில் சேமிக்க வேண்டும். இதற்கு மிகவும் செலவாகும். ஆனால், ஒயினின் தரம் அதிகரிக்கும்" என்கிறார் ராஜீவ் சமந்த்.
எனினும், இந்த முயற்சி அவர்களுக்கு வெற்றியைத் தந்தது. இன்று, சுலாவில் சுமார் 1000 பணியாளர்கள் உள்ளனர். அந்நிறுவனத்தின் ஆண்டு விற்பனை ரூ.500 கோடி வரை உள்ளது.
சமீபத்தில் அந்நிறுவனம் பங்குச்சந்தையில் அதன் பங்குகளை வெளியிட்டது. அதன் மூலம் சுமார் 1000 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.
சுலாவின் திராட்சைத் தோட்டத்தைப் பார்க்க ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் நாசிக்கிற்கு வருகிறார்கள்.
தற்போது இந்தியாவில் சுமார் 110 ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஒயினுடன் பழ ஒயினும் தயாரிக்கப்படுகிறது.
வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு
2006ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த சிஸ்ஸி பிரதர்ஸ், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மொஹித் பாட்டீல் பிரதர்ஸ் (அர்ஜுன், ரஞ்சித்) மற்றும் டெல்லியைச் சேர்ந்த செக்ரி பிரதர்ஸ் (கபில், கௌரவ்) ஆகியோர் இணைந்து ஃப்ராடெல்லி ஒயின்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
“இந்தியாவில் ஒயின் தயாரிப்பில் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றவில்லை. இது மிகவும் புதிய பாணி. நாங்கள் நிறைய பரீட்சார்த்த முயற்சிகள் செய்கிறோம். தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கிறது” என்கிறார் ஃப்ராடெல்லி ஒயின்ஸைச் சேர்ந்த ஜெயந்த் பாரதி.
நாங்கள் டின்களில் வழங்கிவரும் புதிய ஒயின் இளைஞர்களை கவர ஒரு வாய்ப்பாக உள்ளது என்று கூறும் அவர், இதுபோன்ற புதுமைகள் வெற்றி பெறும் என்கிறார்.
"நாட்டில் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. ஒயின் அருந்துவது கலாசாரத்தின் ஒரு பகுதியாகி வருகிறது. மறுபுறம், ஒயினின் தரமும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் உலக ஒயின் வரைபடத்தில் இந்தியாவுக்கு விரைவில் சிறப்பு அங்கீகாரம் கிடைக்கும்" என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் திராட்சைக்கு ஏற்ற காலநிலை இல்லாததால், மற்ற பழங்களில் இருந்து ஒயின் தயாரிப்பதில் சில நிறுவனங்கள் கவனம் செலுத்திவருகின்றன.
தீர்வுகள்
அருணாச்சல பிரதேசத்தின் தட்பவெப்பநிலை கிவி, பேரிக்காய் மற்றும் பிளம்ஸ் பழங்களுக்கு ஏற்றது. ஆனால், அங்கு சந்தைப்படுத்துதல், வெளி இடங்களுக்கு அனுப்புவதற்கான போக்குவரத்து வசதி மற்றும் சேமிப்பு வசதிகள் இல்லாததால் பெரும்பாலான பழங்கள் சேதமடைகின்றன.
2017ஆம் ஆண்டு இந்தச் சிக்கலை தீர்க்க முடிவு செய்த டேஜ் ரீட்டா, கிவி பழத்தில் இருந்து ஒயின் தயாரிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அருணாச்சல பிரதேச பள்ளத்தாக்கில் கிவி பரவலாக வளர்க்கப்படுகிறது.
நாரா ஆபா என்ற பெயரில் சந்தையில் கிடைக்கும் கிவி ஒயினில் 13 சதவிகிதம் வரை ஆல்கஹால் உள்ளது. இது இந்தியாவின் முதல் இயற்கையான கிவி ஒயின் ஆகும்.
“இங்குள்ள விவசாயிகளிடம் இருந்து கிவி பழங்களைச் சேகரிப்பது விவசாயத்தை ஊக்குவிக்கும். இவற்றைக் கொண்டு ஒயின் தயாரிக்கும் போது கிவியின் உடலுக்கு நன்மை பயக்கும் பண்புகள், ஒயினிலும் கிடைக்கும். இங்கு ஒயின் தயாரிப்பதால் உள்ளூர் பொருளாதாரம் பயனடையும்” என்கிறார் ரீட்டா.
திராட்சையைப் போலவே கிவிகளும் வளர்க்கப்படுகின்றன. நன்கு பழுத்த பழங்களிலிருந்து சாறு எடுக்கப்பட்டு, புளிக்கவைக்கப்படுகிறது. அதன் பிறகு, ஒயின் உருவாக சுமார் மூன்று மாதங்கள் ஆகும். சில ஒயின்கள் கூடுதலாக நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு புளிக்கவைக்கப்படுகின்றன.
நாரா ஆபா ஓர் ஆண்டுக்கு சுமார் 50,000 பாட்டில்கள் ஒயின் உற்பத்தி செய்கிறார்.
“சமூகத்தில் ஒரு காலத்தில் ஒயின் தயாரிப்பில் காணப்பட்ட மரபுகளும், அர்ப்பணிப்பும் மெல்ல மறைந்து வருகின்றன” என்கிறார் இந்தியன் ஒயின் அகாடமியின் நிறுவனர் சுபாஷ் அரோரா.
“எனினும், ஒயின் விஷயத்தில் உலகளாவிய அங்கீகாரம் பெறுவது சற்று கடினம். ஏனெனில் இங்கு வானிலை சாதகமாக இல்லை. எனவே சிறந்த ஒயினை இங்கு தயாரிக்க முடியாமல் போகலாம். ஆனால் இங்கு தயாரிக்கப்படும் ஒயினும் மக்களுக்கு பிடிக்கும்’’ என்கிறார் சுபாஷ் அரோரா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்